Header Ads



ஜம்இய்யத்துல் உலமாவின் வருடாந்த, பொதுக் கூட்டத்தில் என்ன நடந்தது..?

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த 2016.07.24 (1437.10.19) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி பெரிய ஜும்ஆ(கண்டி லைன்) மஸ்ஜிதில் கௌரவ தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஜம்இய்யாவின் 25 மாவட்டக் கிளைகளினதும், 120 பிரதேசக் கிளைகளினதும் பதவிதாங்குனர்கள் இப்பொதுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

காலை 10:00 மணியளவில் ஆரம்பமான இக்கூட்டம் பிற்பகல் 2:00 மணி வரை நடைபெற்றது. கிறாஅத்துடன் ஆரம்பமான நிகழ்வுகளில் வரவேற்புரையை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்- ஷைக் எச் உமர்தீன் அவர்கள் கண்டி மாவட்டத்தில் இப்பொதுக்கூட்டம் நடைபெறுவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதாகவும் இம்மாவட்ட உலமாக்கள் வருகை தந்த அனைவரையும் பெருமனதோடு வரவேற்பதாகவும் கூறினார்;.
அதனையடுத்து பொதுச்செயலாளர் அஷ்- ஷைக் எம்.எம்.ஏ முபாறக் செயற்பாட்டறிக்கையைச் சமர்ப்பித்தார். கடந்த மூன்றாண்டுகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா செய்த சமய மற்றும் சமூக சேவைகளை மிகவும் விரிவாக எடுத்துக் கூறி அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் மகத்தான சொத்தாகிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பேணிப் பாதுகாப்பது நம் எல்லோரினதும் கடமையாகுமென்றார். முன்னாள் தலைவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் எப்போதும் ஒத்துழைக்கும் பரோபகாரிகளுக்கும் நன்றி கூறினார்.

தொடர்ந்து பொருளாளர் அஷ்- ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்கள் ஜம்இய்யாவின் கடந்த மூன்றாண்டுகளுக்கான  வரவு செலவுகளுக்கான கணக்கறிக்கையை வாசித்தார்.

அத்துடன் 2012 ஆம் ஆண்டு முதல் அமுலிலிருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் உப தலைவர் அஷ்- ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் சபையினரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இறுதியாக தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில் ஜம்இய்யாவுக்குட்பட்ட பலரையும் நினைவு கூர்ந்து, வருகை தந்துள்ள சகலரும் ஜம்இய்யாவின் பெறுமதியை நன்குணர்ந்து மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உலமாக்களின் புரிந்துணர்வுகள் மூலம் தான் சமூகத்துக்கு நல்ல பணியைச் செய்ய முடியும் என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்- ஷைக் எஸ்.எல் நவ்பர் நன்றியுரையினை வழங்கினார்.

தொடர்ந்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இப்பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட பின்வரும் ஏழு தீர்மானங்களும் அஷ்- ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் அவர்களால் வாசிக்கப்பட்டது. 

1)    எமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இன நல்லிணக்கத்துடன் வாழும் நிலையில், சில இனவாத சக்திகளின் செயற்பாடுகள் பொதுவாக நாடும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் எதிர் கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளன. பொதுவாக நாட்டில் வாழும் அனைத்து இனங்களினதும் குறிப்பாக முஸ்லிம்களினதும் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் அரசும் அரச அதிகாரிகளும் மதிப்பளித்து இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆவன செய்யுமாறு இம்மாநாடு அரசை வேண்டிக்கொள்கிறது.

2)    இந்நாட்டில் வாழும் சகல இனங்கள் மத்தியிலும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென இம்மாநாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. அதேபோன்று எந்த ஒரு நிந்தனையான பேச்சையும் அரசு அனுமதிக்கக் கூடாதெனவும் அதனைத் தடுக்கும் வகையிலான  சட்டங்களை அரசு அவசரமாக இயற்ற வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

3)    நம்நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேதகு ஜனாதிபதி அவர்கள் சமயங்களுக்கிடையிலான ஓர் உயர் ஆலோசனைச் சபையை நியமித்துள்ளதை இம்மாநாடு வரவேற்பதோடு சபையின் பணிகள் எல்லா வகையிலும் வெற்றிகரமாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கின்றது.

4)    ஐ. எஸ் இயக்கம் இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமான இயக்கம் என்றும் அவ்வியக்கம் போன்றவற்றின் தீவிரவாத செயற்பாடுகள் அனைத்தையும் இம்மாநாடு முற்றிலும் நிராகரிப்பதோடு, அவற்றின் செயற்பாடுகள் எவ்விதத்திலும் இஸ்லாமிய போதனைகளுக்கு உட்பட்டதல்ல என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. மேலும் உலக மட்டத்தில் இவ்வியக்கத்தையும் அதன் செயற்பாடுகளையும் அதன் ஆரம்ப காலத்திலேயே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டித்தது என்பதையும் இம்மாநாடு இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றது.

5)    சமூகத்தின் நலனையும் அதன் ஸ்திரப்பாட்டையும் கருத்திற் கொண்டு தஃவாப் பணியில் ஈடுபடும் ஆலிம்களும், ஏனைய தஃவாப் பணியாளர்களும் கருத்து வேற்றுமைகளைப் புறந்தள்ளி, பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் தஃவாப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்றும், எப்போதும் பிறர் இஸ்லாத்தை தவறாகப் புரிந்து கொள்ளாதிருக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் இம்மாநாடு சகலரையும் கேட்டுக் கொள்கிறது.

6)    நீண்ட காலமாக அரச பாடசாலைகளில் அறபு, இஸ்லாம் பாடங்களைப் போதிக்க ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்படாதிருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் புதிதாக அறபு, இஸ்லாம் ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக எடுக்குமாறும், அவ்வாறு சேர்த்துக் கொள்ளும் போது மத்ரசாக்களினால் வழங்கப்பட்ட மௌலவி, அஷ்-ஷைக் சான்றிதழை ஒரு முக்கிய தகைமையாகக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்களையும் கல்வி அமைச்சரையும் கல்வி உயர் அதிகாரிகளையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

7)    கதீப்மார்கள் தமது குத்பாக்களை வினைத்திறன்மிக்கதாகவும் சமூக நல்லிணக்கத்தைத் தூண்டும் வகையிலும் அமைத்துக் கொள்ள வேண்டுமெனவும் உரிய நேரத்தில் குத்பாக்களை முடித்துக் கொள்ள வேண்டுமெனவும் இம்மாநாடு அனைத்து கதீப்மார்களையும் கேட்டுக் கொள்கிறது. 

மேற்படி தீர்மானங்களை மக்கள் மயப்படுத்துவதிலும் உரியவர்களிடம் சென்றடையச் செய்வதிலும் ஜம்இய்யாவின் கிளைகள், ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், துறைசார்ந்தோர் போன்ற சகலரையும் ஈடுபடுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.

நாணூறு பேருக்கும் மேற்பட்ட பதவி தாங்குனர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு பிற்பகல் 2 மணியளவில் ழுஹர் தொழுகையுடனும் பகல் போசனத்துடனும் நிறைவுபெற்றது.

வஸ்ஸலாம்

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

No comments

Powered by Blogger.