Header Ads



படிப்பினைத் தரும், யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம்

கோபம் என்றதும் திருக்குர்ஆனைப் புரட்டக் கூடியவர்களுக்கு யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சம்பவம் நினைவுக்கு வரும்.

யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாயத்து மக்கள் சத்தியத்தை ஏற்க மறுத்து இறுதியாக அவர்கள்
அழிக்கப்படும் நேரம் நெருங்கியதும் அவர்களை விட்டு யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விலகிச் சென்று விடுகிறார்கள்.

சிறிது நாட்கள் கழிந்து நகருக்குள் திரும்பிவந்து பார்த்தபொழுது அவர்களில் யாரும் அழிக்கப்படாததுக் கண்டு இறைவன் மீது கோபம் ஏற்பட்டுவிடுகிறது, யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு. இறைவன் நல்லதொரு முடிவையே மேற்கொண்டிருப்பான் என்று அவர்களை நிதானமாக சிந்திக்க விடாமல் கோபம் தடுக்கிறது.

கோபம் கொப்பளிக்க நடையைக் கட்டுகிறார்கள் கடல் குறுக்கிடுகிறது கடலைக் கண்டப் பிறகும் கூட ஊரை நோக்கித் திரும்ப விடாமல் கோபம் தடுக்கிறது.

இனி இந்த மக்களுடைய முகத்தில் விழிப்பதை விட இவர்களின் கண் காணாத திசைக்கு சென்று விடலாம் என்ற எண்ணத்தையே கோபம் மேலோங்கச் செய்கிறது.

எதிரில் கப்பல் ஒன்று தென்பட கால்களை கோபம் தண்ணீரில் இறக்கி விடுகிறது. தண்ணீரில் இறங்கி நின்று கொண்டிருந்த யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீந்திச்சென்று எதிரில் நின்று கொண்டிருந்த கப்பலைப் பிடிக்கிறார்கள் ஆனால் கப்பலில் இருந்தவர்களோ அவரை ஏறவிடாமல் தடுக்கின்றனர்.

இவரை ஏற்றிக் கொள்ளலாமா? வேண்டாமா? எனும் எண்ணத்தை அல்லாஹ் அவர்களுடைய உள்ளத்தில் விதைத்து விடுகிறான் இறைவனின் மீது கோபம் கொண்ட இறைத்தூதரின் பயணம் இது என்பதால் இறையருள் தடுக்கப்பட்டு விடுகிறது.

குழப்பத்தில் ஆழந்த பயணக்காரர்கள் இறுதியாக சீட்டுக் குலுக்கிப் போட்டு அனுமதி கிடைத்தால் ஏற்றிக் கொள்வோம் எனும் முடிவுக்கு வர சீட்டும் குலுக்கப்படுகிறது. அனுமதி மறுக்கப்பட்டு ஏற்ற வேண்டாம் என்ற முடிவு வரவே, அவர்களால் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடலில் தள்ளி விடப்படுகிறார்கள். மீன் விழுங்கி விடுகிறது.

நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது அவர்கள் சீட்டுக்குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார். இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. (அல்குர்ஆன் 37: 140, 141, 142)

ஒரு வழியாக மீன் அவரை விழுங்கியப் பிறகு யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம் முற்றுப் பெறுகிறது. தவறை நினைத்து யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருந்துகிறார்கள்.

''உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிரிருந்து அவர் அழைத்தார். (அல்குர்ஆன் 21:78)

இவ்வாறுத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு சர்வ சக்தி வாய்ந்த ஏகஇறைவனின் வல்லமையைப் புகழ்ந்தும் தொடர்ந்து துதித்துக்கொண்டே இருந்தக் காரணத்தால் தடுக்கப்பட்ட இறையருள் யூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மீண்டும் இறைவனால் திருப்பப்படுகிறது. மீனுடைய வயிற்றில் அவரை அல்லாஹ் பாதுகாப்பாக தங்கச்செய்து விடுகிறான். கப்பலில் ஏறுவதற்கு கிடைக்காத இறையருள் மீன் வயிற்றில் இருக்கும்போது கிடைத்து விடுகிறது.

அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். (திருக்குர்ஆன். 68:49)

யூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கோபத்தால் எடுத்த முடிவை அல்லாஹ் மன்னித்து மீன் வயிற்றிலிருந்து அவர்களை வெளியேற்றி விடுகிறான்.

அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிரிருந்து அவரைக் காப்பாற்றினோம்... (அல்குர்ஆன் 21:88)

ஒரு வெட்ட வெளியில் கொதிக்கும் மணலில் அவர்கள் வீசப்படுகிறார்கள். எழுந்து நடக்க முடியாத பலஹீனமான நிலையில் அவர்கள் இருந்ததால் உடனடியாக அவர்களின் அருகில் சுரைச் செடி ஒன்றை முளைக்கச் செய்து அவர்கள் மீது நிழல் படரச் செய்து விடுகிறான் கருணையாளன் அல்லாஹ். அதில் அவர்கள் இளைப்பாறி எழுந்து நடக்கத் தொடங்கினார்கள்.

அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம். (அல்குர்ஆன் 37: 145. 146)

யார் தனது தவறை நினைத்து தவ்பா செய்து விட்டாலும் அவர்களது கடந்த காலத் தவறை பட்டியலிட்டுப் பார்த்துக் கொண்டிருக்காமல் மொத்தத் தவறையும் அப்பொழுதேக் கழுவித் தூய்மையாக்கி விட்டு அவரை தனது சிறந்த அடியார்களில் ஒருவராக ஆக்கி விடுவதுடன் அவர் கேட்டதையும் கொடுப்பான் கேட்காததையும் கொடுப்பான் கொடையாளன் அல்லாஹ்.

இருள் சூழ்ந்த மீன் வயிற்றிலிருந்து பலஹீனமான நிலையில் கொதிக்கும் சுடுமணலில் வீசப்பட்டதும் யூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனிடம் நிழல் கேட்கவில்லை. ஆனால் அவருக்கு இப்பொழுது நிழல் அவசியம் தேவை என்பதை அறிந்து அவனாகவே அந்த இடத்தில் சுரைச் செடியை முளைக்கச் செய்து நிழல் கொடுத்தான் கருணையாளன் அல்லாஹ்.

இறைவனின் கோபத்திற்கு காரணம் என்ன?

யூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாயத்து மக்கள் அழிக்கப்படவேண்டும் என்பது இறைவனின் வாக்காக அமைந்து அதற்கான நேரமும் யூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டக் காரணத்தால் தான் அங்கிருந்து அவர்கள் வெளியேறினார்கள். வெறியேறிய உடன் அந்த மக்கள் இறைவனிடம் தவ்பா செய்து இறையருளை அடைந்து கொண்டனர். இது அவர்களுக்குத் தெரியாது.

என்ன நடந்தது என்பதை அல்லாஹ்விடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கோபம் மிகைத்து விட்டது இது தான் நடந்தது.

அல்லாஹ்விடமிருந்து நேரடியாக செய்தியை பெறக்கூடிய வாய்ப்பிருந்ததால் யூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டிருந்தால் அல்லாஹ் பதிலளித்திருப்பான். ஏற்கனவே நூஹ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனை அலை இழுத்துச் சென்ற பொழுது அவர்களுக்கும் இறைவன் மீது கோபம் ஏற்பட்டது. ஆனால் இவர்களைப் போன்று அவர்கள் கோபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவசர முடிவை மேற்கொள்ளாமல் தனது வருத்தத்தை இறைவனிடம் அடக்கத்துடன் தெரிவித்தார்கள்.

அதற்கு இறைவனும் பதில் கொடுத்தான் அந்த பதிலில் திருப்தி கொண்டு இறைவனின் வாக்குறுதியின் மீது அவநம்பிக்கைக் கொண்டதற்காக இறைவனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்கள்.

இனிமேல் யூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்நாளிலும் இதுப்போன்ற கோபம் வரக்கூடாது என்பதற்காகவும், இனி வரக்கூடிய நபிமார்களுக்கும் இதுப்போன்றக் கோபம் வரக்கூடாது என்பதற்காகவும் சில நெருக்கடியை இறைவன் அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்து விட்டு அந்த சம்பவத்தை இறுதி நபிக்கு வழங்கிய திருக்குர்ஆனிலும் இடம் பெறச்செய்ததுடன் மீன் வயிற்றில் இருந்தவரைப்போன்று நீரும் ஆகிவிடாதீர் என்று அவ்வப்பொழுது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தான் நீதியாளன் இறைவன்.

"உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக(இறைவனை) அழைத்தார்." (அல்குர்ஆன் 68:48)

No comments

Powered by Blogger.