Header Ads



மஹிந்த கம்பனிக்கு வாலாட்டிய, பஷீர் சேகுதாவூத்

-இன்று நவமனி, விடிவெள்ளி பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரை-

முஸ்லிம் காங்கிரஸின் உட்கட்சிப் பூசல் அவ்வப்போது பல்வேறு வடிவங்களில் ஊடகங்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் எதிராளிகளுக்கும் தீனி போடுவது வழமையான ஒன்றான போதிலும்,தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக மாத்திரம் தொடராக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் தேசியப்பட்டியல் இழுபறியினால் ஏற்பட்டன என்றால் அது மிகையாகாது. அதிலொன்றுதான் 18 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முன்னால் ஜனாதிபதி மஹிந்தவிடமிருந்து முஸ்லிம் காங்கிரஸ் பணம் பெற்றுக் கொண்டது என்ற குற்றச்சாட்டாகும்.

ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் நடக்கின்ற விடயங்களை பொதுமக்கள் அறிந்திருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அந்நிலையில் அக்கட்சியைச் சார்ந்த உயர்பீட உறுப்பினர்கள் அல்லது கட்சித் தலைமைத்துவதுடன் நெருக்கமாக இருந்தவர்கள் முரண்பாடுகள் உருவாகின்ற போது இது போன்ற குற்றச்சாட்டுகளை தலைமைத்துவத்தின் மீது தொடுப்பது அரசியலில் இயல்பான விடயமாகினும், இது போன்ற சந்தேகங்கள் முஸ்லிம் காங்கிரஸின் எதிராளிகள் மற்றும் ஊடகங்களின் வாய்க்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தது போன்றதாகி விட்டது.

18 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மஹிந்தவிடமிருந்து பணம் வாங்கிய குற்றச்சாட்டை முஸ்லிம் காங்கிரஸ் மறுத்துள்ளதோடு,பிரதியமைச்சர் ஹரீஸ் இது போலியான குற்றச்சாட்டு என்றும், தான் சத்தியம் பண்ண தயார் என்றும் அறிக்கை விடுத்துள்ளார். இதற்கு மேல் முஸ்லிம் காங்கிரஸ் மீது கேள்விகள் தொடுக்க விரும்புவோர் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அவர்களிடம்தான் இக் குற்றச்சாட்டுக்கான தெளிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அல்லது இது தொடர்பில் அவர்கள் தமது மௌனம் கலைத்து இச்சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவர்களது தார்மீகக் கடமையாகும்.

மர்ஹூம் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் வகுத்த தேர்தல் வியூகம் உட்பட அனைத்து அரசியல் வியூகங்களிலும் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூதின் வகிபங்கு பிரதானமானது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவுக்கு எதிராகவும் ரணிலுக்கு ஆதரவாகவும் வாக்களிக்க வேண்டுமென்ற தீர்மானம் பஷீரின் வழிகாட்டுதலின் பிரகாரம் எடுக்கப்பட்டு,அத்தேர்தலில் ரணில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்ததை பலரும் அறிவர்.

அதன் பின்னர் பஷில் ராஜபக்ஷவுடன் பஷீர் நெருக்கமான உறவைப் பேணி, பல்வேறு சந்தர்ப்பங்களில் முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய உறுப்பினர்களையும் பசிலின் கோரிக்கைக்கு சம்மதிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸை மஹிந்தவின் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு செல்ல முற்பட்ட வரலாற்றையும் மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அக்காலப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம், செயலாளர் ஹசன் அலி ஆகியோரைத் தவிர அதிகமான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பஷீரின் வார்த்தையை நம்பி,முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை விட்டாவது மஹிந்தவுடன் அரசியல் செய்வதற்கும் தயாராக இருந்தனர் என்ற கசப்பான உண்மையை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.இவ்வாறான நிலையில் மஹிந்தவிடம் பணம் வாங்கித்தான் 18 ஆம் திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்க வேண்டிய அவசியம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு இருந்திருப்பின் இது விடயத்தில் தெளிவுபடுத்த கடமைப்பட்டவர்கள் இக்கட்சியின் செயலாளரும் தவிசாளருமாகும்.

ஏனெனில், மஹிந்தவிடம் மிக நெருக்கமாக இருந்தவர் பஷீர் சேகுதாவூத்,அதனால்தான் ஹக்கீமுக்கு தெரியாமல் மஹிந்த பஷீருக்கு கபினெட் அமைச்சர் அந்தஸ்த்து கொடுத்து கௌரவித்தார். இந்த பின்னணியில் வைத்துப்பார்க்கும்போது பஷீருக்கு தெரியாமல் இப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பேயில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவதற்கு தெரியாமல் பஷீர் சேகுதாவூத் அமைச்சு பதவி பெற்றுக் கொண்டு கட்சியை மஹிந்த கம்பனிக்கு அடகு வைக்க முயல்கிறார்  என்று கட்சியின் எதிர்காலம் தொடர்பில் அப்போது கட்சியின் செயலாளர் ஹசன் அலி கவலை வெளியிட்டு வந்ததையும் மக்கள் மறந்திருக்க முடியாது.

இங்கு ஆச்சரியம் என்னவெனில், அந்த நேரத்தில் வெளிவராத பணக் குற்றச்சாட்டு இப்போது ஹக்கீமுக்கு எதிராக மாத்திரம் ஏன் வருகின்றது என்பதுவே. இது விடயத்தில் ஹக்கீமை விட இவர்கள் இருவரும் மௌனம் கலைப்பதுதான் கட்சியின் போராளிகளை கௌரவித்ததாக அமையும்.

அல்லாது விடின், இந்த அம்பை எய்தவர் யாரென்று மக்கள் புரிந்து கொள்வர்.

1 comment:

  1. We remember your munafique statement. No one other Mahinda served the muslims after Allah and Muhammad. You are.paying for it.

    ReplyDelete

Powered by Blogger.