Header Ads



ஸகாதுல் பித்ர் ஒரு விளக்கம

-மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி-

ஸகாதுல் ஃபித்ர்'' என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.

 எவ்வளவு? எவர்களுக்காக? 
ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ''ஸகாத்துல் ஃபித்ரை'' அனைத்து மனிதர்கள் மீதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ''ஸாஉ'' பேரீத்தம்பழம் அல்லது ஒரு ''ஸாஉ'' கோதுமை சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்''. (அறிவிப்பவர் : அலி இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் :புகாரி, முஸ்லிம், முஅத்தா)

ஒரு ''ஸாஉ'' உணவு, அல்லது ஒரு ''ஸாஉ'' கோதுமை, அல்லது ஒரு ''ஸாஉ'' பேரீத்தம் அல்லது ஒரு ''ஸாஉ'' தயிர் அல்லது ஒரு ''ஸாஉ'' வெண்னை என்பவற்றை ஸகாதுல் ஃபித்ராவாக நாம் வழங்குபவராக இருந்தோம்'' என அபூ ஸயீதில் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).

ஸாஉ'' என்பது நடுத்தரமான ஒரு மனிதரின் கைகளால் நான்கு அள்ளு அள்ளி வழங்குவதைக் குறிக்கும். இது அறபுகளிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும். சாதாரணமாக அரிசி என்றால், ஒரு ''ஸாஉ' என்பது 2.3 kg. ஐக் குறிக்கும் என்பர்.  இந்த அளவு உணவையோ, உணவுத் தானியத்தையோ வழங்கவேண்டும். பெருநாள் செலவு போக மீதமிருக்கும் அளவு பொருளாதாரம் உள்ள அனைவரும் இதை வழங்கவேண்டும். ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அனைவருக்காகவும் இதை வழங்கவேண்டும்.

உதாரணமாக, ஒருவரிடம் மூன்று பிள்ளைகள், ஒரு மனைவி இருக்க, அவரது பொறுப்பில் அவரது பெற்றோர்களுமிருந்தால் தனது மூன்று பிள்ளைகள், தான், தனது மனைவி, பெற்றோர் இருவரும் என மொத்தமாக ஏழு பேர்களுக்காக ஏழு ''ஸாஉ'' உணவு வழங்க வேண்டும். எனவே, இந்த ஸகாத் அனைவர் மீதும் விதியாகின்றது! சிறுவர்கள், வாய்ப்பற்ற முதியவர்கள் என்பவர்களுக்கும் விதியாகின் றது. அதை அவர்களது பொறுப்புதாரிகள் நிறை வேற்ற வேண்டும்.

 எப்போது? எதற்காக! 
நோன்பாளி வீண் விளையாட்டுக்கள், தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், அதற்குப் பரிகாரமாக அமைவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காகவும்'' ''ஸகாதுல் ஃபித்ரை'' நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடமையாக்கினார்கள்.

யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ''ஸகாத்''தாகும். யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்கப்படும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்'' (அபூ தாவூத், இப்னு மாஜா).

இந்த நபி வழி ''ஸகாதுல் ஃபித்ரா''வின் நோக்கம், அது வழங்கப்பட வேண்டிய கால எல்லை என்பவற்றை விபரிக்கின்றது.

நோன்பாளிக்கு நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்குப் பரிகாரம் என்பது முதல் காரணமாகும்.

நோன்பு கடமையான சிறுவர்களுக்காகவும் ''ஸகாதுல் ஃபித்ர்'' வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு முதல் காரணம் பொருந்தாவிட்டாலும், பெருநாள் தினத்தில் ஏழை, எளியவர்கள் யாரும் உண்ண உணவு இன்றி இருக்கக் கூடாது, என்பது இரண்டாவது காரணமாகும். இது இவர்களுக்கும் பொருந்தும்.

இதனை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் வழங்கிவிட வேண்டும். இது வழங்கப்பட வேண்டிய நேரத்தின் இறுதிக் காலமாகும். பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதனை வழங்குபவராக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் திகழ்ந்தார்கள். (அபூதாவூத்).

மற்றுமொரு அறிவிப்பில், இது ஸஹாபாக்களின் நடைமுறையாக இருந்தது என்ற கருத்தைப் பெறமுடிகின்றது. ''அதை பெற்றுக் கொள்பவர்களுக்கு நாம் வழங்குபவர்களாக இருந்தோம். நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதை வழங்கு பவர்களாக இருந்தார்கள்.'' (புகாரி)

எனவே, பெருநாளைக்கு ஓரிரு தினங்க ளுக்கு முன்னர் இருந்து இதை வழங்க ஆரம் பிக்கலாம். 

 எங்கே? எவர்களுக்கு? 
ஸகாதுல் ஃபித்ரை'' அவரவர் வகிக்கும் பகுதிக்கே விநியோகிக்க வேண்டும். அதுவும் ஏழை எளியவர்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை கூட்டாக சேகரித்து வழங்கியுள்ளார்கள். சிலர் ''ஸகாதுல் ஃபித்ரா'' என்ற பேரில் ''ஃபித்ரா'' கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு ''ஃபித்ரா'' வழங்குவது பொருத்தமல்ல. சொந்த ஊரிலுள்ள ஏழைகளுக்கு வழங்கி மீதமிருந்தால் வெளியூர் ஏழைகளுக்கு வழங்கலாம். அஃதின்றி வெளியூர்களிலிருந்து ''ஃபித்ரா'' கேட்டு வருபவர்களுக்கு ஒரு சுண்டு இரு சுண்டு அரிசி அல்லது சில்லறை வழங்குவது ''ஃபித்ரா''வில் அடங்குமா என்பது சிந்திக்க வேண்டியதாகும்.

எதை வழங்குவது?
ஸகாதுல் ஃபித்ரா''வாக ஒரு ''ஸாஉ'' உணவுக்கான பணத்தை வழங்க முடியுமா? எனற விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிகழ்கின்றது.

பெரும்பாலான அறிஞர்கள் உணவுப் பொருளையே வழங்க வேண்டும் என்கின்றனர். இது ஒரு இபாதத்தாக இருப்பதால் இபாதத்தை ஏவப்பட்ட விதத்தில் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காமல் செய்வது தான் சரியானது என்ற அடிப்படையில் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.

பணத்தையும் ''ஃபித்ரா''வாக வழங்கலாம் எனக்கூறுவோர் ஏழைகளுக்கு இது நன்மையாக அமையும் என்ற காரணத்தைக் கூறி இதை ஆமோதிக்கினறனர். இமாம் அபூ ஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இக்கருத்தைக் கொண்டுள்ளார்.

இதில் முதல் கருத்தே மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கின்றது. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பலின் மகன் ''எனது தந்தை 'ஸகாதுல் ஃபித்ரா'வுக்குப் பகரமாக அதன் அளவுக்குப் பணம் வழங்கப்படுவதை வெறுப்பவராக இருந்தார். பணம் வழங்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாமோ என நான் அஞ்சுகின்றேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார். (அல் மஸாயினுல் இமாம் அஹ்மத்., பக். 171 அல்மஸஅலா., 647)

இமாம் இப்னு குதாமா அவர்களும் இது அங்கீகரிக்கப்படாது ''தவி முஃனி''யில் குறிப்பிடுகின்றார்.

இமாம் ஷவ்கானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் குறிப்பிட்ட பொருளிலிருந்து தான் ''ஸகாதுல் ஃபித்ர்'' வழங்கப்பட வேண்டும். குறித்த பொருள் இல்லாத போது, அல்லது ஏதேனும் ஒரு நிர்ப்பந்தத்தால் அன்றி அதன் பெறுமதிக்குப் பணம் வழங்க முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகின்றார்கள். குறித்த ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு ''ஸாஉ'' வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து ''ஸாஉ'' என்ற அளவு தான் முக்கியம். அதன் பெறுமதி கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்பது புலப்படுகின்றது என இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ''ஷரஹ் ஸஹீஹ் அல் முஸ்லிமில்'' குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் ''அல் மஜ்முஉ''விலும் இக்கருத்தை விளக்கியுள்ளார்கள்.

இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்தான் பணத்தை வழங்கலாம் என்று கூறியுள்ளார்கள். ஏனைய அறிஞர்கள் உணவுத் தானியங்களை வழங்க வேண்டும் என்றும், ஏதேனும் நிர்ப்பந்தம் இருந்தால் மட்டும் பணத்தை வழங்கலாம் என்றும் கூறியுள்ளனர். ஒரு ஆட்டை அல்லது மாட்டை ஸகாத் கொடுக்கவேண்டும் எனும் போது, அதன் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்பது போல், இதுவும் கூடாது என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறே, இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறித்த பொருட்களின் அளவு ஒரே அளவாக இருந்தாலும் பணமாக கணக்கிடும் போது, அதன் அளவுகள் மாறுபடும். எனவே,

ஸகாத்துல் ஃபித்ர்'' இபாதத்தாக இருப்பதால் அதைக் குறிப்பிட்ட விதத்திலேயே செய்ய வேண்டும். ஏழைகளின் நலன் நாடியே பணத்தை வழங்கலாம் என்று கூறப்படுகின்றது. தெளிவான ஆதாரம் இருக்கும் போது, ''இஜ்திஹாத்'' செய்வதற்கு இடம் இல்லை. நபித்தோழர்களுக்கு மத்தியில் ஏராளமான ஏழைகள் இருந்தபோதும், அவர்கள் உணவுத் தானியங்களையே வழங்கினர். பணத்தை வழங்கவில்லை. எனவே, இது பின்னால் வந்ததொரு கருத்தாகவும், நடைமுறையாகவும் திகழ்கின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், கலீபாக்களும் உணவு வழங்கிய நடைமுறைக்கு இது முரண்பட்டதாகும். நிர்ப்பந்த நிலைகளில் அனுமதிக்கப்பட்ட பணம் வழங்கலாம் என்ற கருத்து இன்று ''ஃபித்ரா'' வாகப் பணம் தான் வழங்கப்படவேண்டும் என்ற அளவுக்கு, சுன்னாவை மிஞ்சி வளர்ந்துவிட்டது. எனவே ''ஃபித்ரா''வை உணவாகவே வழங்க வேண்டும். என்றாலும் நிர்ப்பந்தமான, தவிர்க்க முடியாத நிலையில் இருப்பவர்கள் மட்டும் மாற்று வழிகளைக் கைக்கொள்ளலாம்.

 ஒரு ஆலோசனை: 
ஏழைகளுக்கு உணவை வழங்குவது அவர்களுக்குப் போதியதாக இருக்காது என்று கருதுபவர்கள் ''ஃபித்ரா''வாக குறித்த அளவுக்கு உணவை வழங்கி விட்டு மேலதிக தர்மமாக வேண்டுமானால் பணத்தையோ, வேறு பொருட்களையோ வழங்கலாம். பணத்தை ''ஸகாதுல் ஃபித்ரா''வாக ஆக்காமல், உணவை ''ஸகாதுல் ஃபித்ரா''வாக ஆக்கி, பணத்தை மேலதிக தர்மமாக ''ஸதகா''வைச் செய்யலாம். இது அவசியம் என்பதற்காகக் கூறப்படவில்லை. அதிக வசதியுள்ளவர்கள், ஏழைகள் மீது அனுதாபம் கொண் டவர்கள் அதற்காக மார்க்க நிலைப்பாட்டில் மாற்று முடிவு எடுக்காது, செயல்படுவதற்காகவே இவ்வாலோசனையாகும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

4 comments:

  1. In the time of our beloved rasool they had money (deenar and dirhams) but they orderd to give goods insted of money as sadakathul fitr.

    ReplyDelete
  2. Jazakallah'hair... to Hazrath Ismail Salafi for his meticulous clarification.

    ReplyDelete
  3. (சென்ற வருடம் எழுதப்பட்ட ஆக்கமாக இருப்பினும் எல்லோருக்கும் மிகவும் பிரயோசனமானது, படிப்போம் பயனடைவோம்)

    அன்பான மடவளைவாழ் மக்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,

    ஹிஜ்ரி 1436ஆம் ஆண்டின் ரமழான் மாதத்தின் நோன்பை நோற்கும் அனைத்து நல்லுள்ளங்களினதும் நோன்பை ஏகவல்லவன் அல்லாஹ் பொருந்திக் கொண்டு அதற்கான கூலியாக சொர்க்கத்தை வழங்குவானாக எனும் பிரர்த்தனையுடன் எனது இச்சிறு வேண்டுகோளை உங்களிடம் எத்திவைக்கின்றேன்.

    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
    அறிவிப்பாளர்: இப்னு உமர் (றழி) அவர்கள்
    (ஆதாரம் : புஹாரி -1503-)

    எனவே "ஸகாதுல் பித்ர்" ரமழானை அடைந்த சிறிய, பெரிய அனைவர் மீதும் கட்டாயக் கடமையாக இருக்கின்றது.
    இப்படிப்பட்ட கடமையை சரியாக நிறைவேற்றுவதன் மூலமே ரமழானின் பரிபூரண நன்மையை நாம் அடைந்து கொள்ள முடியும்.

    அதன் அடிப்படையில் ஒரு கூட்டுச் செயற்பாடாக வருடாவருடம் மடவளையில் பெரியபள்ளிவாயல் மூலமாக ஸகாதுல் பித்ர் சேகரித்து விநியோகிக்கப்படுகின்றது. "அல்ஹம்துலில்லாஹ்"

    எனவே இம்முறையும் மடவளை பெரிய பள்ளிவாயலில் உத்தியோகபூர்வமாக சேகரிப்பதற்காக வேண்டி மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்கத்தில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டு, அதில் ஒவ்வொருவருக்கும் கடமையாகும் அரிசியின் அளவு 2kg 350gm என்று குறிப்பிட்டிருந்தார்கள். (பார்க்க :படம்-01)

    ஆனால் இந்த அளவீடு பிழையானதாகும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு "ஸாவு" என்று நிர்ணயித்திருந்தார்கள்.

    ஒரு "ஸாவு" என்பது நான்கு "முந்து"க்களைக் கொண்டது.

    இம்முறை நாங்கள் மதீனா பள்ளிவாயலில் புஹாரி ஹதீஸ் கிரந்தத்தை படித்துக்கொண்டிருந்த போது எங்களுடைய ஆசிரியர் "கலாநிதி ழியாஉர் ரஹ்மான் அல்-அஃலமி" அவர்களிடம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபயோகித்த "முந்து" என்பதின் மாதிப்பிரதி இருந்தது. எனவே, அவைகளை அவர் எங்களுக்காக வேண்டி பிரதிபண்ணி (பார்க்க :படம் -02) "இஜாஸா"வையும் (அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொடக்கம் கலாநிதி அஃலமி வரையிலான பெயர்ப்பட்டியல் தொடர்) தந்தார்.

    எனவே, அந்த "முந்தை" பயன்படுத்தி ஒருவருக்கு கடமையாகும் "ஸகாதுல் பித்ர்" அளவீட்டை நான் அளந்து பார்த்த பொழுது, அதன் நிறையாக
    நாட்டரிசி 2kg 700gm ஆகவும்
    சம்பா அரிசி 2kg 800gm ஆகவும் இருந்தது.

    இந்த அளவீடு (அதாவது நாட்டரிசி 2kg 700gm -ஏனெனில் அனைவரும் சாதாரணமாக பயன்படுத்தக் கூடியது நாட்டரிசி-) மடவளை பெரியபள்ளியினால் வெளியிட்டிருந்த அளவீடான 2kg 350gm ஐ விட 350gm அதிகமானதாகும்.

    ஆதலால் சரியான அளவீடான 2kg 700gm அரிசியை கொடுத்து ரமழானின் முழுப்பயணையும் பெருமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

    ஏனெனில், இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாதுல் பித்ரை நோன்பாளியின் வீண், விளையாட்டான (செயற்பாடுகளுக்கு) தூய்மையாகவும், ஏழைகளுக்கான உணவாகவும் கடமையாக்கினார்கள்.
    (ஆதாரம் : அபூதாவூத்)

    ((குறிப்பு: இது பற்றிய விழிப்புனர்வை மடவளை பெரியபள்ளிவாயல் நிர்வாகத்திடம் எத்திவைக்கப்பட்டுள்ளது))

    இப்படிக்கு
    அஷ் ஷைக் ரஸீன் அக்பர் மதனீ

    ReplyDelete

Powered by Blogger.