Header Ads



சுவிஸ் வங்கி கணக்கு, எப்படி செயல்படுகிறது..?

(விகடன்)

இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. 'சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வந்தால் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சம் கிடைக்கும்' என பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டிருந்தார். அவ்வப்போது கறுப்புப் பணம் குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி, கறுப்புப் பணத்தை வரும் செப்டம்பர் மாதம் 30 ம் தேதிக்குள் கணக்கு காண்பித்து, அதற்கான வரியை நவம்பர் மாதத்தில் செலுத்திவிடுமாறு கடந்த வாரம் பிரதமர் மோடி கூறியிருந்தார். 

இந்தியாவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், பெரும்பாலும் அந்த பணத்தை தங்களது சுவிஸ்  வங்கி கணக்கில் வைத்திருக்கிறார்கள். எனவே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலை வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியை அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கும். பாஜக, காங்கிரஸ் என   இதில் வித்தியாசம் காண முடியாது. கேட்கும் போதெல்லாம் ஆளும் கட்சியும் ஏதாவது ஒரு பதிலை சொல்லி வைப்பார்கள். 

இந்தியர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளில் அனைத்திலிருந்தும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்படுகிறது. பெரும் பணக்காரர்கள் விரும்பி முதலீடு செய்யும் சுவிஸ் வங்கியில், அப்படி என்னதான் இருக்கிறது என்பது குறித்து கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி. கார்த்திகேயனிடம் கேட்டோம்.

"சுவிஸ் வங்கியில் யார் வேண்டுமானாலும் கணக்கு துவங்க முடியும். மேலும் அந்த வங்கியில் முதலீடு செய்யப்படும் பணம் குறித்து, எந்தவிதமான கேள்வியும் கேட்கமாட்டார்கள். சுவிஸ் வட்டி என்பது 2-3 சதவிகிதம்தான் இருக்கும். வங்கி கணக்கு துவங்குவதற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஆன்லைனிலேயே செய்துவிடலாம். அங்கு முதலீடு செய்யப்படும் பணத்துக்கு வரி கிடையாது.

வங்கி கணக்கு எண் மட்டும் இருந்தாலே போதும், பணத்தை வெளியே எடுத்துவிட முடியும். அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு எந்தவிதமான நிபந்தனையும் கிடையாது. மேலும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்படும் தொகை யாருடையது என்ற தகவலை, எந்த காரணத்தை முன்னிட்டும் வெளியிடமாட்டார்கள். அந்த வங்கியின் ஊழியர்களும் அதுகுறித்து வெளியே பேசக் கூடாது. ஏதாவது பேசினால் அது சட்டப்படி தவறு ஆகும். கடந்த 300 ஆண்டுகளாக இந்த தகவல்களை சுவிஸ் வங்கி பாதுகாத்து வருகிறது.

சுவிட்சர்லாந்துக்கு,  அதிக அளவில் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்வார்கள். இதனால் இங்கு விலைவாசி உயர்வு என்பதே இருக்காது. இதன் காரணமாக அந்த நாட்டு பணத்தின் மதிப்பு எப்போதுமே வலிமையானதாக இருக்கிறது. அதாவது அங்கு பணவீக்கம் என்பது இருக்காது. இதனால் பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்பு இல்லை. மேலும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்படும் பணம், பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்படும். இதில் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் டெபாசிட் செய்யப்படும் தொகைகளுக்கு வட்டி வழங்கப்படுகிறது. 

இப்படி பல காரணங்கள் இருப்பதால், உலக நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் சுவிஸ் வங்கியில் தங்களது பணத்தை முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இந்திய அரசின் அனுமதியோடு ஒவ்வொரு வருடமும் 2.5 லட்சம் டாலர் அளவுக்கு வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடியும். முதலீட்டு விவரத்தை வருமான வரி தாக்கலின் போது குறிப்பிட வேண்டும். ஆனால் பெரும் பணம் வைத்திருப்பவர்கள் சிலர்,  இந்த வரையறைக்கும் அதிகமாக முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு குறித்து எந்தவிதமான தகவலும் தெரிவிப்பதில்லை.

ஆனால் கடந்த சில வருடங்களாக, இந்திய அரசு கறுப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. கறுப்பு பணத்தை மீட்பதற்காக, சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்க, கடந்த 2011 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வரி ஏய்ப்பு செய்த கறுப்பு பணம் என ஆதாரத்துடன் தெரிவித்தால், அந்த வாடிக்கையாளரின் விவரத்தை சுவிஸ் வங்கி இந்தியாவுக்கு வழங்கும். இதன் அடிப்படையில் சமீபத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணத்தை பதுக்கியவர்களின் விவரத்தை சுவிஸ் வங்கி, இந்தியாவுக்கு வழங்கியுள்ளது" என்றார்.  

இப்படி இந்தியாவில் கறுப்பு பணத்துக்கு எதிராக, தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பதன் காரணமாக சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யும் இந்தியர்களின் பணம்  குறைந்துள்ளது என சுவிஸ் வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

அதே சமயம் சுவிஸ் வங்கியில் செய்யப்படும் முதலீட்டில், ஒட்டு மொத்தமாக 4 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது. மேலும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் விவரங்களை உடனடியாக பகிர்ந்து  கொள்ளும் வகையில் 2017ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட உள்ளது.  ஏற்கனவே ஹெச்எஸ்பிசி வங்கி, 628 முதலீட்டாளர்களின் விவரத்தை வழங்கியுள்ளது. இதில் வருமான வரி அலுவலர்கள் 400 நபர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். 

கறுப்பு பணத்துக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக முதலீடு செய்யும் அளவு மட்டும்தான் குறைந்துள்ளது. ஆனால் ஏற்கனவே முதலீடு செய்துள்ள கறுப்பு பணத்தில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது. அரசு இன்னும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர முடியும். அந்த முயற்சிகளை இந்திய அரசு எடுக்குமா என்பதுதான் தெரியவில்லை!

No comments

Powered by Blogger.