Header Ads



கிழக்கு மாகாண சபையிலிருந்தும், UPFA யின் அங்கத்துவத்திலிருந்தும் ஆரிப் சம்சுடீன் நீக்கம்

கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் கிழக்கு மாகாண சபையிலிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவத்திலிருந்தும் கடந்த 13ஆம் திகதி புதன்கிழமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் பொதுச் செயலாளரும் மீன்பிடி அமைச்சருமான மஹிந்த அமரவீர கிழக்கு மாகாண சபைக்கு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் செயலாளர் தேர்தல் ஆணையாளருக்கும், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தர் ஆணையாளருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த தேர்தற் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சிக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், தற்போது வெற்றிடமாகவுள்ள ஆரிப் சம்சுடீனின் இடத்திற்கு தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற தொழிலதிபர் ஜமால்டீன் முகம்மட் சுபையிர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் சம்பந்மாக கிழக்கு மாகண சபையின் பேரவைச் செயலாளர் எம்.சி.எம்.செரீபிடம் வினவியபோது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் குறிப்பிட்ட மாகாண சபை உறுப்பினரை தமது கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்து தமக்கு எழுத்து மூலம் நேற்றைய தினம ;(18) அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் வியாழக்கிழமை (21) கிழக்கு மாகாண சபை அமர்வு இடம்பெறவுள்ளதாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் அழைக்கப்படுவாரா? என கிழக்கு மாகாண சபை பேரவைச் செயலாளரிடம் மேலும் வினவியபோது சபை அமர்விற்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இனிவரும் காலங்களில் ஆரிப் சம்சுடீனை மாகாண அமர்விற்கு அழைக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

எமக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் ஆரிப் சம்சுடீனை நீக்கியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒருவரை நியமிக்குமாறு நாம் தேர்தல் ஆணையாளருக்கு தெரியப்படுத்தவுள்ளோம். அதற்கமைவாக அவர் மூலம் யாரின் பெயர் வர்த்தமானியில் அறிவிக்கப்படுகின்றதோ நாம் அவரை கிழக்கு மாகாண சபைக்கு புதிதாக நியமிக்கவுள்ளோம் என பேரவைச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.