July 30, 2016

கெடு முடிந்துவிட்டால்..?

-தாழை ஷேக்தாஸன்-     

மானிடர்கன் உயர்வோடு வாழ கெடு இருக்கிறது. அயராது உழைக்கும்போது அவனது கெடு அம்மனிதனை உயர்த்திவிட்டு மறைந்து விடுகிறது.

ஒரு மனிதருக்கு கடனாளியாய் கடனைக் கொடுத்தவர் இன்ன தேதியில் பணத்தைக்கொடுக்க வேண்டுமென்று கெடு போடுவார். கெடு முடிந்து விட்டால் உடமைகளைப் பறித்துக்கொள்வார்.

கெடு என்பது உறுதியான ஒரு எல்லை. ஒரு வரைமுறை. அதற்குள் கிடைத்துவிட வேண்டும்.. ஓர் எச்சரிக்கை. ஓர் பயமுறுத்தல். ஓர் அபாயக்குரல் என வைத்துக்கொள்ளலாம்.

வாழ்க்கை முறையில் "கெடு" மனிதர்களை பயமுறுத்தி, வாழ்வைத் திருத்திக்கொள்ளத் தூண்டுகிறது.

உயர வேண்டும் என்ற கெடு வைத்து உழைக்கும்போது பலன் கிடைக்கிறது. இப்படி எல்லாவற்றுக்கும் கெடு இருப்பதுபோல், நம் உயிருக்கும் மரணம் என்றொரு கெடு இருக்கிறது. அது காலக் கெடு. இம்மையிலுள்ள கெடு யாவையும் நாம் நிறைவேற்றி விடுவோம். காரணம் ஓர் அச்சம், சுயமரியாதை இவைகளையெல்லாம் காப்பாற்றவே! ஆனால், இறைவன் கொடுக்கும் கெடுவை எதை வைத்து வெல்வது?

இதோ நம்மைப் படைத்த இறைவனே சொல்கிறான் கேளுங்கள்:

"நீங்கள் எங்கிருந்தபோதும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; உறுதிமிக்க கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 4:78)

"நீங்கள் எந்த மரணத்தை விட்டு விரண்டோடுகிறீர்களோ அந்த மரணம் நிச்சயமாக உங்களைச் சந்தித்தே தீரும்" (அல்குர்ஆன் 62:8)

மனிதர்களே! நீங்கள் மய்யித்துக்களைத் தான் அடக்கம் செய்ய முடியும். மரணத்தை அடக்கம் செய்ய முடியாது. சடலங்களைத்தான் புதைக்க முடியுமே தவிர சாவை புதைக்க முடியாது.

மனிதன் குழந்தையாய்ப் பிறப்பதற்கு முன்பே அவனது ஆட்டம் பாட்டங்களுக்கு காலக்கெடுவை அல்லாஹ் நிர்ணயம் செய்து விட்டான்.

மேகமெனும் அலைகளிடையே மிதந்து வரும் வெண்ணிலவை காகங்கள் பறந்து சென்று கவர்வதெனில் இயன்றிடுமா?

விண்மீனைப் பிடித்து வந்து விருந்து வைக்க எண்ணலாமா?

வெண்ணிலவைப் பிடித்து வந்து பந்து விளையாட ஆசைப்படலாமா?

விஞ்ஞானி சொல் கேட்டா விரல் நகம் வளர்கிரது? எல்லாமே பொய்....

ஏன் சமீபத்தில் நாகரீக வளர்ச்சியில் முன்னேற்றமான ஜப்பானின் நிலையை நாம் வீடியோக்களில், பத்திரிகைகளில் கண்டறியவில்லையா?

விஞ்ஞானியால் சுனாமியை ஏன் நிறுத்த முடியவில்லை?

இறைவன் வைத்திருந்த கெடு கடலடிக்குள் முடிந்து விட்டது. மண் அடுக்குகள் தளர்ந்து விட்டது. எல்லாம் இறைவன் செயல், அவன் போட்ட கெடு முடிந்ததால் நடந்தது.

எத்தனை அணு ஆளைகளை மனிதன் கண்டுபிடித்துப் பயனடையட்டுமே! அதன் காலக்கெடு முடியும்போது வெடுத்துச் சிதறுகிறது. அவ்வளவுக்கு ஏன் போவானேன், நாம் வாழும் இந்த பூமிப்பந்தும்கூட ''கெடு'' முடியும் அந்த ஒரு நாளில் வெடித்துச் சிதறத்தானே போகிறது.

மனிதர்களே! சிந்தித்துப் பாருங்கள். உலக வாழ்க்கை மெல்லினமானது. மறுமையே வல்லினமானவை என என் இன்னும் நீங்கள் உணராமல் படைத்தவனை மறந்து பள்ளிகளை பேச்சு மேடைகளாக்கி வாழும் உங்களுக்கு அறிவு எங்கே போனது?

விடியும் ஒவ்வொரு பொழுதும் நீங்கள் சேர வேண்டிய தூரத்தையல்லவா குறைத்துக் கொண்டிருக்கிறது! ஒவ்வொரு நாளும் மனிதனின் ஆயுளைக் குறைத்துக் கொண்டிருப்பதை நினைத்தால் இறைவனைப் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அரசியலைப் பற்றியோ அடுத்தவர்களைப் பற்றியோ பள்ளிவாசல் படிகளில் அமர்ந்து கொண்டு பேசுவது இறைவனுக்குப் பிடிக்காது என்று அறிந்து கொள்வாய். இது வரையில் பள்ளிப்படிகளில் அமர்ந்துப் பேசியதற்காக வருத்தப் படுவாய்.

வெளியூர் சென்றுவிட்டு, வீடு திரும்ப சில காலங்கள் தாமதமாகி விட்டால், ஃபோன் மேல் ஃபோன் போட்டு விசாரிக்கிறாள் மனைவி! அதே கணவன் இறந்து விட்டால் அடக்கம் செய்ய வேண்டுமென்பதற்காக துயரத்திலும் துரிதப்படுத்துகிறாள். மகனோ தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தை இறந்து விட்ட சோகத்திலும் மய்யித் அழுகி அலங்கோலமாகி விடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் சீக்கிரம் மய்யித்தை அடக்க அவசரப்படுகிறான்.

ஊரும், உற்றாரும் ஜனாஸா - மய்யித் - டெட் பாடி - பிணம் போன்ற வார்த்தைகளைச் சொல்லி புதைக்கவே அவசரப்படுத்துகிறார்கள்.

எத்தனை சம்பாத்தியம் பண்ணி என்ன பிரயோஜனம்? எத்தனை பங்களாக்களைக்கட்டி என்ன சங்கோஜம்? மரணக்குழிக்கு சீக்கிரம் அனுப்பவே ஆர்ப்பரிக்கிறார்களே...!

தேடிய பணம், திரட்டிய சொத்து, பயன்படுத்திய வாகனம், இன்னும் என்னென்னவோ... எல்லாவற்றையும் மற்றவர்கள் அனுபவிக்க விட்டுப் பிரிய வேண்டுமே!

ஏன்? இருந்தவருக்கு கெடு முடிந்து விட்டது, இறந்து விட்டார். இனி, புதைக் குழிக்குள் போயே தீர வேண்டும். ஆறடி நிலம் மட்டுமே சொந்தமாகிவிடுகிறது. அந்த ஆறடி நிலம் கூட நிரந்தரமல்லவே! சில ஆண்டுகளுக்குப்பிறகு புதைத்த இடத்தில் மறுபடியும் பள்ளம் தோண்டப்பட்டு வேறொருவரை அடக்கம் செய்து விடுகிறோம்.

தேடிய செல்வமும் பறிபோய்விடும். உறவுகளும் கைவிட்டுப் போகும். சவக்குழியில் தனிமையில் விட்டு விட்டு எல்லோருமே சென்று விடுவதை அப்போது உணர்வான், மனிதன்! எணென்றால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்து விட்டது. யாரோ அனுபவிக்கப் போகும் செல்வத்துக்காக ஒருவன் தன்னுடைய மறுமை வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்கிறானே! கவலை படவேண்டும்.

மரணத்தை மறந்து விட்டு மறுமையை அலட்சியம் செய்துவிட்டு உண்ணவும், உறங்கவும், இனப்பெருக்கம் செய்வதும்தான் வாழ்க்கை என்று மனம் போன போக்கில் வாழலாமா?

எனவேதான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "எவன் தன்னுடைய செயல்களைக் குறித்து சுயமதிப்பீடு செய்து கொண்டே மரணத்திற்குப் பிறகு வர இருக்கும் நிரந்தர வாழ்க்கைக்காக நற்செயல் புரிகின்றானோ அவனே இறைவன் விரும்பும் சொர்க்கவாதி. மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு எவன் இறையருள் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறானோ அவன் நரகவாதியாகும்" என்றார்கள்.

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! மறு உலக வாழ்க்கையோடு ஒப்பிடும்போது இந்த உலகமானது உங்களில் ஒருவர் தமது விரலைக் கடலில் மூழ்கி எடுப்பது போன்றதுதான். அந்த விரலில் எவ்வளவு நீர் இருந்து விடப் போகிறது?" என்று ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வினா எழுப்பினார்கள். (நூல்: திர்மிதீ, நஸாயீ)

நற்செயல்கள் நல்லமல்களுடன் வாழ்ந்தோமானால் நமது கெடு நல்லவிதமாக முடிவுற்று நம்மை சுவனத்தில் கொண்டுபோய் சேர்க்கும். அதற்கான முயற்சியை இனிமேலாவது நாம் எடுக்கலாம் தானே!

நமது கெடு முடிந்து விட்டபின் நம்மை மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்ட பின் வானவர் நமது வலது கரத்தில் பட்டோலயைக் கொடுக்கும்படியான இறைபொருத்தத்துடன் கூடிய நல்வாழ்வை, இவ்வுலகில் வாழ்வோமாக! இதோ திருக்குர்ஆனின் வசனத்தை கண்குளிர காண்போமே...

''ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்.

"நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்."

ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் - உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.

அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.

"சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்).'' (69:19-24)

அல்லாஹ் உதவி புரிவானாக!

0 கருத்துரைகள்:

Post a Comment