Header Ads



ஹபுகஸ்தலாவ அரபுக் கல்லூரி மீது தாக்குதல் - பொறுமை காக்க பொலிஸ் அத்தியட்சர் கோரிக்கை

-விடிவெள்ளி ARA.Fareel-

ஹபுகஸ்தலாவையில் அமைந்துள்ள நான்கு மாடிகளைக் கொண்ட அல் ஹாமிதியா அரபுக் கல்லூரியின் மூன்று பேஸ் மின்மானியும் தண்ணீர் கொள்கலனும் சனிக்கிழமை இரவு இனந் தெரியாதோரினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.

ஜெனரேட்டரை உபயோகிப்பதற்காக களஞ்சியப்படுத்தியிருந்த டீசல் எடுக்கப்பட்டு அரபுக் கல்லூரியில் தெளிக்கப்பட்டுள்ளதுடன் சுருட்டி வைக்கப்பட்டிருந்த நிலவிரிப்பு (காபட்) எரியூட்டப்பட்டிருந்தாலும் அது முழுமையாக பாதிக்கப்படவில்லை.

சனியன்று இரவு அரபுக் கல்லூரியின் மாணவர்கள் நித்திரைக்குச் சென்ற பின்பே இச் சம்பவம் நடந்துள்ளது.

அரபுக் கல்லூரி நிர்வாகத்தினால் நாவலப்பிட்டி மற்றும் கம்பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் நேற்று ஸ்தலத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். பொலிஸ் மோப்ப நாயும் ஸ்தலத்துக்கு அழைத்து வரப்பட்டது.

கம்பளை உதவி பொலிஸ் அத்தியட்சகரும் ஸ்தலத்துக்கு வருகை தந்தார். குற்றவியல் விசாரணைப் பிரிவு பொலிஸாரும் இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

ரேகை அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டன.

ஹபுகஸ்தலாவை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசல் தலைவர் ஹிப்பத்துல் கரீம் உட்பட நிர்வாகிகள் அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். அரபுக் கல்லூரியின் பாவனையிலிருந்த 8 நீர் கொள்கலன்களில் ஒரு கொள்கலனே பற்றி எரிந்துள்ளது.

ஹபுகஸ்தலாவை முஸ்லிம்களை பொறுமை காக்கும் படியும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படு மெனவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உறுதியளித்துள்ளார்.

இச் செய்தி அச்சுக்குப் போகும்வரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை.

அரபுக் கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.