Header Ads



மைத்திரியை விமர்சித்தவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட அனுமதி மறுப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையையும் கட்சியையும் விமர்சிப்போருக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்ற தீர்மானம் உறுதியாக எடுக்கப்பட்டுள்ளது  என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர  தெரிவித்தார். 

தேர்தலில் போட்டியிட இளையோருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த வருடம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. இதில் போட்டியிடுவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்த வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது கட்சித் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றன. 

இதன் போது கட்சித் தலைமையையும் கட்சியையும் விமர்சிக்கும் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உட்பட கட்சிக்கு எதிராக செயற்படும் எவருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு வழங்கப்படமாட்டாது.

இதற்கு பதிலாக இளம் பிரதிநிதிகளுக்கு  வாய்ப்பு வழங்கப்படும். பெரும்பாலான விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான திறமைசாலிகள் உள்ளனர்.

நேர்முகப் பரீட்சைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. எந்தவிதத்திலும் கட்சியை விமர்சித்தவர்கள் கட்சித் தலைமையை விமர்சித்தவர்களுக்கு இடமில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவது தொடர்பிலும் இதே வரையறை தான் கடைப்பிடிக்கப்படும் என்றார்.  

No comments

Powered by Blogger.