Header Ads



என் வாழ்க்கையில் முதல்முறையாக, மணமகனின் தொழுகையைப் பற்றி விசாரித்தவர்..!

-Raazi Muhammadh Jaabir-

இன்று -19- காலை ஒன்பது மணியிருக்கும்.எனது அலுவலகத்தின் கதவை சவுதி பிரஜை ஒருவர் தட்டினார். உள்ளே வருமாறு அழைத்தேன்.வந்து உட்கார்ந்தவர்,

“உங்களுக்கு அப்துல்லாஹ் ஹத்தானைத் தெரியுமா?” என்று கேட்டார்.

யோசித்தேன்.அப்துல்லாஹ் ஹத்தான் எங்கள் கம்பெனியால் தொழில் நுட்ப அறிவும்,ஆங்கில கல்வியும் பயிற்றுவிக்கப்படும் பல சவுதி பிரஜைகளில் ஒருவர்.எனது மேற்பார்வைக்கு கீழே வருவதால் யாரோ இவரை என்னிடம் அனுப்பிவைத்திருக்க வேண்டும்.

“ஓரளவு தெரியும் என்னவிடயம்”என்று வினவினேன்
.
“அப்துல்லாஹ்வின் தொழுகை எப்படி?’ இது அவரின் முதல் கேள்வி.

எனக்கு சற்று குழப்பமாகியது.”நீங்கள் யார்” என்று கேட்டேன்.

“இல்லை.எனது மகளுக்கு அவரைப் பேசலாம் என்றிருக்கிறேன்.அவரைப் பற்றி விசாரிக்க வந்தேன்” என்றார்.

எனக்குள் ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.ஊரில்,கொழும்பில்,கண்டியில் பல மணமக்களைப் பற்றி பலர் என்னிடம் விசாரித்திருக்கிறார்கள்.

-என்ன தொழில் செய்கிறார்?
-திருமணம் முடித்தால் பெண்ணை வெளிநாட்டுக்கு கொண்டு செல்வாரா?
-எத்தனை தங்கைமார் இருக்கிறார்கள்.
-எந்த இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்
-வெளிநாட்டில் எவ்வளவு காலம் இருக்க உத்தேசம்
-அவரின் தங்கை யாரையோ விரும்புகிறாராம் உண்மையா?

இவ்வாறு பல கேள்விகளைச் சந்தித்திருக்கிறேன்.

வாழ்க்கையில் முதல் முறை மணமகனின் தொழுகையைப் பற்றி விசாரிக்கும் ஒரு மனிதரைப் பார்க்கிறேன்.

வசதியானவராக,படிப்பாளியாக இருப்பதை விடவும் தனது மருமகன் ஒரு தொழுகையாளியாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஒரு மாமனார்.வசதியால் வரும் சொகுசையும்,படிப்பால் வரும் மதிப்பையும் விட தொழுகையால் வரும் அருள் எல்லாவற்றையும் விட சிறந்தது,இறைவனுக்கு நல்லவராக இருப்பவர் எப்படியும் எனது மகளுக்கு நல்லவராக இருப்பார் என்ற வாழ்க்கையைப்பற்றிய அவரின் புரிதல் எவ்வளவு அழகானது.

இறையச்சம் உள்ள குடிசையில் இருக்கும் மருமகன் இறையச்சம் இல்லாத கொடீஸ்வரரைவிட நல்லவர்.இறைவனைப் பயப்படும் எழுத்தறிவில்லாத மருமகன் பட்டங்கள் பெற்ற பண்டிதரைவிட நல்லவர்.இறைவனுக்காய் கண்ணீர்விடும் கண்ணுக்கழகில்லாத கறுப்பர்,சிகரட் புகைக்கும் சிவப்பழகரை விட சிறந்தவர் என்ற அவரின் புரிதல் எத்தனை ஆழமானது.

இந்தப்புரிதல் கொண்ட மாமனார்கள் உருவாகும் வரைக்கும் இந்தப் புரிதல் இல்லாத மருமக்கள் சீதனம் வாங்கிக்கொண்டே இருப்பார்கள்.விவாகரத்துக்கள் ஆகிக்கொண்டே இருக்கும்.

அவருக்கு ஹத்தானைப் பற்றி எனக்குத் தெரிந்தவைகளைச் சொல்லி அனுப்பினேன்.

அவர் போகும்போது நபிகளாரின் ஒரு ஹதீத் என் நாபகத்திற்கு வந்தது.

“எவரின் மார்க்க ஈடுபாடும்,நல்ல குணங்களும் உங்களை மகிழ்விக்கிறதோ அவர் உங்கள் பெண்களைக் கேட்டுவந்தால் மணம் முடித்துக்கொடுங்கள்” (திர்மிதி,இப்னு மாஜா)

No comments

Powered by Blogger.