Header Ads



ராணுவம் ஆட்சிக்கு வர வேண்டும் - வேண்டுகோள் விடுக்கும் பேனர்களினால் பாகிஸ்தானில் பரபரப்பு


தற்போது இருக்கும் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சிக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் பேனர்கள் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வரலாற்றில் பாதி ஆண்டுகளுக்கு மேல் ராணுவ ஆட்சி நடைப்பெற்றுள்ளது. பாகிஸ்தானில் தற்போது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை அமல்படுத்துமாறு ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்புக்கு வேண்டுகோள் விடுக்கும் பேனர்கள் அந்நாட்டின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. 

லாகூர், கராச்சி, பெஷாவர், குவெட்டா, ராவல்பிண்டி, பைசலாபாத் உள்ளிட்ட 13 முக்கிய நகரங்களில் இந்த பேனர்கள், 'மூவ் ஆன் பாகிஸ்தான்' கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளது. ராணுவ சோதனை சாவடிகளுக்கு மத்தியிலும், ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளிலும்கூட இந்த விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மூவ் ஆன் பாகிஸ்தான் கட்சியின் மத்திய தலைமை அமைப்பாளர் அலி ஹாஷ்மி கூறுகையில், “ஊழலும், திறமையும் அற்ற இந்த ஆட்சிக்கு பதிலாக ராணுவ ஆட்சியே மேல். பாகிஸ்தானில் தொழில்நுட்ப வல்லுனர்களைக்கொண்டு ஒரு ஆட்சியை அமைத்து, ராணுவ சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம். அந்த ஆட்சியை ஜெனரல் ரஹீல் ஷெரீப் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.