Header Ads



"தீவிரவாதத்தை எதிர்க்கும், இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள்"


வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த தாக்குதல் பற்றி கருத்தெதும் தெரிவிக்காமல் உள்ள இந்திய முஸ்லீம்களின் மௌனம் குறித்து பாலிவூட் நடிகர் இர்பான் கான் நேற்று -03- தனது முகநூலில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரின் இந்தப் பதிவு, உடனடியாக பலரது கவனத்தையும் பெற்று சமுக வலைதளமான முகநூலில் வேகமாகப் பரவியது.

இர்பான் கானின் பதிவு குறித்து பிபிசி ஹிந்தி சேவை வெளியிட்ட கட்டுரை, பிபிசி ஹிந்தி சேவையின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு பரவலாக பகிரப்பட்டுள்ளது.

இர்பான் கானின் பதிவுக்கு 1500-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் பதிலாக கிடைத்துள்ளன. இர்பான் கான் எழுப்பியுள்ள வினாக்களுக்கு பல முஸ்லீம்கள் பதிலளித்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளரான வாசிம் அக்ரான் தியாகி இது குறித்து குறிப்பிடுகையில், ''ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னரும் முஸ்லீம்கள் ஒரு குழப்ப நிலைக்கு ஆளாகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள், முஸ்லீம்களாக இருந்தாலும் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து கருத்து கூறுமாறு, முஸ்லீம்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இஸ்லாமுக்கும், தீவிரவாதத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்பது போன்ற அறிக்கைகளை, முஸ்லீம்கள் அளிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது '' என்று வாசிம் அக்ரான் தியாகி தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ''இஸ்தான்புல் மற்றும் பாக்தாத்தில் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், டாக்கா தாக்குதல் மட்டுமே இந்தியாவில் விவாதிக்கப்பட்டுள்ளது.

எப்போதாவது, பாலத்தீனம் குறித்து எந்த நடிகராவது கேள்வி எழுப்பியுள்ளாரா? பாலத்தீன தாக்குதல்களின் போது அமைதியாக இருக்கும் யூதர்கள் குறித்து யாராவது வினா எழுப்பியுள்ளனரா?

இது போன்ற வன்முறை சம்பவங்களில், பெரும்பாலும் பல உயிர்களை இழப்பது முஸ்லீம் சமூகம் தான். ஆனாலும், வெகு காலம் முன்பாகவே இஸ்லாம் நிராகரித்து விட்ட தீவிரவாதம் குறித்து விளக்கமளிக்குமாறு முஸ்லீம்களை கேட்கின்றார்கள்'' என்று கூறினார்.

''இஸ்லாமிய முறைப்படி உடல் சுத்தம் செய்யும் வூதுவின் போது, தண்ணீர் சிந்துவதையே இஸ்லாம் தடை செய்கிறது. அவ்வாறான சூழலில், யாரையும் ரத்தம் சிந்த எவ்வாறு இஸ்லாம் கேட்டுக் கொள்ளும்?'' என்று நஸ்ரூல் ஹக் எழுதியுள்ளார்.

இது குறித்து நவி அன்சாரி என்பவர் எழுதுகையில், ''புனித குரானின் வாசகங்களை ஓத இயலாதவர்களைக் கொன்றவர்களிடம் குரானின் எந்த வாக்கியம் மக்களை கொல்வதற்கு கற்றுக் கொடுக்கிறது என்று கேட்க வேண்டும்'' என்று தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

''எந்த நபாராவது தவறான செயலொன்றில் ஈடுபட்டால், அதற்கே அவரே பொறுப்பாவார். அவரின் மதம் பொறுப்பாகாது. இத்தகைய தாக்குதல்களை நடத்தியவர்கள், முஸ்லீம்கள் அல்ல. யாருக்கும் தீங்கிழைக்க இஸ்லாம் கற்றுக் கொடுப்பதில்லை'' என்று வாசிம் அக்தர் விவாதித்துள்ளார்.

''மசூதிகளுக்கு சென்று பார்த்தால், இத்தகைய சம்பவங்களை முஸ்லீம்கள் விமர்சனம் செய்வதை காணலாம். அவர்களின் குரலை ஊடகங்களில் கேட்க முடியாது'' என்று பாரூக் ஷேக் வாதிட்டுள்ளார்.

''மியான்மர் மற்றும் சிரியாவில் முஸ்லீம்கள் வதம் செய்யப்படும் போது, ஏன் கேள்விகள் எதுவும் எழுப்பப்படுவதில்லை?'' என்று நபீஸ் அக்தர் கேள்வி எழுப்பினார்.

சுஹைல் அகமது என்பவர் இது குறித்து, ''அப்பாவிகள் கொல்லப்படுவதை இஸ்லாம் தடுக்கும் போது, இத் தீவிரவாதிகள் எவ்வாறு முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்'' என்று வினா எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.