Header Ads



'சுவாதி கொலையில், எனக்கு எந்த தொடர்புமில்லை - ராம்குமார் பரபரப்பு தகவல்

(விகடன்)

சென்னை: சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ள ராம்குமார், தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்ததாகவும் பரபரப்பு கிளப்பியுள்ளார்.

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த 24 ம் தேதி சூளைமேட்டை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி என்பவர், மர்ம நபரால் கழுத்தில் வெட்டப்பட்டு  கொலையானார். இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அவரது சொந்த ஊரான  மீனாட்சிபுரத்தில் கைதுசெய்யப்பட்டார். கைது முயற்சியின்போது, அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

சிகிச்சைக்குப்பின் சென்னை கொண்டுவரப்பட்ட ராம்குமார், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ராம்குமாரின் சார்பாக இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ராம்குமாரின் வழக்கறிஞர் தாக்கல் செய்த அந்த மனுவில், தனக்கும் சுவாதியின் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தெரிவித்துள்ள ராம்குமார், கைது செய்யப்பட்டபோது தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினருடன் வந்தவர்கள்தான் தன்னை பிளேடால் கழுத்தை அறுத்ததாகவும் சொல்லியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ராம்குமாரின் வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, “ கொலை சம்பவத்துக்கு முன், 2 நாட்களுக்கு முன்பே சுவாதியை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது. சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை. போலீசாருடன் சென்ற நபர்கள்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்துள்ளனர். உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே எங்கள் கட்சிக்காரர் மீது போலீஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. உயர் நீதிமன்றம் 2 நாட்கள் கெடு விதித்ததால் கைது செய்துள்ளனர்” என்று கூறினார்.

சுவாதி கொலையில் பல சட்ட முரண்கள் இருப்பதாக கூறப்பட்டுவரும் நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் அளித்த இந்த பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது.

No comments

Powered by Blogger.