Header Ads



சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு. நாம் அனுமதிக்க முடியாது - றிசாத்


-சுஐப் எம்.காசிம்-

அரசியல் இருப்பு, பிழைப்புகளுக்காகத் தமிழ்மொழி பேசும் இரண்டு சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மினுவாங்கொடை, கல்லொலுவ வஸீலா சாஹிர் எழுதிய “ நிலவுக்குள் சில ரணங்கள் “ சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கொழும்பு, அல்/ஹிதாய மஹா வித்தியாலயத்தின், பஹார்தீன் மண்டபத்தில் இன்று காலை (30/07/2016) நடைபெற்றபோது அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுசரணையில், அதன் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கௌரவ அதிதிகளாக மேல்மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம், ரூபவாஹினிக்  கூட்டுத்தாபனத் தமிழ் பிரிவின் நடப்பு விவகாரப்பணிப்பாளர் யு.எல்.யாகூப், லேக்ஹவுஸ் நிருவனத்தின் தமிழ் பிரிவு ஆலோசகர் எம்.ஏ.எம்.நிலாம், பிரபல எழுத்தாளர் மு.பஷீர், மௌலவி ஹஸ்புல்லாஹ் ஆகியோர் பங்கேற்றனர். பிரபல தொழிலதிபர் முஸ்லிம் ஹாஜியார் முன்னிலை வகித்த இந்த நிகழ்வில், புரவலர் ஹாஷிம் உமர் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.  அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றியதாவது,

சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், தாம்சார்ந்த சமூகங்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் சமூக உள்ளக்கிடக்குகளை வெளிக்கொணர்ந்து, அதை நூலுருப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கின்றது. 30 ஆண்டுகால யுத்தத்தின் பிறகு சமாதானம் மலர்ந்துள்ள நிலையில், தமிழ் - முஸ்லிம் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும், வென்றெடுக்கும் வகையிலும் எழுத்தாளர்கள் எழுத்துப்பணி செய்தால், எமது இலக்குகளை இலகுவாக வென்றெடுக்க முடியும். 

பொதுவாக முஸ்லிம் பெண்கள் எழுத்துத்துறையில் ஆர்வங்காட்டுவது குறைவாகவே இருக்கின்றது. வஸீலா சாஹிரைப் போன்ற ஒருசில பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு நாம் ஊக்கமளிப்பதன் மூலம், எழுத்துத்துறையில் பெண்களின் ஆர்வத்தை அதிகரித்து, அவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர உதவ முடியும். எழுத்தாளர்களை நாம் தட்டிக்கொடுக்க வேண்டும். அவர்களின் திறமைகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும். 

அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்கு மட்டும் ஊடகத்துறையினரை பயன்படுத்திவிட்டு, அவர்களை கருவேப்பிலையாகத் தூக்கி எறிவது கவலைக்குரியது. எழுத்தாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதிலும், அவர்களின் எழுத்துக்களை நூலுருப்படுத்துவதிலும் நமது சமூகம் சார்ந்த ஒருசில தனவந்தர்கள் உதவிவருகின்ற போதும், ஏனைய பரோபகாரிகளும் முன்வருவது சிறப்பானது. நமது நாட்டைப் பொருத்தவரையில், கலைஞர்களுக்கு ஆங்காங்கே சில கட்டமைப்பான அமைப்புக்கள் இயங்குகின்றன. ஆனால் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு முறையான, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான அமைப்புக்கள் இல்லாதது குறைபாடானது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.                          

1 comment:

  1. Inter community rivalry . No good. Can u fight within the cimmunity

    ReplyDelete

Powered by Blogger.