Header Ads



ஊக்கம் தரும், ஓர் உண்மை வரலாறு..!


இவர் பெயர் கரோலி டக்கா(க்)ஸ். Karoly Takacs.

புடாபெஸ்டில் பிறந்தவர். ஹங்கேரி ராணுவத்தில் சார்ஜெண்டாக பணியாற்றிவந்தார். 

பிஸ்டல் ஷூட்டிங்கில், இவர் அத்தனை பிரபலம். ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பிஸ்டல் ஷூட்டிங்கில் மெடல் வெல்வதே லட்சியமாக வைத்திருந்தார்.

உலகத் தரம் வாய்ந்த பிஸ்டல் ஷூட்டராக இருந்த இவர், 1936ல் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியவில்லை. சார்ஜெண்ட்கள் கலந்து கொள்ளக்கூடாது என்ற விதி காரணமாக பங்கேற்க இயலவில்லை. அதன்பிறகு அந்த விதி தளர்த்தப்பட்டது. 1940ல் டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் முனைப்புடன் தீவிர பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.

ஆனால்....  

1938.. ஒரு ராணுவப் பயிற்சியின்போது, வெடிகுண்டு வெடித்து இவரது வலதுகை பறிபோகிறது.

ஒரு மாதம் மருத்துவமனையில். பேரிழப்பு. வெளியே வருகிறார். அதன்பிறகு சிலகாலம் யார் கண்ணிலும் படவில்லை.

1939. ஹங்கேரியன் நேஷனல் பிஸ்டல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் இடத்துக்குச் செல்கிறார். நண்பர்கள் அனைவரும் கட்டியணைத்துக் கொள்கின்றனர். வலது கை இழந்ததற்கு வருத்தத்தையும், வாழ்த்த வந்ததற்கு நன்றியையும் சொல்லிக் கொண்டிருந்தனர் நண்பர்கள். இவர் தீர்க்கமான குரலில் சொல்கிறார். 

நான் வாழ்த்த வரவில்லை. உங்களோடு போட்டிபோட வந்தேன்!

அப்போதுதான் அவர்களுக்குத் தெரிகிறது. யாருக்கும் தெரியாமல்.. வருடம் முழுவதும் இடதுகையில் ஷூட் செய்யப் பயிற்சி செய்துகொண்டிருந்திருக்கிறார் என்பது.

நடக்கிறது போட்டி. இடது கையால் ஷூட் செய்து போட்டியிடுகிறார் கரோலி. வெற்றி பெறுகிறார். ஆம்..  இழந்த கையைப் பற்றி மறந்து.. இருந்த கையால் பயிற்சி பெற்று அந்த சாம்பியன்ஷிப்பை வென்றார்.

ஒலிம்பிக் கனவு? அதை அணையாமல் அப்படியே வைத்திருந்தார். 1940 ஒலிம்பிக்கில் போட்டியிட நினைக்கிறார்.

மறுபடி ஒரு தடை.. ஆம்..

இரண்டாம் உலகப்போர் காரணமாக 1940 ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை. தளரவில்லை. 1944ல் நடைபெறும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வோம் என்று பயிற்சியைத் தொடர்கிறார். ம்ஹும். 1944 ஒலிம்பிக்கும் நடைபெறவில்லை.

அடுத்த ஒலிம்பிக் 1948தான்.

1938, தனக்கு 28 வயதிருக்கும்போது ஆரம்பித்த கனவு. 1948-ல் 38 வயது. புதிய புதிய போட்டியாளர்கள். இளம் போட்டியாளர்கள். என்ன செய்யலாம் என்ற கேள்வியே இல்லை கரோலிக்கு. அடுத்த நான்கு வருடங்களும் விடாமல் பயிற்சி மேற்கொள்கிறார். வருகிற இளைஞர்களுக்குத் தான் எந்த விதத்திலும் குறைந்துவிடக்கூடாது என்று முனைப்போடு பயிற்சி மேற்கொள்கிறார்.

1948 ஒலிம்பிக் லண்டனில் நடைபெறுகிறது. 

உலகின் மிகச்சிறந்த வீரர்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்தப் போட்டியில், ஒரே கை.. அதுவும் இடது கையால் ஷூட்டிங் செய்கிறார் கரோலி டக்காக்ஸ். அந்தப்போட்டியில் அர்ஜெண்டினாவின் கார்லோஸ் என்ரிக்யூவும் களத்தில் இருக்கிறார். கார்லோஸ் உலக நம்பர் ஒன் சாம்பியன்.  கார்லோஸை இவரால் ஜெயிப்பது கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  போட்டி முடிகிறது. வெற்றியாளரை அறிவிக்கிறார்கள். 

ஆம். புள்ளிப்பட்டியலில் முதலிடம். கரோலி 25 மீட்டர் ராபிட் ஃபயர் பிஸ்டல் ஷூட்டில் வெல்கிறார். தங்கம்!

உலகே திரும்பிப் பார்க்கிறது. அதோடும் விடவில்லை. அவர்.. அடுத்த 1952-ல் ஃபின்லாந்தின் ஹெல்சின்கியில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் கலந்து கொள்கிறார். போட்டி போடுகிறார். தங்கம் வெல்கிறார். ஆம்.. தங்கம்!!

தொடர்ந்து அந்தப் பிரிவில் இரண்டு முறை தங்கம் வென்றவர் என்ற சாதனையைச் செய்கிறார் கரோலி.

அதற்குப்பிறகும் பல போட்டிகளில் கலந்து கொள்கிறார்.

இப்ப சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்... என்னால இது முடியல.. அது முடியல-ன்னு... உங்களுக்கு எதாவது புகார்கள் இருக்கிறதா?

3 comments:

  1. Wish & work hard.. I can do.. You Can do... We all can do..

    ReplyDelete
  2. முன்னாள் போராளிகள் என்று அறியப்படுபவர்களுக்கும் இதில் நல்ல படிப்பினை உள்ளது.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் இறைவன் அருள் வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.