July 29, 2016

வயிற்றெரிச்சலை சம்பாதிக்க வேண்டியுள்ளது, உடலும் இடம்கொடுக்க மறுக்கின்றது - விக்னேஸ்வரன்

இப்பொழுதெல்லாம் பலரின் வயிற்றெரிச்சலை நான் சம்பாதிக்க வேண்டியுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ஈடுகொடுக்க, உடலும் இடம்கொடுக்க மறுக்கின்றது. வேலைப்பளுக்களும் வேகமாகச் சுமை ஏற்றி நிற்கின்றன. தரமான சேவையை நாம் தட்டிக் கொடுக்காவிட்டால் எம் கடமையை நாம் தட்டிக் கழித்தவர்கள் ஆகிவிடுவோமென்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

சரஸ்வரதி சனசமூக நிலையத்துக்காக, யாழ்ப்பாணம், கைதடி மேற்கில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத் திறப்புவிழா, நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது, 

'போரானது எம்மைப் பெருத்த அழிவுகளுக்குள் இட்டுச் சென்றாலும், உலக அரங்கில் 'நாம் தமிழர்' என்ற அடையாளத்தையும் பொறிக்க உதவி செய்துள்ளது. மறைவாக, நமக்குள்ளே பழங்கதைகள் பேசிய நாட்கள் போய், பிறநாட்டு நல்லறிஞர் எம்மை வெகுவாகப் புகழ்ந்து பேசும் நிலையை அடைந்துள்ளோம். பிறநாட்டு எம்மவர்களின் தரமான கொடையானது முறையாக எம்மை முயன்று முன்னேற வழிவகுத்துள்ளது. நான் பதவிக்கு வந்த சில மாதங்களில், பல இளைஞர் அமைப்புக்களுடன் தொடர்புகொண்டு, எமது அலுவலக அனுசரணையுடன் மாதமொன்றுக்கு ஒரு சிரமதானப் பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டிருந்தேன். 

பல காரணங்கள் என் உள்ளக் கிடக்கையை உரியவாறு உயிர் பெற்றுயர விடவில்லை. பின்னர்தான் அறிந்தேன், எனது அலுவலக அசிரத்தையே அத் தோல்விகளுக்கு காரணம் என்று. சிரமதானத்திற்கான மனோநிலையை எம் மக்களில் பலர் இழந்து நிற்கின்றார்கள். சிரமதானம் என்பது எமது மக்களை ஒன்றிணைக்கக் கூடிய ஒரு உன்னதமான கைங்கரியம். எமது சுற்றுச் சுழலைப் பாதுகாக்க, போக்குவரத்தைப் போதிய வசதியுடன் எதிர்நோக்க, இளைஞர் யுவதிகளிடையே புரிந்துணர்வையும் உத்தமமான ஒரு உறவு நிலையையும் மேம்படுத்த, சேவை மனப்பான்மையை எம் மனதில் மேலோங்கச் செய்ய சிரமதானமானது வழி வகுக்கின்றது. 

இன்று எமது பட்டினத்து இளைய சமுதாயம், நகர்ப்புற நாகரீக நாயக, நாயகியர், பலவிதமான கொடும் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். போதைப் பொருள் பாவனை மட்டுமல்ல கலாசார சீரழிவுகளுக்கும் அவர்கள் காரணமாக இருந்து வருகின்றார்கள். நேற்றைய நாளைப் பற்றியோ நாளைய தினத்தைப்  பற்றியோ சிந்தனை இல்லாமல் 'சாப்பிடுங்கள், குடியுங்கள், உற்சாகமாய் இன்றிருங்கள்' என்ற மனோநிலையில் வாழத் தலைப்பட்டுள்ளார்கள். இது எமது அழிவுக்கு வித்திடும் அறிவற்ற செயலாகும். 

தரமான வாழ்வு வாழ்ந்த எமது தமிழ் மக்கள், தரங்கெட்டு வாழ்வதை நாம் இடமளிக்க முடியாது. கிராம மக்களே, கிராமத்து இளைஞர், யுவதிகளே! எமது பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாக்க நீங்கள் முன்வர வேண்டும். நவீனத்தை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறையே எமது வாழ்க்கை முறையாக அமைய வேண்டும். பணமும், பகட்டுமே வாழ்க்கை என்றிருப்பவர்கள், வாழ்க்கையில் நாங்கள் பண்பையும் பணிசெய்யும் பாங்கையும் உட்புகுத்த வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment