Header Ads



கொழும்பில் மகி்ந்த அணி குழுப்பம், விளைவிப்பதை தடுக்க தீவிர பாதுகாப்பு

அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும், ஜனசட்டன பாதயாத்திரை கொழும்பை அடையும் போது, அமைதியைக் குழப்பும் வகையிலான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு முழு அளவில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் பேராதனையில் இருந்து தொடங்கப்பட்ட பாதயாத்திரை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கின்றது. இந்தப் பாதயாத்திரை நாளை மறுநாள் கொழும்பு நகரை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதயாத்திரையில் வருவோர், கொழும்பு நகருக்குள் அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்த முனைந்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக, சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட காவல்துறையை தயார் நிலையில் வைத்திருக்க தேசிய பாதுகாப்புச் சபை முடிவு செய்துள்ளது.

பொதுஅமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்த, அல்லது வன்முறையைத் தோற்றுவிக்கும் திட்டங்கள் ஏதும் கூட்டு எதிரணி ஆதரவாளர்களுக்கு இருக்கிறதா என்று தகவல்களைச் சேகரிக்க புலனாய்வுப் பிரிவினர் அதிகளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், நிலைமைகளைச் சமாளிப்பது குறித்து ஏற்கனவே, சிறிலங்கா காவல்துறை மா அதிபர், பிரதி காவல்துறை மா அதிபர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, கொழும்பு நகரப்பகுதிகள் முழுவதும், நாளை மறுநாள் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டு எதிரணியினர் குழப்பங்களை விளைவித்து கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றினால்,, சட்டம் ஒழுங்கு அமைச்சு கோரிக்கை விடுத்தால், உதவத் தயார் நிலையில் முப்படைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.