Header Ads



பல்டியடிக்க தயாராகும் அரசியல்வாதிகள் - இரகசிய பேச்சுக்களும் ஆரம்பம்

-Vi-

பொது எதிர்க்கட்சியினர் பலர் அரசுடன் இணைவதற்கான இரகசிய பேச்சுக்களை நடத்தி வருவதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

கடந்த கால ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டதே இம் மாற்றம் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளதாகவும் அவ்வாட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருகிறது.

இது தொடர்பாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது;

கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளில் மந்த நிலை காணப்பட்டபோதும் தற்போது விசாரணைகள் துரிதப்பட்டுள்ளதோடு கைதுகளும் இடம்பெறுகின்றன.

எதிர்வரும் வாரங்களில் மேலும் பலர் கைதாகலாம் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பொதுஎதிர்க்கட்சி மஹிந்த அணி ஆதரவாளர்கள் பலர் குழப்பம் அடைந்துள்ளனர்.

விசேடமாக இவ்அணியில் இருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதோடு இது தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

கடந்த வாரம் இக் குழுவினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்ருமான துமிந்த திஸாநாயக்கவையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவையும்  தனித்தனியாக சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பொது எதிர்க்கட்சியை சார்ந்த பலர் எதிர்வரும் வாரங்களில் அரசுடன் இணையலாம் என்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

பொது எதிரணிக்கு ஆதரவு வழங்கிய சுதந்திரக் கட்சியினரின் இம் மனமாற்றத்திற்கு நாமல் ராஜபக் ஷ எம்.பி. யின் கைது மூல காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில் மிக விரைவில் கடந்த ஆட்சிக் காலத்து முக்கிய 4 அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.