Header Ads



ஜாகீர் நாயக் - பின்னணியும் படிப்பினையும்

-Islamiyakolgai-

கடந்த சில நாட்களாக ட்விட்டர், முக நூல், தொலைக்காட்சி, அச்சு ஊடகம் என்று எங்கெனும் நீக்கமற விவாதிக்கப்படும் விடயம் ஜாகீர் நாயக் மீதான சர்ச்சையே. அதை குறித்த காய்தல் உவத்தற்ற நடு நிலை அலசலை தர முயற்சிக்கிறேன். இக்கட்டுரை முழுமையாய் படித்த பின் விமர்சிக்க வேண்டுகிறேன்.

சர்ச்சையின் சாரம்
வங்கதேச தலைநகர் டாக்காவில் சமீபத்தில் நடந்த உயிர்தியாக தாக்குதலில் 20 நபர்கள் பலியானர். இத் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் ஜாகீர் நாயக்கின் முக நூல் பக்கத்தை லைக் செய்துள்ளனர் என்பதோடு ஜாகீர் நாயக்கின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு அவரின் பேச்சுக்கள் தங்களுக்கு உத்வேகத்தை கொடுத்ததாகவும் சொல்லியுள்ளனர். இதை தொடர்ந்து வங்க தேச அரசு இந்திய அரசிடம் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை விசாரிக்குமாறு கோரியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்திய அரசு தற்போது ஜாகீர் நாயக்கின் பேச்சுக்கள் குறித்து விசாரிக்க 9 கமிட்டிகளை அமைத்துள்ளது. அவரின் முந்தைய பேச்சுக்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனுமதி பெறாமல் ஒளிபரப்படும் பீஸ் தொலைக்காட்சி உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கத்தி பேசினால் பொய்யை உண்மையாக்கி விடலாம் என்று செயல்படும் அர்னாப் கோஸ்வாமி ஜாகீர் நாயக்கை தீவிரவாதியாகவே சித்தரித்து ஹபீஸ் சையதுயுடன் ஒப்பிட்டு ஜாகீர் நாயக்கின் பேச்சுரிமை பறிக்கப்பட வேண்டும். அவரின் பீஸ் தொலைக்காட்சி முடக்கப்படுவதோடு அவரின் டிரஸ்டுக்கு வரும் ஒவ்வொரு பைசாவும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று விஷத்தை கக்கினார்.

யார் இந்த ஜாகீர் நாயக்?
அடிப்படையில் மருத்துவரான ஜாகீர் நாயக் ஷேக். அஹ்மத் தீதாத்தின் தஃவாவின் மூலம் கவரப்பட்டு அவரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அழைப்பு பணி செய்ய ஆரம்பித்தவர். பின் தன் மருத்துவ தொழிலை கைவிட்டு முழு நேர அழைப்பாளராக மாறினார். இஸ்லாமிய ஆய்வு மையத்தை (Islamic Resarch Foundation - IRF) ஆரம்பித்தவர் உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்லாமும் பிற மதங்களும் குறித்து சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். பிற தாயிக்கள் போல் அல்லாமல் கோட் சூட் போட்டு ஆங்கிலத்தில் குரான் மற்றும் பல்வேறு மத கிரந்தங்களிலிருந்து மனனமாக பேசும் ஜாகீர் நாயக் முஸ்லீம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். முக நூலில் ஒரு கோடியே 40 இலட்சம் நபர்களும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் யூ டியூபிலும் பின் தொடர்கின்றனர் என்பதோடு 10 கோடிக்கும் மேற்பட்டோர் பீஸ் (PEACE) தொலைக்காட்சியை பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய அறிஞரா அல்லது ஸலபி பிராச்சகரா?
ஜாகீர் நாயக் குறித்து பல்வேறு பிம்பங்கள் பல்வேறு குழுவினரால் முன் வைக்கப்படுகின்றன. அவரை ஆதரிப்பவர்கள் கொஞ்சம் அதிகமாகவே அவர் அனைத்தையும் கற்ற மார்க்க அறிஞராகவும் அரபு இஸ்ரேல் போரில் ஈடுபட்ட போராளி போன்றும் சித்தரிக்கும் அதே வேளை வேறு சில முஸ்லீம்களோ அவரை வஹ்ஹாபியாகவும் முஸ்லீம்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துபவராகவும் பார்க்கின்றனர். ஜாகீர் நாயக்குக்கு தடை என்றதும் காவிகளுக்கு ஒப்பாக தரீக்காவாதிகளும், ஷியாக்களும் கிறித்துவ மிஷனரிகளும் சந்தோஷப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகையானதல்ல. ஜாகீர் நாயக்கே தன்னை இஸ்லாம் மற்றும் பிற மதங்கள் குறித்த ஆய்வு மாணவன் என்றே அறிமுகம் செய்கிறார். அவரின் பேச்சாற்றலும் அவரின் வீச்சும் பிரமிப்பானவை என்றாலும் கிலாபத் குறித்தோ, ஜாஹிலிய்யா அரசை விமர்சித்தோ இஸ்லாம் மற்றும் பிற சித்தாந்தங்கள் குறித்து ஆய்வு அல்ல பேச கூட தயங்கும் ஒருவரை நிச்சயம் முஜத்தித் எனும் அந்தஸ்தில் வைத்து பார்க்க இயலாது. அதே சமயம் இஸ்லாத்திற்கு மாற்றமான தர்கா வழிபாடு, தாயத்து, வரதட்சணை குறித்த பேச்சுக்களால் அவரை ஸலபி பேச்சாளர் என்று சுருக்கவோ இயலாது. இது ஒவ்வொரு முஸ்லீமின் அடிப்படை நம்பிக்கையாகும். வேண்டுமெனில் அவரை ஸலபி ஆதரவு போக்கு கொண்ட இஸ்லாம் மற்றும் பிற மதங்கள் குறித்து பேசும் பேச்சாளர் என்று சொல்லலாம். ஜாகீர் நாயக் அப்படி முழுமையான இஸ்லாத்தை பேசி இருந்தால் அவரால் துபாய், ஷார்ஜா, சவூதி, மலேசியா மற்றும் காம்பிய நாட்டின் அரசுகளின் உயரிய விருதுகளை வாங்கியிருக்க முடியாது.

ஜாகீர் நாயக்கும் தீவிரவாதமும்
ஜாகீர் நாயக் மீது சுமத்தப்படும் குற்றசாட்டுகளில் முதன்மையானது அவர் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார் மற்றும் ஐ எஸ் ஐ எஸ் போன்ற குழுக்களில் சேர்வோருக்கு உந்து சக்தியாக விளங்குகிறார் என்பதே. ஆனால் இதற்கு மாற்றமாக ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை கடுமையாக ஜாகீர் நாயக்கை விமர்சித்துள்ளதோடு ஒரு அப்பாவியை கொலை செய்வது ஒட்டு மொத்த மனித குலத்தை அழிப்பதற்கு சமம் என்று தீவிரவாதத்திற்கு எதிராக போர் பரணி பாடுகிறார். ஒசாமா பின் லேடன் மற்றும் செப்டம்பர் 11 தாக்குதல் குறித்து பேசும் போது ஊடகத்தில் வெளியாகும் தகவல்களை வைத்து தன்னால் ஒருவரை தீவிரவாதி என்றோ நல்லவர் என்றோ சொல்ல முடியாது என்று விளக்கமளிக்கிறார். அவர் தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்பது எள்ளளவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும்.

ஏன் பல்வேறு நாடுகள் தடை விதித்தன?
ஜாகீர் நாயக்குக்கு ஏற்கனவே அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து , மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் தடை விதிக்கும் போது இந்தியா ஏன் தடை விதிக்க கூடாது என்று ஜாகீர் நாயக்குக்கு எதிராக கேள்வி எழுப்புகின்றனர். உண்மையில் இங்கிலாந்து தவிர எந்நாட்டிலும் அவருக்கு தடைஎதுவுமில்லை. மலேஷியாவில் ஹிந்த்ராப்பின் எதிர்ப்பை மீறி நடந்த ஜாகீர் நாயக்கின் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மதும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் கூட பெண்களின் ஆடை குறித்து குர்ஆன் கூறும் கருத்துக்களை ஜாகீர் நாயக் சொன்னதே அவரை சர்ச்சைக்குள்ளாக்கியது. கனடாவில் அவருக்கு அனுமதி மறுக்கப்படும் என்று சொல்லப்பட்டதே தவிர எழுத்து பூர்வமாக அவ்வாறு எந்த ஓர் தடையும் கிடையாது.

ஊடக (அ)தர்மம்
ஜாகீர் நாயக்கின் விடயத்தில் இந்திய ஊடகங்கள் எவ்வித அடிப்படை பத்திரிகை தர்மத்தையும் கடைப்பிடிக்கவில்லை என்பது தெளிவு. குறிப்பாக எந்த வங்க தேச செய்தி தாளை அடிப்படையாக வைத்து செய்தி வெளியிட்டார்களோ அச்செய்தி தாளே அவ்வாறான எண்ணத்தில் செய்தி வெளியிடவில்லை என்று மன்னிப்பு கேட்டது. சிறையில் உள்ள தீவிரவாதிகளான அசீமானந்தா, பிரக்யாசிங் போன்றவர்கள் குறித்து முஸ்லீம்களை குறித்து விஷ கருத்துகளை விதைக்கும் சாமியார்கள் குறித்தோ பேச தயங்கும் அர்னாப் ஜாகீர் நாயக்கை தீவிரவாதியாகவே சித்தரித்தான். அவர்களின் டைம்ஸ் நவ் இரு முறை வெவ்வேறு தொனியில் ஜாகீர் நாயக்கிடம் பேட்டி கண்டது அம்பலத்துக்கு வந்துள்ளது. எல்லா ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் எவ்வித விசாரணையும் ஆரம்பிக்கும் முன்பே அவரை தீவிரவாதியாகவே சித்தரிப்பது கடைந்தெடுத்த கயமைத்தனம்.

பெற வேண்டிய படிப்பினைகள்
இஸ்லாத்தை ஒரு கொள்கையாக முழுமையாய் எடுத்து சொல்வதும் அதை முழுமையாய் நிலை நாட்டுவதும் தான் ஒரு முஃமினின் இலக்காக இருக்க முடியும். அதை விடுத்து ஜாஹிலிய்யாவுடன் சில விஷயங்களில் சமரசம் செய்தால் குறைந்த பட்சம் அழைப்பு பணியின் மூலம் இஸ்லாத்தை பரவ செய்யலாம் என்று நாம் நினைத்தாலும் எதிரிகளுக்கு அதுவும் பிடிக்காது என்பதுடன் அவர்களுக்கு அவ்லாகியும் ஜாகீர் நாயக்கும் ஒன்று தான் என்பதை உணர வேண்டும். ஜாஹிலிய்யாவுடன் சமரசம் செய்து கொண்டு அதனூடாக பயணித்து இஸ்லாமிய அரசியல் செய்வதாக நினைக்கும் அமைப்புகள் நிச்சயம் படிப்பினை பெற வேண்டும். ஜாகீர் நாயக் மதங்கள் குறித்த ஒப்பீட்டை குறித்து மட்டுமே பேசினாலும் படைப்புகளை விடுத்து படைப்பாளனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற தவ்ஹீத் சிந்தனை மக்கள் மத்தியில் பரவும் போது அதை குறித்து மேலும் ஆய்வு செய்யும் மக்கள் மத்தியில் இஸ்லாமிய சிந்தனை முழுமையாக பரவிடும் என்பதும் தேர்தலுக்கு முன் வாங்கு வங்கியை அதிகரிப்பதும் ஊழல் பிரச்னைகளை திசை திருப்புவதுமே எதிரிகளின் திட்டமாகும்.

ஏன் ஜாகீர் நாயக்கை ஆதரிக்க வேண்டும்?
ஜாகீர் நாயக்கின் மீதான பாசிச அரசின் நடவடிக்கை என்பது ஏதோ ஒரு தனி நபர் மீதான நடவடிக்கை அல்ல. மாறாக முழுமையாக இல்லையென்றாலும் பெயரளவுக்கு கூட தவ்ஹீதையும், ரிஸாலத்தையும் உச்சரிக்க நினைக்கும் அழைப்பாளர்களை முடக்கும் சதி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதன் பிண்ணணி அரசியலை புரிந்து அனைவரும் ஓரணியில் ஒன்று பட்டு நிற்க வேண்டும். பாபரி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டப்பட வேண்டும் என்று கொள்கையில் சமரசமின்றி எடுத்துரைத்த இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் தடை செய்யப்பட்ட போது யாருக்கோ நடந்த ஒன்று போல் எல்லா அமைப்புகளும் ஒதுங்கி கொண்டதன் விளைவை தான் இப்போது அறுவடை செய்கிறோம். இத்தனைக்கும் பல்வேறு அமைப்புகளை விதைத்த ஆளுமைகளான ஜவாஹிருல்லா, பாக்கர், குலாம் முஹம்மது, அப்துர் ரஹ்மான் (பாப்புலர் பிரண்ட்), கேவிஎஸ், இலியாஸ் - உமர் காலிதின் தந்தை (ஜமாத்தே இஸ்லாமி) இப்னு சவூத் (ஜன்சேவா) போன்றோரை உருவாக்கியும் பி.எஸ். அலாவுதீன், பி.ஜே உள்ளிட்ட பல்வேறு நபர்களை அவர்களின் சோதனை காலங்களில் ஆதரித்து உற்சாகமளித்த அமைப்பு. அதே தவறை இப்போது ஜாகீர் நாயக் விடயத்தில் செய்தால் அது முஸ்லீம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதி என்பதோடு நாளை நீங்களும் நானும் பாதிக்கப்படும் போது குரல் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு ஜாகீர் நாயக்குக்கு ஆதரவளிப்போம்.

4 comments:

  1. alhamthulillah. allah pothumanaven

    ReplyDelete
  2. Maa Shaa Allah very good article every one should read

    Thanks for Jaffna Muslim for publishing

    ReplyDelete

Powered by Blogger.