Header Ads



வவுனியாவிலும், ஓமந்தையிலும் பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்

வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதில் ஏற்பட்டிருந்த இழுபறி நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க வவுனியாவிலும், ஓமந்தையிலும் இரு வெவ்வேறான பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதென அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று (27) தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ராஜித இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்பதில் இரண்டு தரப்புகளில் மாற்றுக் கருத்துக்கள் நிலவின.

நேற்றைய செய்தியாளர் மாநாட்டின் போது;

வடக்கின் மீள்குடியேற்றச் செயலணி அமைக்கப்பட்டமை, அதில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனோ அல்லது மாகாண சபை அமைச்சர்களோ இடம்பெறாமை, அதனால் எழுந்துள்ள பெரும் சர்ச்சைகள் தொடர்பில் அரசாங்கத்தின் பதில் என்ன? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதை அறிய முடிகிறது. எவ்வாறெனினும் வட மாகாண சபை உள்வாங்கப்படாமை தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன் என்று அமைச்சர் இதற்குப் பதிலளித்தார்.

பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் இம்முறை அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஹரிசன் இப்பிரச்சினையைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

அதற்குப் பதிலளித்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வட மாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரனுடன் இணைந்து அது தொடர்பில் இறுதி முடிவை எடுக்குமாறு அமைச்சர் ஹரிசனைப் பணித்துள்ளார்.

இந்த பிரச்சினை அமைச்சரவையில் நீண்ட நேரம் ஆராயப்பட்ட போது அமைச்சர்கள் சிலர் அது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள பிரதமர் வடக்கிற்கான பொருளாதார நிலையமானது வவுனியா நகரப் பகுதியிலோ ஓமந்தையிலோ அல்லது மாங்குளத்திலோ அமைய வேண்டியுள்ளது. எனினும் இந்த விவகாரம் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால் வவுனியா மாவட்டத்திற்கும் மன்னார் மாவட்டத்திற்கும் வெவ்வேறாக இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இறுதி முடிவை மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுடன் இணைந்தே மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பிரதமர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

அதனையடுத்து அமைச்சர் ஹரிசன் உடனடியாகவே இது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிணங்கவே வவுனியாவிலும் ஓமந்தையிலும் இரண்டு பொருளாதார மத்திய நிலையங்கள் அமையவுள்ளன.

1 comment:

Powered by Blogger.