Header Ads



சாந்தண்ணையும், சலூன் கடையும்..!!


(By: Dr Rickaz Raheem)

சாந்தன் என்பது அவர் பெயர். எங்களூரின் பிரபல சலூன் கடைக்காரர். அனுபவஸ்தர். தொழிலில் அவ்வளவு சுத்தம். வெட்டுவதும் சவரம் செய்வதும் ஒரு தனிக்கலை என்பார். எல்லாருக்கும் அது கைவராது, திறமையை போன்றே பொறுமையும் அர்ப்பணிப்பும் மிக மிக அவசியம் என்பதில் உறுதியாயிருப்பார். அதற்காய் அவர் சொல்லும் காரணந்தான் அலாதியானது. “கதிரையில் வந்தமரும் ஒவ்வொருவரும் நம்மை நம்பியே தலையையோ கழுத்தையோ நீட்டுகிறார்கள்; அழகைக் குலைப்பதோ, முகத்தைக் கிழிப்பதோ தெய்வத்துக்கே பொறுக்காது” என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார்.

சாந்தன் சலூனில் தொழிலுக்காய் சேர்வதற்குக் கூட கடும் போட்டியிருக்கும். அவ்வளவு இலேசாக யாருக்கும் அங்கு இடம் கிடைத்து விடாது. நன்றாக வேலை பழகிய, கடைக்கு வருபவர்களுக்கு இவர்களால் பாதிப்பில்லை என்று உறுதி செய்தால் மட்டுமே புதியவர்களை சேர்த்துக் கொள்வார் சாந்தண்ணை. ஏகப்பட்ட கேள்விகள், கட்டிங், ஷேவிங் பரீட்சையெல்லாம் பாஸ் பண்ணினாற்தான் உண்டு. இன்னொன்றையும் சொல்ல வேணும். இவர் கடையில் வேலை பார்த்த பலர் இப்போது வெளிநாடுகளிலும் நன்றாக வேலை செய்வதுவும் இவருக்கு பெருமை. அவர் கடை ட்ரைனிங் அப்படி!

இப்பொழுதெல்லாம் காலம் நன்றாக இல்லை போல் தெரிகிறது. புதிதாக சிலர் சலூன் கடைகளுக்கு வர இருக்கிறார்களாம். அவர்களெல்லாம் சரியாக வேலை பழகவும் இல்லை, பழக்கப்படவும் இல்லை போல் தெரிகிறது. ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசர அவசரமாக அரைகுறையாக சலூன் கடை தொடங்க புறப்பட்டவர்கள் போல்தான் தெரிகிறது. அவர்கள் வேலை பழகிய இடம் கூட ஒரு சரியான கடையாகத் தெரியவில்லை. பெரிய பெரிய சவர விற்பன்னர்களெல்லாம் கூட போய்ப் பார்த்தார்கள். சவரம் பழக்கினால் வெட்டப்பழக்கவில்லை; வெட்டப் பழக்கினால் மொட்டை பழக்கவில்லை; சிலரோ கத்தி, கத்திரியை தொடவே இல்லை. பார்த்து மட்டும் பழகியோரும் உண்டு என்றவாறே அவர்கள் பயிற்சி இருந்திருக்கிறது. இவையெல்லாம் சாந்தண்ணையை கவலை கொள்ளச் செய்கின்றன. இந்தத் தொழிலின் தருமமும் புனிதமும் பாதுகாக்கப்பட வேணும் என்பதிலும் எந்தவொரு வாடிக்கையாளரும் பாதிக்க படக்கூடாது என்பதிலும் சாந்தண்ணை உறுதியாக இருப்பவர். ஒரு சிலர் சொல்வதுபோல், இந்தப்புதியவர்கள் கடைக்கு வந்தபிறகு வருகிற வாடிக்கையாளர்களை வைத்தே வேலை பழகிக்கொள்ளலாம் என்பதில் அவருக்கு உடன்பாடு கிடையாது.

இப்படி – யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதில் உறுதியாயிருந்து எதிர்ப்பதால் சாந்தண்ணையை இப்போது பலருக்கு பிடிக்காமலும் போய் விடுகிறது. புதியவர்கள் வருகையால் அவரது தொழிலுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை என்பதோ, அவர் எதிர்ப்பது மற்றவர் நன்மைக்காகவே என்பதுவோ இவர்களுக்கு புரியாமல் போனதுதான் அவருக்கு புதிராக இருக்கிறது.

சரி, இப்படிப்பட்டவர்களிடம் சாந்தண்ணை கேட்கும் கேள்வி ஒன்றுண்டு. 
“புதியவர்களெல்லாம் கடை திறக்கும் போது உங்களில் யார் யாரெல்லாம் முதன் முதலாக ஓடிச்சென்று தலையையும் கழுத்தையும் நீட்டுவீர்கள்?”
================================================

"SAITM மருத்துவக் கல்லூரியை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?" என்று கேட்கிற நண்பர்கள் –  கதையை மறுபடி ஒரு தடவை வாசித்துப்பாருங்கள்!

1 comment:

  1. Dr. Rikas, உங்கள் சாந்தண்ணை கதை நன்றாக புரிகிறது, ஆனால் நீங்கள் நினைப்பது போல் இப்போது இல்லை உங்கள் சாந்தண்ணையிடம் தொழில் கற்றவர்கள், அவர்கள் இப்போது பணத்துக்காக மிகவும் கூர்மையான சவரக் கத்தியை கொண்டு எந்த இடத்தில் சவரம் செய்ய வேண்டுமோ, அங்கு செய்யாமல் வேறு இடத்தில் துவம்சம் செய்து விடுகிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.