Header Ads



ஜனாதிபதி அவர்களே, இது உங்களின் கவனத்துக்கு...!

-ஜெலில்-

இன்று இந்த நாட்டிலே இனவாதம் சில பேரினவாத குழுக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டு மிக மோசமான முறையிலே தலை விரித்தாடுகிறது.

சென்ற அரசாங்கத்தை #மஹிந்த ராஜபக்சவை# எல்லோரும் ஒன்று சேர்ந்து குறிப்பாக முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டு வீட்டுக்கு அனுப்பியதுக்கு காரணம் அங்கு இனவாதம் மேலோங்கி காணப்பட்டது என்பதை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இனவாதத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தலைதூக்க விடமாட்டோம் முற்றாக துடைத்தெறிவோம் என்று மேடைக்கு மேடை சொல்லித்தான் முஸ்லிம்களை நம்பவைத்து மக்களும் ஒரு மாற்றம் தேவை என்றுதான் ஆட்சியை மாற்றி புதிய அரசாங்கத்தை- மைத்திரி பால சிறிசேனாவை ஆட்சியில் ஏற்றினார்கள்.

அன்று இந்த இனவாதி #ஞான சார ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனையும் கடித்ததும் இல்லாமல் இன்று முஸ்லிம்களின் உயிராக நேசிக்கும் உத்தம நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் புனிதமான குரானையும் விமர்சிக்கிற அளவுக்கு வந்துவிட்டார்.

இப்படி வாய்க்கு வந்ததுபோல் மாற்று மார்க்கத்தில் மூக்கை நுழைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது??

காவி உடை அணிந்தால் எது வேண்டுமென்றாலும் செய்யலாம் மூளைக்கும் முண்ணானுக்கும் தொடர்பு இல்லாமல் வாய்க்கு வந்தபடி ஏசலாம் இதை கண்டுகொள்ளாமல் நாட்டின் சட்டம் என்ன தூங்குகிறதா ??

 அல்லது இந்த நல்லாட்சி காவி உடை அணிந்த ஞானசார குழுவுக்கும் அவர்களுடன் சேர்ந்த கூட்டத்துக்கும் ஆசீர்வாதம் வழங்கி இனவாதத்தை ஊக்கு விக்கின்றார்களா என்று சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

இந்த ஞானசார தேரர் மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அவருடைய பழைய பல்லவியை பாடுவது மட்டுமல்லாமல் புதிதாக விஸ்வரூபம் எடுத்து ஆடுவது முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்லாது இந்த அரசாங்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம் இவ்வளவு நடந்தும் ஏன் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று புரியாத புதிராக இருக்கிறது.

இனவாதத்தை பேசுபவர்களை நாய் கூட்டில் அடைப்போம் என்று சொன்னவர்கள் கூட வாய் மூடிகளாக இருப்பதன் மர்மம்தான் என்ன?

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே இந்த நல்லாட்சி வருவதற்கு கடுமையாக உழைத்தவர்கள் இந்த முஸ்லிம் மக்கள். கிட்ட தட்ட 98% மானவர்கள் தனது முழு ஆதரவையும் உங்களுக்கு கொடுத்து ஆட்சியை கொண்டுவந்தார்கள். நீங்கள் ஆட்சி பீடம் ஏறியவுடன் முதலில் சந்தோஷ பட்டவர்கள் கூட இந்த முஸ்லிம்கள். அதை ஒரு விழாவாக இனிப்பு வழங்கி பட்டாசி கொழுத்தி வீதி வீதியாக பேரணி சென்று தனது மகிழ்சியை கொண்டாடினார்கள் அது மட்டுமா எத்தனையோ தாய்மார்கள் பெரியவர்கள் இளைஞர்கள் என்று எல்லோரும் #அல்லாஹ்வை தொழுது துஆ கேட்டார்கள்.

அதுமட்டுமா முஸ்லிம்களின் புனித இடமான மக்காவுக்கு சென்றுகூட துஆக்கள் கேட்டார்கள் சென்ற அரசாங்கத்தை (மஹிந்தவை) மாற்ற வேண்டும் என்று. 

#அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் நாட்டம் ஆட்சியும் மாறியது ஆனந்த கண்ணீர் வடித்தார்கள் முஸ்லிம்கள் ஏன் தெரியுமா? இனியாவது இந்த நாட்டில் நிம்மதியாக ஒற்றுமையாக வாழலாம் என்றுதான் மாறாக நாங்கள் இந்த நாட்டை இரண்டாக பிரிக்கவேண்டும் என்று யுத்தம் செய்யவுமில்லை இனிமேலும் செய்ய போவதுமில்லை.

இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் களங்கம் , பங்கம் விளைவிக்காமலும் காலா காலம் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாட்டிலே பிரிவினை ஏற்படுத்துவதையோ அல்லது வேறு எந்த இயக்கமோ இந்த நாட்டை பிரிப்பதற்கு நாங்கள் துணை போகாமல் நாட்டின் அரசாங்கத்தோடு இணைந்து நாட்டின் சட்டத்தை மதித்து ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் சமூகம்தான் இந்த முஸ்லிம் சமூகம்.

முஸ்லிம் மக்களுக்கு சிங்கள மக்களோடும் தமிழ் மக்களோடும் மிக நெருங்கிய உறவு இருந்து வருகிறது. இதை தாங்கி கொள்ள இயலாத சில காவிஉடை அணிந்த #ஞானசார போன்ற விசமிகள் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து தாக்குவதற்கான காரணம் கலிமா சொன்ன மக்கள் என்பதற்காகத்தான் ஒழிய வேறு எதுவுமில்லை.

காவி உடை அணிந்தால் எதுவும் செய்யலாம் என்பது போல்தான் இந்த புனித #ரமழான் மாதம் என்றுகூட பார்க்காமல் எங்களுடைய மனங்கள் புண்படும் படியாகவும் மார்க்கத்தை இழிவு படுத்தக்கூடிய வகையிலும் எங்களுடைய ஏக இறைவனான #அல்லாஹ்வையும் உயிரிலும் மேலாக மதிக்கும் நபிகள் #நாயகம்(ஸல்) அவர்களையும் அல்லாஹ்வால் அருளப்பட்ட #குரானையும் இழிவுபடுத்தும் முகமாக இந்த நாட்டிலே வெளிப்படையாக மேடை போட்டு கத்திக்கொண்டிருப்பது இந்த நாட்டு முஸ்லிம்களை மட்டுமல்லாது வெளிநாட்டில் இருப்பவர்களையும் வேதனை அடைய செய்கிறது.

இந்த #கலிமா சொன்ன மக்களுக்கு உயிர் முக்கியமா? அல்லது மார்க்கம் முக்கியமா? என்று வந்தால் மார்க்கத்தைத்தான் விரும்புவார்கள் அந்த அளவுக்கு #குரானையும் #அல்லாஹ்வையும் நேசிப்பவர்கள் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.

எனவே மாண்புமிகு #ஜனாதிபதி அவர்களே நீங்கள் எல்லா மக்களுக்கும் நடு நிலையான நீதியை நிலை நாட்டக்கூடிய நாட்டின் அதிபர் என்ற வகையிலும் நீங்கள் கரிசனை கொண்டு இந்த முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால பாதுகாப்பிற்கும் , நாட்டின் பாதுகாப்பிற்கும் எதிர்காலத்தில் இந்த நாட்டில் சிங்கள மக்கள்,முஸ்லிம் மக்கள்,தமிழ் மக்கள் என்று எல்லோரும் ஒரு தாய் மக்கள் போல் வாழ்ந்து நாட்டின் அமைதி உருவாக நீங்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் அப்போதுதான் இந்த நாட்டையும் கூட முன்னேற்றத்துக்கு கொண்டு செல்ல முடியும்.

இல்லாவிட்டால் இப்படி பட்ட இனவாதிகள் இந்த நாட்டை மட்டுமல்ல உங்களையும் உங்கள் தலைமையில் உள்ள அரசையும் பூண்டோடு அழித்து விடுவார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

முன்னாள் ஜனாதிபதி #மஹிந்தவுக்கு வந்த நிலைமை உங்களுக்கு வரக்கூடாது என்பதுதான் எங்களுடைய எண்ணமாக இருக்கிறது.

ஆகவே ஒற்றுமையை நிலை நாட்டி எல்லா மக்களும் தத்தமது மார்கத்தை பின்பற்றி ஒன்றாக நிம்மதியாக வாழ வழிவகுத்து தாருங்கள் என இந்த நாட்டின் குடிமகன் என்றவகையில் வேண்டுகிறேன்.

No comments

Powered by Blogger.