Header Ads



ஷாகிப் கடத்தப்பட்டு 120 நிமிடங்களில் கொலை

(அபூ சஹ்லா)

பம்பலபிட்டியில் வைத்து கடத்தப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர், கடத்தப்பட்டு இரண்டு மணித்தியாலங்களுக்குள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, சட்டமருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். தலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாகவும், மரண விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இப்படுகொலை தொடர்பாக சந்தேகிக்கப்படும் 5 பேரின், வெளிநாட்டு பயணங்களை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

29 வயதுடைய கோடீஸ்வர வர்த்தகர் ஷாகிப் முஹம்மது சுலைமான், பம்பலபிட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்னால் வைத்து கடந்த 21ம் திகதி கடத்தப்பட்டார். அவரது சடலம், மாவனல்லை, றுகுலகம பிரதேசத்தின் காட்டுப்பகுதியிலிருந்து நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டது. அது, அவருடைய சடலமென, இன்று காலை உறுதிப்படுத்தப்பட்டது. சடலம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னர், கேகாலை போதனா வைத்தியசாலையில் சட்டமருத்துவ விசாரணைகள், ரமேஸ் அழகியவன்ன தலைமையில் இடம்பெற்றது. 

விசாரணைகளின்படி, இரவு 9.30 அளவில் இறந்தவர், இரவு உணவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னர், ஆயுதமொன்றினால் தலையில் தாக்கி, இவரை படுகொலை செய்துள்ளதாக, தெரியவந்துள்ளது. உடலில் அதிக இரத்தம் வெளியேறியதனால், இம்மரணம் சம்பவித்துள்ளதாக, சட்டமருத்துவ அதிகாரி தெரிவித்தார். இப்படுகொலை தொடர்பான தகவல்களை திரட்டுவதற்காக, கொழும்பிலிருந்து கேகாலை வரை சகல சிசிரிவி கெமராக்களையும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், விசேட 20 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை சுலைமான் வசித்த பம்பலபிட்டி வீட்டுக்கு அருகாமையில் 8 விசேட பொலிஸ் குழுக்கள் சோதனையில் ஈடுபட்டன.

இதேநேரம், கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட கோரிக்கைக்கு ஏற்ப, படுகொலை செய்யப்பட்ட சுலைமானுடன் நெருங்கி பழகிய 5 பேரின் வெளிநாட்டு பயணங்களை இடைநிறுத்துவதற்கு, கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. படுகொலை செய்யப்பட்டவரின் இரத்த மாதிரிகள், அவரது தந்தையின் இரத்த மாதிரிகளுடன் பொருந்துகின்றதா என்பதை கண்டறிய ஜின்டெக் நிறுவனத்திற்கு அதனை அனுப்பி வைக்குமாறு, நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது. சுலைமான் காணாமல் போனதன் பின்னர், கேகாலை பகுதியிலிருந்து 2 கோடி ரூபா கப்பம் கோரி, அவரது தந்தைக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் இது விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென, பொலிஸார் நம்புகின்றனர். மொஹமட் சுலைமான், மற்றொரு வர்த்தகருக்கு வழங்கியிருந்த பணத்தை திருப்பி செலுத்தவில்லையென கூறி, சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வந்த வேளை, இப்படுகொலை இடம்பெற்றிருப்பது, பலராலும் பேசப்படும் ஒரு விடயமாகும். படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் ஜனாஸா, கொழும்பு மாளிகாவத்தை, ஜூம்ஆ பள்ளிமையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவிருந்தது.

No comments

Powered by Blogger.