Header Ads



இலங்கை முஸ்லிம்களினால், உணரப்படாத ஊடகத்தின் முக்கியத்துவம்...!

ஊடகம் உலக நாடுகளின் விதியினை மாற்றக் கூடிய பிரதான சக்திகளில் ஒன்றாக காணப்படுகிறது. மலேசியாவின் முன்னால் பிரதமர் மஹதீ முஹம்மத் ஒரு தடவை ஊடகங்கள் பற்றி கருத்து தருவிக்கும் போது, 19ம்  நூற்றாண்டில் பலம் வாய்ந்த கடற் படையை  வைத்திருந்த நாடுகள் உலகத்தை ஆட்சி செய்தன. 20ம் நூற்றாண்டில் பலம் வாய்ந்த இராணுவத்தை வைத்திருந்த நாடுகள் உலகத்தை ஆட்சி செய்தன. 21ம் நூற்றாண்டில் ஆட்சி ஊடகங்களை கைவசம் வைத்திருக்கும் நாடுகளின் கைவசம் இருக்கும் எனக் கூறினார். இதனுடாக ஊடங்களின் வலிமையினை உணர்ந்கொள்ள முடிகிறது. பொதுவாக ஊடகங்கள் சமூகம் சம்பந்தமான பிரச்சினைகளை வெளிக்காட்டுவதற்கு மட்டுமன்றி அரசாங்கத்துக்கும், பிரஜைகளுக்கும் இடையிலான தொடர்பினை வெளிக்காடுவதிலும், வலிமைப்படுத்துவதிலும், நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதிலும்  மிகப் பெரிய பங்களிப்பினை வழங்குகின்றன. இதன் காரணத்தினாலேயே ஊடகம் ஜனநாயகத்தில் ஒரு அதிகாரம் உள்ள ஒன்றாக மாறியுள்ளது. எனவே சமூகத்தில் ஊடகங்கள் பலம் கொண்டவையாகவும்,.அத்துடன் ஊடகங்களுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்களும் சமூகத்தில் பலம் பொருந்தியவர்களாக காணப்படுகின்றனர்.ஊடகங்களால் சமூகத்தில் ஆக்கத்தை மட்டுமன்றி அழிவினையும் ஏற்படுத்தமுடியும். அவை ஊடகங்களை கையாள்பவர்களின் கைகளில் உள்ளன.

இன்று ஊடகங்கள் தமது செய்திகளின் ஊடாக  மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதையே நோக்காகக் கொண்டுள்ளன.சிறுவர் துஷ்பிரயோகம்,கொலை,கொள்ளை போன்ற செய்திகளை இன்று தொடர் கதைகளாக மாற்றி மக்கள் மத்தியில் பரபரப்பையும்,எதிர்பார்ப்பையும் தூண்டுகின்றனர். இவை மக்கள் மத்தியில் சமூக எழுச்சியை உண்டாக்கின்றன.எனவே ஊடகங்கள் செய்திகளை வெளிப்படுத்தும் முறைகளிலும் நுணுக்கமான வழிகளையும் கையாளவேண்டும்.
பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடுகளில் ஐக்கியத்தினையும், சமூக நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு அவசியம். இலங்கையில் வடகிழக்கில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் சிறுபான்மை சமூகத்தின் பெரும் சக்தியாக ஊடகங்களின் செல்வாக்கு காணப்பட்டன. 
என்னினும்,இன்றைய பெரும்பாலான ஊடகங்கள் முதலாளித்துவவாதிகளின் கைகளில் சிக்கிக்கொண்டு வியாபார மற்றும் இலாப நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. மேலும் எவரோ ஒருவரின் தனிப்பட்ட விமர்சனங்களை வெளிப்படுத்தவே சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எது எவ்வாறிருப்பினும், ஊடகம் என்பது ஒரு நாட்டினை ஏனைய நாடுகளின் மத்தியில் அடையாளப்படுத்துவதில் தூதுவர்களாகவும்,நாட்டு மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் போரளிகளாகவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதில் காவலர்களாகவும்,நீதியினை பாதுகாப்பதில் நீதிபதியாகவும் இருக்கவேண்டும். 
எனினும்,இலங்கையில் இன்று ஊடகங்கள் சிறுபான்மை இனங்களை புறக்கணிக்கக் கூடிய ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது. இதற்கு பிரதான காரணம் பெரும்பான்மையான இலங்கை ஊடகங்கள் அனைத்தும் பெரும்பான்மை இனத்தவர்களின் தனியான ஊடகங்களாக காணப்படுகின்றமையாகும். பிரதானமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று தனியான முஸ்லிம் ஊடகம் ஒன்று இன்றுவரை இல்லை. இது முஸ்லிம்களைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் இன்று சமூகத்தில் பின்னடைந்து செல்வதற்கு பிரதான காரணமாக அமைகிறது. இது பாமரர்  முதல் படித்தவர்கள் வரை அறியப்படாத ஒரு உண்மையாக இருந்து வருகின்றது.கடந்த தசாப்த காலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கான தனியான முஸ்லிம் ஊடகம் என்ற பேச்சு அனைத்து தரப்பிலும் பேசப்பட்டு அது உருக்குலைந்து போய்விட்டது.

அல்-ஜசீரா போன்ற உலகளாவிய ஊடகங்கள் உலக முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை வெளிவுலகத்துக்கு கொண்டு செல்கின்றன.இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை வெளிச் சமூகத்துக்கு கொண்டுசெல்ல எம்மிடம் ஒரு ஊடகம் இல்லை. பேருவளை முஸ்லிம்கள் பேரினவாதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் BBC தொலைக்காட்சி ஊடகத்தினுடாக உலகிற்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படமையினாலேயே உலக நாடுகள் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதலுக்கு தமது கண்டனத்தினை வெளிப்படுத்தின.

எனினும், இன்று முஸ்லிம்களுக்கு என்று ஒரு ஊடகம் இல்லாமை பாரிய இழப்பாக காணப்படுகிறது.பொதுபலசேன அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ கருத்துக்களை முன்வைக்கின்றது. இதற்கு மறுப்பினை தெரிவிப்பதற்கும், மக்களை தெளிவுபடுத்துவற்கும் எமக்கு ஒரு ஊடகம் இல்லை. கடந்த வாரம் தெஹிவளை பாத்யா மாவத்தையில் உள்ள பள்ளிவாசளின் நிர்மான பணிக்காக வழங்கப்பட அனுமதி கண்டி பெரிய பள்ளிவாசளின் நிர்மான பணிக்காக வழங்கப்பட அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபைகளினால் இரத்துச் செய்யப்பட்டது. இவை எந்தவொரு தொலைக்காட்சி, பத்திரிகைகளிலும் வரவில்லை. jaffna muslim போன்ற இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக இச் செய்திகள் வெளிக்கொண்டுவரப்பட்டாலும் அனைத்து மக்களையும் அது சென்றடைவதில்லை. இலங்கையில் எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர் என்பதை நாம் அறிவதில்லை. 

இன்று ஊடகங்கள் பாரபட்சமான போக்கில் நடந்து கொள்கின்றதன. தீவிரவாதத்துற்கு மதம்,இனம்,மொழி,தேசம் எனும் வேறுபாடு இல்லை. முஸ்லிம் அல்லாத ஒருவன் மதத்தின் பெயரால் தீவிரவாதத்தில் ஈடுபட்டால் மதம்,இனம்,மொழி ஆகியவற்றின் அடைமொழியுடன் அழைக்கப்படுவதில்லை. முஸ்லிம்கள் சிறிய தப்பு செய்துவிட்டாலும் முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமியத் தீவிரவாதி என பிரபல்யப்படுத்துகின்றனர். அவ்வாறு இருப்பின் இனவாதத்தை தூண்டி மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கும் பொதுபலசேன, ராவனபலய போன்றவர்கள் ஏன் தீவிரவாதிகளாக ஊடகம் சித்தரிக்கவில்லை. உலகம் முழுவதும் இஸ்லாத்துக்கும்,முஸ்லிம்களுக்கும் எதிராக பெருமளவில் இயங்கிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் முஸ்லிம்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் உண்மை செய்திகளை மறைத்தும் பொய்யான செய்திகளை திரித்தும் வருகின்றன.

முஸ்லிம்கள் மத்தியில் ஊடகத்தின் முக்கியத்துவம் இன்னும் உணரப்படவில்லை.ஊடகங்களில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஊடக துறையின் அறிவு கொண்டுவரப்பட்டு அதன் முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும்.பத்திரிகை வாசிப்பு திறனை அதிகரிக்கவேண்டும். இன்று எதிர்கால முஸ்லிம் சமுதாயம் உரிய வழிகாட்டல் இல்லாமல் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள். இது தொடர்ப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் கல்விமான்களும் அக்கறை செலுத்தவேண்டும். இன்று முஸ்லிம்களின்  உரிமைகளும்,உடமைகளும் ஒருவரை ஒருவர் அறியாமலே பரிபோய்க்கொண்டுடிருக்கின்றன. ஆயுதமேந்தி அரசுக்கெதிராகவோ, இனவாதிகலுக்கெதிராகவோ யுத்தம் செய்வதன் ஊடக எமது உரிமைகளையும், உடமைகளையும் பெற்றுக்கொள்ள முடியாது.

நவமணி,மீள்பார்வை,எங்கள் தேசம்,முஸ்லிம் குரல் என்று ஒரு சில பத்திரிகைகள் இலங்கை முஸ்லிம்களுக்கென்று காணப்பட்டாலும் அவை அந்நியர்களுக்கு கிழாகவே இயங்கி வருகின்றன. ஆகவே, முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை பிரசுரிப்பதில் இவர்கள் பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அது மட்டுமன்றி நிர்வாக பிரச்சினை, நிதி பிரச்சினை,உழியர் பாற்றக்குறை காரணமாக அப்பத்திரிகைகளின் செயற்பாடுகள் முடங்கிபோய் விட்டன.
கடந்த காலங்களில் மு
ஸ்லிம்களுக்கான தனியான ஒரு ஊடகம் வேண்டும் என்று முஸ்லிம் மீடியா போரம்,முஸ்லிம் கவுன்சில்  என்பன போராடிய போதும் அது இன்னும் வெற்றியளிக்கவில்லை.முஸ்லிம்கள் தமது கருத்துகளை துணிச்சலோடு வெளிப்படுத்த நமக்கென்று தனியான நாளிதழும்,தொலைக்காட்சியும் தேவை.நம்மிளும் எத்தனையோ படித்தவர்கள், ஊடக துறையில் ஈடுபாடு கொண்டவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள். எனினும் அவர்களுக்கான சரியான களம் உரியவர்களால் அமைத்துக்கொடுக்கப்பட வில்லை. எனவே எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு தனியான ஊடகம் ஒன்றினை உருவாக்குவதில் உரிய அதிகாரிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் முன்வந்து செயப்படவேண்டும்.

எம்.எப்.எம் பஹாத்
இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகம்,
ஒலுவில்.

1 comment:

Powered by Blogger.