Header Ads



பெட்ஸ்கேன் கொள்வனவுக்கு, டெண்டர் கோரல் - மேலதிகமாக 52 மில்லியன் கிடைத்தது


மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் கதீஜா பௌண்டேசன் ஸ்த்தாபகத் தலைவர் M.S.H. மொஹமட் தலைமையிலான குழு தீவிரமாக செயற்பட்டது.

அந்தவகையில் தற்போது முன்னெக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அதன் தலைவர் மொஹமட் தகவல் தருகையில்,

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் பெற்றுக் கொடுப்பதற்காகவும், அதற்காக பாடுபடவும்  FightCancer Team என்ற அணியை நாங்கள் நிறுவினோம்.  இந்த அணியில் 75 சதவீதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். இந்த   FightCancer Team ஒரு கட்டமைக்கப்பட்ட இராணுவ பிரிவு போன்று செயற்பட்டது. எனது தலைமையிலான அவர்களது வேகம் இதுபற்றிய பிரச்சாரத்தை மக்களிடம் எடுத்துச் செல்லவும், திட்டமிட்ட காலப்பகுதியிலும் பார்க்க முன்கூட்டிய நிதியை திரட்டவும்,  உதவியது.

நாடு பூராகவும் உள்ள மக்களிடமிருந்தும்,  வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்தும் நிதி சேகரிக்கப்பட்டது.  மக்கள் 200 மில்லியன் ரூபாய்களை தந்துதவினர். ஒரு சிங்கள வர்த்தகர் தனது பெயரை விளம்படுத்த வேண்டாமென தெரிவித்து 350 இலட்சத்தை தந்தார். மக்களிடமிருந்து பெறப்பட்ட சகல நிதிகளும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டது.

மக்களிடமிருந்து 200 கிடைக்கப்பெற்றதும். அதனை நாங்கள் மக்களுக்கு பகிரங்கப்படுத்தினோம். இருந்தபோதும்கூட மக்களிடமிருந்து எமக்கு தொடர்ந்து நிதி கிடைக்கப்பெற்றது. அதாவது மக்கள் மேலதிகமாக 52 மில்லியன் ரூபாய்களை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்காக எமக்கு வழங்கியுள்ளார்கள்.

தற்போது நாம் தற்போது சுகாதார அமைச்சு பெட் ஸ்கேன் கொள்வனவு செய்வதற்காக டெண்டர் கோரவுள்ளது. எதிர்வரும் வாரம் அதனை சுகாதார அமைச்சு ஆரம்பிக்கும்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்காக கதீஜா பௌண்டேசனும், முஸ்லிம்களும் முன்நின்று செயற்பட்டமையால் பௌத்த சிங்கள சகோதரர்களிடையே முஸ்லிம்கள் தொடர்பில் நிலவிய சில தவறான அபிப்பிராயங்களும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. பிரபல சிங்கள வர்த்தகர்கள் மற்றும் சிங்கள உயர் அதிகாரிகள், பௌத்த குருக்கள் உள்ளிட்டவர்கள் இதனை என்னிடம் பகிரங்கமாக கூறினர். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் பெற்றுக்கொடுக்கும் எமது இந்த நோக்கமானது சிங்கள - முஸ்லிம் புரிந்துணர்வுக்கும் மேலதிகமாக உதவியுள்ளது என்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

தெற்காசிய நாடுகளில் ஒரு சிறந்த புற்றுநோய் வைத்தியசாலையை உருவாக்குவதே எனது நோக்கமாகும். அந்தவைகயில் மஹலகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அரசாங்கத்தின் உதவிகள் ஒருபுறம் கிடைத்தாலும் மறுபுறம் நமது உதவிகள் மூலம் சிறந்த புற்றுநோய் வைத்தியசாலையை கட்டியெழுப்ப நாம் பங்களிப்புச்செய்ய முடியும்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இன்றும் 20 அல்லது 10 வருடங்களுக்கு முற்பட்ட இயந்திரங்களே காணப்படுகிறது. மஹரகமவிலிருந்து அநுராதபுரத்திற்கு இப்போதும் சிலர் பரிசோதனைகளுக்காக சிரமங்களுக்கு மத்தியில் மக்கள் அனுப்பப்படுகின்றனர்.

பணமிருப்பவர்கள் இந்தியாவுக்குச் செல்கிறார்கள். சிலர் பண வசதியின்றியே புற்றுநோயினால் மரணத்தை தழுவிவிடுகின்றனர்.

இவற்றையெல்லாம் கவனத்திற்கொண்டே நாம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு உதவ முன்வந்தோம். இலங்கை முஸ்லிம்களின் ஆதரவுடன் இன்ஷா அல்லாஹ் எமது பணிகள் தொடரும். அதற்கு அனைத்து முஸ்லிம்களும் துணை நிற்பர் என்று நம்புகிறோம் எனவும் மொஹமட் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.