Header Ads



ஹஜ்ஜுக்கு சென்று மாயமானவர் - ஈரானில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

ஈரானின் அணு சக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் அளித்த விஞ்ஞானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

ஈரானின் பாதுகாப்புத் துறையின் ஆதரவு பெற்ற பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார் ஷாரம் அமீரி (39). சவூதியில் 2009-இல் புனித யாத்திரை சென்றபோது அவர் காணாமல் போனார். பிறகு, வாஷிங்டனில் இருந்த பாகிஸ்தான் தூதரகத்தின் உதவியுடன் அவர் 2010-இல் ஈரான் திரும்பினார்.

அமெரிக்கா மற்றும் சவூதி உளவாளிகள் தன்னைக் கடத்திச் சென்று துன்புறுத்தியதாக அவர் தெரிவித்தார். அதே சமயம், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் குறித்த முக்கியத் தகவல்களை அளித்ததற்காக, அவருக்கு பெரும் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.

அதன் பின்னர் அவரைக் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ரகசிய இடத்தில் அரசு அவரை சிறை வைத்திருப்பதாக அமீரியின் தந்தை கூறி வந்தார்.

இந்நிலையில் அவருடைய மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அரசு உறுதி செய்துள்ளது. அவரது மரண தண்டனை எங்கு, எப்போது நிறைவேற்றப்பட்டது என்ற விவரத்தை அரசு வெளியிடவில்லை.

அமீரியின் மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து ஈரான் நீதித் துறை செய்தித் தொடர்பாளர் உறுதி செய்ததாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது. எதிரி நாட்டுக்கு முக்கிய உளவுத் தகவலை அவர் அளித்தார் என்று அவர் கூறினார். அமீரிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதையடுத்து, தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றார் அவர்.

No comments

Powered by Blogger.