Header Ads



சீனாவில் நாய்க் கறித் திருவிழா - தடை கோரி அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்


சீனாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நாய்க் கறித் திருவிழாவுக்குத் தடை விதிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 சீனாவின் குவாங்ஸி மாகாணம், யூலின் நகரில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் வருடாந்திர நாய்க் கறித் திருவிழா கொண்டாடப்படுகிறது.

 தொடர்ந்து 10 நாள்களுக்குக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கூண்டுகளில் அடைத்துக் கொண்டு வரப்படும் நாய்கள் குரூரமான முறையில் கொல்லப்பட்டு, அவற்றின் மாமிசமும், அந்த மாமிசத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும் நகரம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.

 இந்தத் திருவிழாவுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 இந்த ஆண்டு நாய்க் கறித் திருவிழா அடுத்த மாதம் 21-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

 இந்தச் சூழலில், இந்தத் திருவிழாவுக்குத் தடை விதிக்க சீன அரசை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான மசோதாவைத் தாக்கல் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஸீ ஹேஸ்டிங்ஸ் கூறியதாவது:

 சீனாவில் உணவுக்காக ஆண்டுதோறும் ஒரு கோடி நாய்கள் கொல்லப்படுகின்றன.

 இந்தச் சூழலில், யூலின் நகரில் கொண்டாடப்படும் திருவிழாவால் நாய்க் கறிச் சந்தையின் குரூரத் தன்மை பன்மடங்கு அதிகரிக்கிறது.

 ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நாய்கள் சிறு கூண்டுகளில் அடைக்கப்பட்டு, இரக்கமற்ற முறையில் நீண்ட தொலைவிலிருந்து கொண்டு வரப்படுகின்றன.

 உணவு, நீரின்றி இவ்வாறு அழைத்து வரப்படும் நாய்களில் பல வரும் வழியிலேயே இறந்து விடுகின்றன.

 சில நாய்கள் எலும்பு முறிவு போன்ற படுகாயங்களுக்கு உள்ளாகின்றன. தெரு நாய்களை விரட்டிப் பிடிப்பது மட்டுமின்றி, வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் கூட திருடப்பட்டு இவ்வாறு கொண்டு வரப்படுகின்றன.

 வீடுகள் நிறைந்த பகுதிகளிலும், பொதுமக்கள் கூடும் சந்தைப் பகுதியிலும் அந்த நாய்கள் குரூரமாகக் கொல்லப்படுகின்றன.

 பல நாய்கள் உயிருடன் தோலுரிக்கப்பட்டு, கொதி நீரில் மூழ்கடிக்கப்படுகின்றன.

 இதுபோன்ற உச்சகட்ட கொடூரத் திருவிழாவை துளியும் ஏற்க முடியாது.

 அந்தத் திருவிழா சீனாவின் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாக தவறாகக் கருதப்படுகிறது.

 பெரும்பாலான சீனர்கள் நாய்க் கறி உணவை சாப்பிடுவதில்லை என்பதே உண்மை.

 எனவே வியாபார நோக்கிற்காக நிகழ்த்தப்படும் அந்த குரூரத் திருவிழாவுக்கு சீன அரசு தடை விதிக்க வேண்டும் என்றார் அவர்.

1 comment:

  1. They can eat more filthies animal than dog..pork but no problem.

    ReplyDelete

Powered by Blogger.