Header Ads



ஒட்டகத்தை குர்பான் கொடுக்கத்தடை - முஸ்லிம்கள் தமிழகத்தில் பாரியளவில் போராட்டம்


தமிழகத்தில் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள சூழலில், குர்பானி என அழைக்கப்படும் ஒட்டகத்தை பலியிட தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒரு வார காலமாக அதிகரித்து வரும் இந்தப் போராட்டங்களில், இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என பலதரப்பட்ட மக்களும் கலந்து கொள்கிறார்கள்.

கடந்த 18 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலையிலான அமர்வு முன்பாக நடைபெற்ற விசாரணையில், தமிழகத்தில் ஒட்டகத்தை பலியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

அத்துடன் இந்தப் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை இரண்டு மாதங்களுக்கு பிறகு, அக்டோபர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒட்டகம் பலியிடுவதற்கான சிறப்பு இடவசதிகள் இல்லாததை சுட்டிக்காட்டியே இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ள இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர், தொடர் போராட்டங்களையும் தொடரப் போவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

குறிப்பாக மனித நேய மக்கள் கட்சி சார்பாக சென்னையில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

சாதாரணமாக கடைகளில் விற்கப்படும் இறைச்சி உணவுகளுக்கு மட்டும் தான் மிருகங்களை பலியிட நிரந்தரமாக தனி சிறப்பு இடங்கள் அமைக்க முடியுமே தவிர, சிறப்பு வழிபாட்டு தினங்களின்போது பலி கொடுக்கப்படும் மிருகங்களுக்கும் நிரந்தரமாக தனி சிறப்பு இடங்களை ஏற்படுத்த கூறுவது நியாயமற்றது என இஸ்லாமிய அமைப்பினர் கூறுகின்றனர்.

உயர்நீதிமன்ற உத்தரவு, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இதுதொடர்பாகப் பிறப்பித்த உத்தரவுக்கு முரணானது என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கருத்துத் தெரிவித்தார்.

1 comment:

  1. தமிழக இஸ்லாமிய அமைப்புக்களின் அடுத்த "விஷ்வரூபம்" திரைப்படம் ஆக இந்த விடயம் மாறிவிட்டது. பாவம் அப்பாவி முஸ்லிம்கள், அமைப்புக்களின் உள்நோக்கம் தெரியாமல், அல்லாஹ்வுக்காக என்று நம்பி ஏமாறுகின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.