Header Ads



மூழ்கிக் கிடந்த கப்பலில், இருந்து 217 உடல்கள் மீட்பு

லிபியா அருகே கடந்த ஆண்டு கடலில் மூழ்கிய அகதிகள் கப்பலிலிருந்து 217 உடல்களை மீட்டதாக இத்தாலிய கடற்படை தெரிவித்தது.

போரால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் புகலிடம் தேடி வரும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு உச்சத்தைத் தொட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி 700 முதல் 800 வரையிலான அகதிகளுடன் புறப்பட்ட கப்பல் மத்தியதரைக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 28 பேர் மட்டுமே உயிர் தப்பினர். மேலும் கடலில் மிதந்த 200 பேரது உடல்கள் மீட்கப்பட்டன.

இந்த நிலையில், கடலுக்கடியிலிருந்து அந்தக் கப்பலை இத்தாலியக் கடற்படையினர் கடந்த வாரம் மேலே இழுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கப்பலுக்குள் இருந்த உடல்களை மீட்டு, அவற்றை அடையாளம் காணும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இத்தாலியக் கடற்படை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நீர்ப்பரப்புக்கு மேலே உயர்த்தப்பட்ட கப்பலில் இருந்து இதுவரை 217 உடல்கள் மீட்கப்பட்டன. பிரேதப் பரிசோதனையில் 52 உடல்கள் அடையாளம் காணப்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மூழ்கிக் கிடந்த கப்பலுக்குள் 300 உடல்கள் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.