Header Ads



பூங்காவில் புலியிடம் சிக்கி, பலியான பெண் (அதிர்ச்சி வீடியோ)


வனவிலங்குப் பூங்காவில் புலியிடம் சிக்கிய தனது மகளை மீட்கச் சென்ற தாய், வேறொரு புலியினால் தாக்கப்பட்டு இறந்த பரிதாப சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனா தலைநகர் பிஜிங்கில் வனவிலங்குப் பூங்கா உள்ளது. பூங்காவில் சைபீரியன் புலிகள் பராமரிக்கப்படும் பகுதியில் பார்வையாளர்கள் கார்கள் நிறுத்தவோ, இறங்கி நடக்கவோ அனுமதியில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன் அப்படி பயணம் செய்த கார் ஒன்று அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் நின்றது. பின்னர் காரிலிருந்து இறங்கிய இளம்பெண் ஒருவர், கீழே இறங்கி சாலையில் நின்றபடி காருக்குள் இருந்தவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பக்கவாட்டிலிருந்து திடீரென புலி ஒன்று பாய்ந்து வந்து அவரை தாக்கி இழுத்துச் சென்றது.

இந்தக் காட்சியைக் கண்டு பதறிய இளம்பெண்ணின் தாயாரும் மற்றொருவரும் அலறியடித்தபடி அப்பெண்ணை மீட்க புலியைத் துரத்திச் சென்றனர். அப்போது, மகளை மீட்க  சென்ற தாயை வேறொரு புலி கடுமையாகத் தாக்கியது, இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு இளம்பெண், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பூங்காவில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதை அரசு உறுதி செய்துள்ளது. " பார்வையாளர்கள் சொந்த வாகனத்தில் பூங்காவைச்  சுற்றிப் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அபாயகரமான விலங்குகள் உலவுவதால், இந்தப் பயணத்தின்போது வாகனத்திலிருந்து கீழே இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் இந்த விதிமுறைகளை மீறியதால் இறக்க நேர்ந்தது" என்று தெரிவித்துள்ளது பூங்கா நிர்வாகம்.

புலியினால் பெண் தாக்குதலுக்குள்ளாகும் சிசிடிவி கேமரா காட்சி தற்போது வெளியாகி, பார்ப்பவர்கள் மனங்களை உறையவைத்துள்ளது.

No comments

Powered by Blogger.