Header Ads



இஸ்லாத்திற்கு மாறப்போகும் கிராமம் - கோபத்தில் மதம் மாறுவது பலன் அளிக்காது என்கிறது TNTJ

-BBC-

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக் கோவிலில் தங்களை திருவிழா நடத்த அனுமதிக்காத காரணத்தால், தாங்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற விரும்புவதாக தலித் மக்கள் கூறியுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் வருடம் தோறும் நடக்கும் ஆடி மாதத் திருவிழாவின்போது மண்டகப்படி எனப்படும் ஒரு நாள் திருவிழா நடத்தும் உரிமையை தங்களுக்குத் தருவதற்கு அந்த ஊரில் உள்ள ஜாதி இந்துக்கள் மறுப்பதால் தாங்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறப்போவதாக அங்கு வசிக்கும் தலித் மக்களில் சிலர் கூறியுள்ளனர்.

பத்ரகாளியம்மன் கோவிலில் வருடாவருடம் ஆடி மாதத்தின் கடைசி திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமைவரை கொண்டாடப்படும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தைச் சேர்ந்த ஜாதி இந்துக்களின் சார்பில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இஸ்லாத்திற்கு மாறப்போவதாக அறிவிப்பு

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே, அந்த கிராமத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் சார்பில் திருவிழா நடத்த ஒரு நாளை ஒதுக்கித் தர வேண்டுமெனக் கோரிவந்தனர். இந்த நிலையில்தான், இந்த ஆண்டு திருவிழாவின்போது தங்களுக்கு என ஒரு நாளை ஒதுக்கித்தராவிட்டால், இஸ்லாத்திற்கு மாறப்போவதாக மாவட்ட நிர்வாகத்திற்கும், கோவில் நிர்வாகத்திற்கும் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதற்குப் பிறகு, இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், ஐந்து நாளில், குறிப்பிட்ட ஒரு நாளில் காலையில் மட்டும் மண்டகப்படி நடத்த அனுமதிப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், அதனை தலித் மக்கள் ஏற்கவில்லை.

''பகல் நேரம் வேண்டாம்''

இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய அந்தப் பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரதிநிதியான செந்தில், பகல் நேரத்தை மட்டும் தங்களுக்கு ஒதுக்கித் தருவது ஏற்புடையதல்ல என்று கூறினார்.

இதற்குப் பிறகு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால், இம்மாதிரி ஒரு கோபத்தில் மதம் மாறுவது பலன் அளிக்காது என அவர்களிடம் கூறிவிட்டதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்டத் தலைவரான அல்டாஃப் பிபிசியிடம் தெரிவித்தார்.

''பேசித் தீர்ப்போம்''

இந்தப் பிரச்சனையை சுமுகமாகப் பேசித் தீர்க்க முயல்வதாக, அந்த ஊராட்சியின் தலைவர் காமராஜ் தெரிவித்தார்.

ஜாதி இந்துக்களின் சார்பில் பிபிசியிடம் பேசிய சிவசுப்ரமணியன், இந்த ஐந்து நாட்கள் தவிர, வேறு நாட்களை தருவதாகக் கூறியும் தலித்துகள் ஏற்கவில்லையென்றும் எல்லோருடனும் பேசி இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.

இது தொடர்பாக, குறிப்பிட்ட கோவிலின் செயல் அதிகாரி, மனவழகனிடம் கேட்டபோது தான் இது குறித்துப் பேசவிரும்பவில்லையெனத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தலித் மக்களைச் சமாதானப்படுத்த முயன்று வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கினறர்.

தமிழகத்தில் 1980களில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் பெரும் எண்ணிக்கையிலான இந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Powered by Blogger.