Header Ads



கீதாவை பிரதமர் அழைத்தமை, தனது பக்கமா..? பாராளுமன்றத்தில் இப்படியும் விவாதம்

ஐ.ம.சு.கூ.வின் மகிந்த ராஜபக்ஷ ஆதரவு அணி எம்.பி.யான கீதா குமாரசிங்கவை பிரதமர் ரணில் அழைத்தது தன் பக்கமா? அல்லது அரசு பக்கமா? என்பது தொடர்பில் சபையில் விவாதமொன்று ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொது எதிரணியின் விவாதத்தில் உரையாற்றிய ஐ.ம.சு. கூ. வின் மகிந்த ஆதரவு அணி எம்.பி. யான கீதா குமாரசிங்க, ‘வேண்டியதை தருகின்றேன் என்பக்கம் வாருங்கள் என வியாழக்கிழமை எனக்கு பகிரங்க அழைப்பு விடுத்த பிரதமரை காண ஆவலாக இன்று (நேற்று) ஓடிவந்தேன்’ ஆனால் அவர் இங்கு இல்லை.

பிரதமருக்கு என்மீது நல்ல விருப்பம். இது ஐ.தே.க. விலுள்ள இளம் உறுப்பினர்களுக்கு பொறாமையாகவுள்ளது.

ஐ.தே.க. வின் அமைச்சர்கள், எம்.பி.க்களின் நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாததால்தான் பிரதமர் என்னை தன்பக்கம் வருமாறு அழைக்கிறார். காலம் மாறும் போது மனிதர்களிலும் மாற்றம் ஏற்படும்தானே’ என்றார். இதனால் மகிந்த ஆதரவு அணிபக்கம் பலமான சிரிப்பொலி எழுந்தது.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐ.தே.க. எம்.பி. யான அஜித் மானப்பெரும, ‘பிரதமர் தன்பக்கம் வருமாறு உங்களைக் கூறவில்லை அரசின் பக்கம் வருமாறே கூறினார்’ என்றார்.

இதனை மறுத்த கீதா குமாரசிங்க, ‘இல்லையில்லை. தன்பக்கம் வருமாறுதான் கூறினார். ஹன்சாட்டிலும் அது உள்ளது. உங்களை விட என்மீதுதான் அவருக்கு விருப்பம்’ என்று சிரித்தவாறு கூற மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.

அப்போது மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐ.தே.க. எம்.பி. அஜித் மானப்பெரும, இன்று (நேற்று) இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகளின் திருமணம். அதில் கீதா கலந்து கொண்டார். அங்குதான் ஏதோவொன்றை அருந்திவிட்டு வந்துள்ளார். அதுதான் இப்படி பேசுகிறார் என்றார்.

உங்களுக்கு பொறாமை. அதுதான் இப்படி பேசுகிறீர்கள் என அஜித் மானப்பெரும எம்.பி.யை பார்த்து கூறிய கீதா குமாரசிங்க எம்.பி. என்னை அழைத்த பிரதமருக்கு நன்றி கூறுகின்றேன். ஆனால் நான் அந்தப் பக்கம் வரமாட்டேன் என்றார்.

No comments

Powered by Blogger.