July 10, 2016

ஈராக் மீது போர் - புழுவாய் துடிக்கும், பிரிட்டனின் முன்னாள் துணை பிரதமர்

அமெரிக்கா தலைமையில் 2003-ம் ஆண்டு ஈராக் நாட்டின் மீது போர் தொடுக்க உடன்பட்ட பிரிட்டனின் முடிவு சட்டவிரோதமானது என பிரிட்டன் நாட்டின் முன்னாள் துணை பிரதமர் ஜான் பிரெஸ்காட் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் வளம்மிக்க ஈராக் நாட்டின் ஆட்சியாளர் பொறுப்பில் இருந்து சதாம் உசேனை தூக்கி எறிய வேண்டும் என அமெரிக்கா முடிவு செய்தது. இந்த முடிவுக்கு அமெரிக்காவின் நட்பு நாடுகளான பிரிட்டன், ஆஸ்திரேலியா, போலாந்து உள்ளிட்ட நாடுகளின் துணையோடு ஈராக்கிய படைகளுடன் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ராணுவத்தின் முப்படைகளும் கடந்த 2003-ம் ஆண்டு போரில் குதித்தன.

104 மாதங்கள் நீடித்த இந்தப் போரின் விளைவாக ஈராக் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்ததுடன், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதிபர் பதவியில் இருந்து சதாம் உசேன் தூக்கியெறியப்பட்டார். ஷியா இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 30-12-2006 அன்று சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். 

அதேநாளில் ஈராக் நாட்டின் சட்டம்-ஒழுங்குக்கும், அமைதிக்கும் சாவுமணி அடிக்கப்பட்டது. ’தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்பதுபோல் அராபிய அல் கொய்தா முதல் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள்வரை ‘ஜிஹாதி’ என்ற பெயரில் ஆடிவரும் வன்முறை கோரத்தாண்டவத்துக்கு அன்றன்றாடம் நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் அங்கு பலியாவது தொடர்கதையாகி வருகிறது.

எந்த மனிதநேயத்தை காப்பாற்றப் போவதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் ஈராக்கின்மீது போர் தொடுத்தனவோ..,? அதே மனிதநேயம் அங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்கா தலைமையில் 2003-ம் ஆண்டு ஈராக் நாட்டின் மீது போர் தொடுக்க உடன்பட்ட பிரிட்டனின் முடிவு சட்டவிரோதமானது என பிரிட்டன் நாட்டின் முன்னாள் துணை பிரதமர் ஜான் பிரெஸ்காட் தெரிவித்துள்ளார். பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேருக்கு உதவியாக இவர் அப்போது துணை பிரதமராக பணியாற்றி வந்தார்.

இதுதொடர்பாக, ‘சண்டே மிரர்’ பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், ஈராக் விவகாரம் தொடர்பாக அமைதியான முறையில் தீர்வு கண்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும், ஈராக்கின் பலத்தை சரியாக புரிந்துகொள்ளாமலும் அமெரிக்காவின் தலைமையிலான அந்தப் போரில் இறங்கியதற்காக வருத்தம் தெரிவிப்பதுபோல் ஜான் பிரெஸ்காட் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பிரிட்டன் நாட்டின் மேல்சபை (பிரபுக்கள் சபை) எம்.பி.யாக பதவி வகித்துவரும் ஜான் பிரெஸ்காட், ‘ஆட்சி மாற்றம் என்ற ஒரே காரணத்துக்காக ஈராக் மீது போர் தொடுப்பது சட்டவிரோதமானது என்று கடந்த 2004-ம் ஆண்டு அந்நாள் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் கோபி அன்னன் சுட்டிக் காட்டியிருந்தார். 

அன்று அவர் கூறியது சரிதான் என்பதை மிகுந்த சோகத்துடனும், கோபத்துடனும் இப்போது நான் நம்புகிறேன். ஈராக் மீது படையெடுக்கும் முடிவு மற்றும் அந்த படையெடுப்பால் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான, பேரழிவான எதிர்விளைவுகளுடனே எனது எஞ்சிய வாழ்நாளை நான் கழிக்க வேண்டியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

4 கருத்துரைகள்:

இப்போ கவலைப்பட்டு ஒன்றும் மாண்டவர்கள் போன சந்தோஷம் திரும்ப கிடைக்குமா

Ai UN! Can you conduct the war crime investigation against USA and Britain related with Iraq now?
There are lots of witness in the world.

உனக்கு எல்லாம் அல்லாஹ் தண்டனை தர ஆரம்பித்து விட்டான் உன் மன அமைதியற்ற மன வேதனை கடுமையான தண்டனை தான்

Post a Comment