Header Ads



அனாதையாக விடப்பட்ட முதியவர் ஸ்ரீனிவாஸ் - இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்


தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் இறுதிச் சடங்கை, முஸ்லிம் பெண் ஒருவர் முறைப்படி செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யாகூப் பி என்ற பெண் தனது கணவருடன் இணைந்து முதியோர் காப்பகம் நடத்தி வருகிறார். இவரது இல்லத்தில் தங்கியிருந்த 70 வயதான கே. ஸ்ரீனிவாஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கை, கால்கள் பாதி செயலிழந்த நிலையில், இவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் யாகூப் பி மீட்டார். அப்போது தனது குடும்பத்தால் அனாதையாக விடப்பட்டதாக ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக முதியோர் இல்லத்தில் இருந்த ஸ்ரீனிவாஸ் உயிரிழந்தது குறித்து அவரது மகனுக்கு தெரிவிக்கப்பட்ட போது, தான் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதால், இந்து முறைப்படி சடங்குகளை செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார்.

யாகூப் பியின் கணவரும் ஊரில் இல்லை. இந்த நிலையில், ஸ்ரீனிவாஸின் இறுதிச் சடங்குகளை, ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்த போதும், தானே முன்வந்து தனது தந்தைக்கு செய்வது போல செய்து முடித்தார் யாகூப் பி.

இடுகாட்டில், அனைத்து சடங்குகளையும் முறைப்படி செய்து, அவரது உடலுக்கு தீமூட்டினார்.

இப்போதும் மனித நேயம் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது இந்த சம்பவம்.

No comments

Powered by Blogger.