Header Ads



ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்ஸ்

கறுப்பு நிற ஆடையை அணிந்திருந்த,வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,  கடந்த வாரம் அமெரிக்க வான்படையினரின் சி-130 போக்குவரத்து விமானத்திலிருந்து பலாலி விமான நிலையத்தில்  இறங்கிய காட்சியானது, Living Daylights என்கின்ற திரைப்படத்தில் ஜேம்ஸ் பொன்ட் 007 கதாபாத்திரத்திற்காக நடித்த ரிமோதி டல்ரன் என்பவர் சி-130 சரக்கு விமானத்திலிருந்து குதித்த காட்சியை நினைவுபடுத்தியது.

அமெரிக்க மற்றும் சிறிலங்கா வான்படையினர் இணைந்து நடத்திய ‘ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்ஸ்’ என்கின்ற மனிதாபிமான உதவி நடவடிக்கையின் ஒரு பகுதியாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேசப், தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் அமெரிக்க விமானப் படையினரின் விமானத்தில் கட்டுநாயக்காவிலிருந்து பலாலிக்குப் பயணம் செய்திருந்தனர்.

ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்ஸ் யாழ்ப்பாணம் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் 19ம் நூற்றாண்டில் நிலவிய வரலாற்று சார் உறவை மீளவும் கட்டியெழுப்புவதாக அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேசப் தனது ஆரம்ப உரையில் தெரிவித்திருந்தார்.

1813ல் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கத்தோலிக்க மதம் பரப்பப்பட்ட காலப்பகுதி தொடக்கம் அமெரிக்காவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் தொடர்பு பேணப்படுவதாகவும் 2015 ஜனவரியில் சிறிலங்காவில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பெடுத்த பின்னர் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவிற்குப் பயணம் செய்ததாகவும் இவ்வாறான ஒரு வரலாற்று சார் தொடர்பு இவ்விரு நாடுகளுக்கும் இடையில் பேணப்படுவதாகவும் அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேசப் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

ஒப்பரேசன் லொஸ் ஏஞ்சல்சின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்துடனான அமெரிக்காவின் வரலாற்று சார் தொடர்பைச் சுட்டிக்காட்டிய  அதேவேளையில், யாழ்ப்பாணத்திலுள்ள வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கப்பல் கட்டுனர்கள் 1936ல் தமது ஊரிலிருந்து அமெரிக்காவிலுள்ள கிளொஸ்ரன் என்கின்ற இடத்திற்கு கப்பலில் பயணித்ததன் மூலம் இந்த வரலாற்றுத் தொடர்பை மேலும் பலமாக்கியுள்ளனர் என அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டார்.

வல்வெட்டித்துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறப்பிடமாக உள்ளதால் கடந்த மூன்று பத்தாண்டுகளாக இது மிகவும் பிரபலம் பெற்ற ஒன்றாக அமைந்துள்ளது. ஆனால் கீழைத்தேய நாடுகளிலிருந்து அரபு நாடுகளுக்கு வெல்வெட் என்கின்ற பட்டுத் துணி வர்த்தகத்தை கப்பல் மூலம் மேற்கொள்வதற்கு மையமாக இருந்த கிராமமே பின்னர் வல்வெட்டித்துறை என்கின்ற பெயரைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

வல்வெட்டித்துறை கப்பல் கட்டுனர்களால் கட்டப்பட்ட ‘அன்னபூரணி அம்மாள்’ என்கின்ற கப்பலை அமெரிக்க செல்வந்தரான அல்பேற் றொபின்சன் 1936ல் கொள்வனவு செய்திருந்தார். அத்துடன் இவர் இந்தக் கப்பல் கட்டுமாணத்தில் ஈடுபட்ட ஆறு பேருடன் வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவிற்குக் கடற்பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்தக் கப்பலானது ஏழு மாக்கடல்களையும் கடந்து பயணித்ததால் இது மிகவும் ஆபத்தான பயணமாக அமைந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு இரண்டு ஆண்டுகளின் பின்னர் அதாவது 1938ல், வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பலானது அமெரிக்காவின் கிளொஸ்ரன் என்கின்ற இடத்தைச் சென்றடைந்ததாகவும் இதன் மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் கடல்சார் விடயங்களில் வல்லுனர்களாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அமெரிக்கப் பொறியியலாளர் கடத்தப்பட்டமை:

ஈபிஆர்எல்எவ் என அழைக்கப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் 1984 மே மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த பொறியியலாளரான ஸ்ரான்லி அலன் (35) மற்றும் அவருடைய மனைவி மேரி (29) ஆகியோர் கடத்தப்பட்டமையானது அமெரிக்காவிற்கு ஒரு கசப்பான அனுபவமாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் நீர்த் திட்டத்திற்கான பொறியியலாளராகப் பணியாற்றிய ஸ்ரான்லி அலன் கடத்தல் சம்பவமானது தற்போது சிறிலங்கா அரசியலில் மிக முக்கிய பிரமுகராக உள்ள டக்ளஸ் தேவானந்தா தலைமை தாங்கிய ஈபிஆர்எல்எவ்வின்  இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படையினாலேயே முன்னெடுக்கப்பட்டது. கடத்தப்பட்ட அலன் மற்றும் அவருடைய மனைவி மேரி ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டுமாயின் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த தமது  20 போராளிகளை விடுவிக்க வேண்டும் எனவும் மேலும் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் கப்பமாகச் செலுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அக்காலப்பகுதியில் அமெரிக்காவின் அதிபராக இருந்த றொனால்ட் றீகன் மற்றும் அமெரிக்க அரசாங்கமும் இணைந்து அலன் தம்பதிகள் விடுவிக்கப்படுவதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியை  நாடின. இந்தியாவின் பயிற்சி முகாம்களில் பயிற்சிகளில் ஈடுபட்ட தமிழ்ப் போராளிகளை  இந்தியா கையாண்டமையாலேயே அமெரிக்கா இந்தியாவிடம் உதவி கோரியது.

இந்தியாவின் அழுத்தம் காரணமாக,  கடத்தப்பட்ட  ஐந்து நாட்களின் பின்னர் அமெரிக்கத் தம்பதிகளை விடுவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஈபிஆர்எல்எவ் தள்ளப்பட்டது. இவர்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பலாலி விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுப் பின்னர் அமெரிக்காவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டனர்.

அமெரிக்கத் தம்பதிகள் மூன்று பத்தாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கடத்தப்பட்டபோது, இத்தம்பதிகளைக் காப்பாற்றுவதற்காக, உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் பலஸ்தீன போராளிகளால் கடத்தப்பட்டு பயணக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்களை மீட்க, இஸ்ரேலிய கொமாண்டோக்கள் நடத்தியது போன்று,  அமெரிக்காவும் இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும் என யாழ் குடாநாட்டு மக்கள் மிகத் தீவிரமாக எதிர்பார்த்தனர்.

ஆனாலும் மூன்று பத்தாண்டுகளுக்குப் பின்னர் தற்போது தான் அமெரிக்க விமானப் படையினரின் சி-130 போக்குவரத்து விமானமானது வட மாகாண முதலமைச்சரை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியுள்ளது. ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்ஸ் என்கின்ற பெயரில் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அமெரிக்க விமானம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பலாலியில் வந்திறங்கிய அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் மற்றும் ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்ஸ் வீரர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் யாழ் மாவட்டத்தின் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண உறுப்பினர்கள் வரவேற்றனர்.

வடக்கிலுள்ள மக்கள் அமெரிக்காவுடன் கல்வி சார் வரலாற்றுத் தொடர்புகளைப் பேணுவதை விரும்புவதாகவும் அமெரிக்கத் தூதுவரிடம் வடக்கு மாகாண உறுப்பினர்கள் தெரிவித்தனர். அத்துடன் ஒக்ரோபர் 205ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காத்திரமான மற்றும் பயனுள்ள வகையில் அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் இதன்மூலம் இலங்கைத் தீவில் அமைதி மற்றும் மீளிணக்கம் எட்டப்படும் எனவும் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவிக்கப்பட்டது.

வழிமூலம்       – சிலோன் ருடே ஆங்கிலத்தில்  – Manekshaw மொழியாக்கம் – நித்தியபாரதி

No comments

Powered by Blogger.