Header Ads



மைத்திரி - ரணில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றது - அநுரகுமார

பெறுமதி சேர்க்கப்பட்ட 'வற்' வரி அதிகரிப்புக்கு எதிராக, உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவைப் பொருட்படுத்தாது, மக்கள் மீது வரிச் சுமையைச் சுமத்துவதற்கு அரசாங்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியினர், வற் வரி அதிகரிப்புக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை, யாழ். மக்களிடத்தில் விநியோகிக்கும் நடவடிக்கைகளில், இன்று வெள்ளிக்கிழமை (15) ஈடுபட்டுள்ளனர். இதன்போது அங்கு கூடிய ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே, அக்கட்சியின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

'கடந்த காலத்தில், வற் வரி அதிகரிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும், அதனை உதாசீனம் செய்த மஹிந்த அரசு, தொடர்ந்து வற் வரியை மக்கள் மீது சுமத்தியது' என்றார். 'அது போன்று, தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள வற் வரி ஏற்றத்துக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள போதிலும், அதனை பொருட்படுத்தாது, அதற்கு எதிராக வரியை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையிலேயே மைத்திரி - ரணில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றது. எனவே, இதற்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியாகிய நாம் தொடர்ந்து போராடுவோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.