Header Ads



துருக்கியில் எர்துகானுக்கு ஆதரவாக, தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள்

துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி முறியடிக்கப்பட்ட நிலையில் அரசுக்கு ஆதரவளித்து தலைநகர் அங்காரா மற்றும் பல நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஞாயிறு இரவு இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பெரும் எண்ணிக்கையானோர் துருக்கிக் கொடிகளை அசைத்தவாறு பேரணியாக சென்றனர். அங்காராவின் கிசிலாய் சதுக்கம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரான ஸ்தன்பூலின் தக்சின் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டனர். மக்கள் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்குமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான், மக்களை வீதிக்கு இறங்கி சதிப்புரட்சியை முறியடிப்ப கோரிக்கை விடுத்திருந்தார். இந்த அழைப்பே ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோல்வி அடையச் செய்ய முக்கிய காரணமாக இருந்தது.

இந்நிலையில் கசிலாய் சதுக்கத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் பினாலி யில்திரிம், சதிப்புரட்சியை முறியடித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“அரசியல் கொள்கைகள் பற்றிய பார்வை ஒருபக்கம் இருக்க இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக அனைத்து மக்களும் கைகோர்த்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டார்கள்” என்று யில்திரிம் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் வழமைக்கு மாறாக துருக்கியின் அனைத்து அரசியல் கட்சிகளும் எர்துவானை பதவி கவிழ்க்கும் சதி முயற்சிக்கு கண்டனம் வெளியிட்டிருந்தன.

இந்த இராணுவ சதிப்புரட்சியில் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் இராணுவம் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த சுமார் 6000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சதி வேலையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து எர்துவான் கருத்து வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் சீர்திருத்த நடவடிக்கையாக துருக்கி 2004இல் மரண தண்டனையை அகற்றி இருந்தது.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 6000 பேரில் 29 இராணுவ ஜெனரல்கள் மற்றும் 2,839 இராணுவத்தினர் அடங்குவதாக துருக்கி அரச தரப்பு குறிப்பிட்டுள்ளது. தவிர 149 பொலிஸாரும் தலைநகரில் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம் சதிப்புரட்சியுடன் தொடர்புபட்ட சுமார் 8000 பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் எர்துவானின் பிரதான இராணுவ உதவியாளர் கேணல் அலி யசிதிக்கும் அடங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. தவிர, இன்சிர்லிக் விமான தளத்தின் தளபதியும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக துருக்கி நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஐ.எஸ் குழுவுக்கு எதிரான சண்டையில் அமெரிக்கா இந்த விமான தளத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த விமான தளத்திலிருந்து ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது.

இந்த உரையின்போது கண்ணீர் வடித்த எர்துவான், நாட்டின் ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும் உறுதி அளித்தார்.

இந்த வன்முறைகளில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்திருப்பதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதில் 100க்கும் அதிகமானோர் இராணுவ சதிப்புரட்சியில் பங்கேற்றவர்களாவர்.

No comments

Powered by Blogger.