Header Ads



ஈரான் பாராளுமன்றத் தேர்தலில், ஷிஆ குருமார்களைவிட பெண்கள் அதிக வெற்றி


ஈரான் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் மிதவாத-சீர்திருத்தக் கூட்டணி வெற்றி பெற்றது.

இந்தத் தேர்தலைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய மதகுருக்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:

மொத்தம் 290 இடங்கள் உள்ள நாடாளுமன்றத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. எந்த வேட்பாளரும் குறைந்தபட்சம் 25 சதவீத வாக்கு பெறாததையடுத்து, இரண்டாம் கட்டத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதிபர் ஹஸன் ரெளஹானியின் மிதவாத-சீர்திருத்தக் கூட்டணி வேட்பாளர்கள் 143 இடங்களில் வெற்றி பெற்றனர்.

தீவிர இஸ்லாமிய கோட்பாடுகள் கொண்ட வலதுசாரியினர் 86 இடங்களிலும் சுயேச்சைகள் 61 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

தனிப் பெரும்பான்மை பெற 3 இடங்கள் குறைவாக உள்ளபோதிலும், சீர்திருத்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதிலும், அரசை நடத்திச் செல்வதிலும் தடை எதுவும் இருக்காது என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், உழைப்பாளர் தினத்தையொட்டி தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் ரௌஹானி கூறியதாவது:

வல்லரசு நாடுகளுடன் அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, ஈரான் மீதான கடுமையான பொருளாதாரத் தடைகளை நீக்கச் செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தற்போதைய அரசின் மிதவாதக் கொள்கைகளே காரணம் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளதால், நாடாளுமன்றத் தேர்தலில் நமது கூட்டணியினர் அமோக வெற்றி பெற்றனர் என அவர் கூறியதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மதகுருக்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் எம்.பி.க்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 17 பெண் எம்.பி.க்கள் உள்ளனர். மத குருக்கள் எண்ணிக்கை 16. இதில் 3 பேர் சீர்திருத்தவாதிகள்.

புரட்சிக்குப் பிறகு 1979-இல் அமைந்த நாடாளுமன்றத்தில் 164 மத குருக்கள் உறுப்பினர்களாக இருந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்த நாடாளுமன்றங்களில் இந்த எண்ணிக்கை 153, 85,67,52,27 எனக் குறைந்து வந்துள்ளது.

No comments

Powered by Blogger.