July 19, 2016

"அனைவருக்குமே எனது கணவர் பொதுவானவர்"

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. 

இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதும் உறுதியாகி விட்டது.

அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில், ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபராக 51 சதவீதம் மக்களும் அவரை எதித்து போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்புக்கு 39 சதவீதம் மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஏ.பி.சி. நியூஸ் நடத்திய இந்த கருத்துகணிப்பின்படி, இன்றைய நிலையில் இருவரும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் 51 சதவீதம் மக்கள் ஹிலாரியைதான் ஆதரிப்பார்கள் என தெரியவந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு குழுவினர் சந்தித்த மக்களில் மூன்றில் இரண்டுபேர் நாட்டை ஆள டிரம்ப் தகுதியற்றவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், வால் ஸ்டிரீட் ஜர்னல் மற்றும் என்.பி.சி. செய்தி சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில் டொனால்ட் டிரம்புக்கு 41 சதவீதம் மக்களும் அவரை எதித்து போட்டியிடவுள்ள ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபராக 46 சதவீதம் மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளராக ஜனநாயக கட்சியின் சார்பில் அமோக ஆதரவை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு அதிபர் பராக் ஒபாமா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டினரையும், வந்தேறிகளையும் அமெரிக்காவை விட்டு விரட்டியடிப்பேன். இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன் என டொனால்ட் டிரம்ப் பேசி வருகிறார். அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்து சென்றுவிடுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.  

அவ்வப்போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கி வரும் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக அவரது மனைவி மெலினியா டிரம்ப் தற்போது பிரசார களத்தில் குதித்துள்ளார்.

யுகோஸ்லோவேக்கியா நாட்டில் 1970-ம் ஆண்டு நடுத்தர குடும்பத்தில் பிறந்த மெலினியா(46) மெல்ல மாடலிங் துறைக்குள் நுழைந்து உள்நாட்டில் பிரபலமானார். 

பின்னர், மிலன் மற்றும் பாரிஸ் நகரங்களில் மாடல் அழகியாக வலம்வந்த இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1996-ம் ஆண்டு குடியேறினார். 1998-ம் ஆண்டு மன்ஹாட்டன் நகரில் நடந்த ஒருபார்ட்டியில் டொனால்ட் டிரம்ப்-ஐ சந்தித்த மெலினியா, அவரை காதலித்து, மூன்றாவது மனைவியானார்.

தனது முரட்டுத்தனமான கருத்துகளின்மூலம் ஒருதரப்பினரின் பகையை சம்பாதித்துவரும் கணவருக்கு சாதகமாக அவரது குணாதிசயங்களை புகழந்து மெலினியா பேசி வருகிறார்.

டொனால்டுடன் நான் 18 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். இந்த நாட்டின்மீது அவர் கொண்டுள்ள அன்பை எங்கள் முதல் சந்திப்பின்போதே நான் தெரிந்து கொண்டேன். அமெரிக்கர்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும்.

முரட்டுத்தனமாக இடத்தில் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் டிரம்ப், அன்பாகவும் அரவணைப்பாகவும் நடந்து கொள்வதில் மிகசிறந்த மனிதர் என்று புகழாரம் சூட்டிய மெலினியா, அவர்மீது நான் காதல்வயப்பட அந்த அன்பும் அரவணைப்பும்தான் காரணம் என்றும் குறிப்பிட்டார்.

கிறிஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லிம்கள், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், ஆசியர்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அனைவருக்குமே தனது கணவர் பொதுவானவர் என்று குறிப்பிட்ட மெலினியா, அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றால் நாட்டின் முதல் பெண்மணி என்ற வகையில் நாட்டிலுள்ள குழந்தைகள் மற்றும் பெண்களின் மேம்பாட்டுக்கு பாடுபடுவேன் எனவும் உறுதியளித்தார்.

1 கருத்துரைகள்:

அப்படின்னா நீங்களும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்களும் வந்தேறிதானே! உங்கள் கணவர் ஜனாதிபதியானால் உங்களையும் பிடித்து நாட்டை விட்டு அனுப்பி விடுவார். அப்படி உங்களை அவர் பிடிக்கவில்லை நாடு கடத்தவில்லை என்றால் உங்கள் கணவர் ஒரு பொய்யர் என்பதை உலகம் தெரிந்துகொள்ளும்

Post a Comment