Header Ads



மகிந்தவின் முகத்தில், அறைந்த சீனா

-உபுல் ஜோசப் பெர்னான்டோ + நித்தியபாரதி-

தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை அடுத்து மகிந்த ராஜபக்ச தாய்லாந்திற்கான தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.  தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்த பின்னர் முதன்முதலாக சீனாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவே மகிந்த திட்டமிட்டிருந்தார். இதற்கான திகதியையும் இவர் தேர்வு செய்திருந்தார்.

ஆனால் சீனாவிற்கான தனது சுற்றுலாப் பயணத்திற்கான அழைப்பை மகிந்த ராஜபக்ச சீனாவிடமிருந்து பெறவில்லை. இதனாலேயே இவரது சீனப் பயணம் இரத்துச் செய்யப்பட்டது. தேர்தலில் தோல்வியடைந்தது தொடக்கம், சீனாவிடம் உதவியைப் பெறாது சிறிலங்காவிற்கான அபிவிருத்தி சாத்தியமற்றது என மகிந்த பரப்புரை செய்தார். தன்னால் மட்டுமே சீனாவின் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மகிந்த சூளுரைத்தார்.

மைத்திரி-ரணில் அரசாங்கத்தால் சீனாவின் மனதை வெல்ல முடியாது எனவும் இதனால் சீனாவின் உதவியின்றி சிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாது எனவும் மகிந்த சுட்டிக்காட்டினார். எனினும், ரணிலின் சீனாவிற்கான அண்மைய பயணத்தின் போது, சீனா எந்தவொரு தனிப்பட்ட ஆட்சியாளர்களையும் அடிப்படையாகக் கொண்டல்லாது தனது வெளியுறவுக் கோட்பாட்டின் அடிப்படையில் சிறிலங்காவிற்கான உதவிகள் வழங்கப்படும் என சீன அதிபர் வாக்குறுதி வழங்கினார்.

சீன அதிபரின் இந்தக் கூற்றானது மகிந்தவை இலக்காகக் கொண்டதா அல்லது இல்லையா என்பது எமக்குத் தெரியாது. எனினும், சீனா இன்னமும் தனது கைக்குள் உள்ளது என சூளுரைத்த மகிந்தவின் கொட்டத்தை அடக்குவதற்காகவே சீன அதிபர் இவ்வாறானதொரு அறிவித்தலை விடுத்ததாக சிலர் கூறுகின்றனர். சிறிலங்கா வாழ் மக்களுக்கு உதவும் சீனாவின் அதிபர் இவ்வாறானதொரு செய்தியைத் தெரிவிக்க விரும்பியிருக்கலாம். அத்துடன் ராஜபக்சாக்களுடன் மட்டுமே சீனா நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது என்கின்ற மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்குள் நிலவும் எண்ணப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்கான ஒரு செய்தியாகவும் இது அமைந்துள்ளது.

மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவானது ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் பி.ஆர் நிறுவனத்தாலேயே நெருக்கமாக்கப்பட்டது என்கின்ற கருத்து நிலவினாலும் கூட, இதில் முக்கிய பங்கு வகித்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த பொருளியல் வல்லுனர் ஒருவரே எனக் கூறப்படுகிறது. ரணில் பிரதமராகப் பதவியேற்ற போது சிங்கப்பூரைச் சேர்ந்த பொருளியல் வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெறுவதெனத் தீர்மானித்தார். இவர் தனது மாமாவான ஜே.ஆரின் கோட்பாடுகளைப் பின்பற்ற விரும்பினார்.

1977ல் ஜே.ஆர் சிறிலங்காவின் அதிபராகப் பதவியேற்ற கையோடு, அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீ குவன் யூவின் ஆலோசனையைப் பெற்றார். சிறிலங்கா தன்னிடம் பெற்றுக்கொண்ட ஆலோசனை தொடர்பாக லீ குவன் யூ தனது நூலான ‘மூன்றாம் உலகிலிருந்து முதலாவது வரை’ என்பதில் குறிப்பிட்டுள்ளார். இவர் இந்த நூலில் 1977 தொடக்கம் சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்த ஜே.ஆருக்கு தான் வழங்கிய ஆலோசனைகள் தொடர்பாக விளக்கியுள்ளார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன கத்தோலிக்கராகப் பிறந்து பின்னர் பௌத்தத்திற்கு மாறிய ஒருவர் எனவும், இவர் சிறிலங்காவை சோசலிசக் கோட்பாடுகளிலிருந்து மாற்றிய ஒருவர் எனவும் இவரதுஇநடைமுறை அணுகுமுறையானது 1978 ஏப்ரலில் சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொள்வதற்கு உந்துசக்தியாக இருந்ததாகவும் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவன் யூ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், விமானசேவைத் திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு ஜே.ஆர் அவசரப்பட்ட போது அது அவ்வளவு முக்கியமானதல்ல என லீ ஆலோசனை வழங்கியிருந்தார். ஏனெனில் இத்தகைய திட்டத்திற்கு மிகவும் திறமை வாய்ந்த சிறந்த நிர்வாகிகள் தேவை எனவும் ஆனால் இவர்களது உதவிகள் சிறிலங்காவின் நீர்ப்பாசன, விவசாய, வீடமைப்பு, தொழிற்றுறை போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதால் இத் திட்டத்தை முன்னுரிமைப்படுத்த வேண்டாம் எனவும் லீ ஆலோசனை வழங்கியிருந்தார்.

இவ்விமான சேவைத் திட்டமானது மிகப்பாரிய திட்டமாகும். ஆனால் இது சிறிலங்காவின் அபிவிருத்திக்கு அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய ஒன்றல்ல. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அழுத்தம் காரணமாக சிங்கப்பூர் இத்திட்டத்தை ஆறு மாதத்தில் ஆரம்பிப்பதற்கு உதவியது. சிங்கப்பூர் எயார்லைனில் பணிபுரிந்த சிறிலங்காவைச் சேர்ந்த விமானி ஒருவரது தீர்மானமாகவே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இந்த விமானியே சிறிலங்காவின் புதிய எயார்லைன் சேவைக்கான தலைவராக நியமிக்கப்பட்டதாகவும், இவர் சிங்கப்பூரின் ஆலோசனைக்கு முரணாக, பயன்படுத்தப்பட்ட விமானங்கள் இரண்டை  கொள்வனவு செய்ததால் பின்னர் சிங்கப்பூர் இத்திட்டத்தைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் லீ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.ஆரின் புதிய விமான சேவையை கொண்டு நடத்துவதற்கான போதிய பயிற்சி பெற்ற ஊழியர் பற்றாக்குறை, நிதிப் பிரச்சினை மற்றும் போதியளவு பயணிகள் பயணம் செய்யாமை போன்ற பல காரணங்களால் இத்திட்டமானது தோல்வியடைந்ததாகவும் லீ தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கப்பூர் வங்கியியல் வல்லுனரான அர்ஜூன மகேந்திரனையே ரணில் தனது பொருளியல் ஆலோசகராகவும் மத்திய வங்கி ஆளுநராகவும் நியமித்துள்ளார். அதேவேளையில், லீ குவான் யூ இறந்ததை நாடாளுமன்றில் நினைவுகூரும் நிகழ்வில் ரணில் உரையாற்றியிருந்தார். இந்த உரையில், அப்போதைய சீன அதிபர் டெங் சியாவோ பிங்கின் சிங்கப்பூருக்கான பயணத்தைத் தொடர்ந்து சீனா தனது கோட்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.

லீ குவான் யூவின் கோட்பாட்டை பின்பற்றியதாகவும், திறந்த சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்குவதில் லீ குவான் யூவை டெங் சியாவோ  பிங் மற்றும் ஜே.ஆர் பின்பற்றியதாக ரணில் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். முதல் ஓராண்டு ஆட்சிக்காலத்தில் ரணிலின் அரசாங்கத்தை சீனா சந்தேகக் கண்ணுடனேயே நோக்கியதாகவும் இதனாலேயே சிங்கப்பூர் வல்லுனர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைக்கமைவாக சீனாவுடன் உறவை நெருக்கமாக்கியதாகவும் சிலர் கூறுகின்றனர்.

அர்ஜூன மகேந்திரனைப் போல ரணிலின் அரசாங்கத்திற்குப் பொருளாதார ஆலோசகராக உள்ள பாஸ்கரலிங்கம், பிறேமதாசவின் ஆட்சிக்காலத்தில் சிங்கப்பூருக்குச் சென்று பயிற்சி பெற்ற ஒரு அதிகாரியாவார். பிறேமதாசா சிறிலங்காவின் பிரதமராகவும், அதிபராகவும் கடமையாற்றி காலத்தில், மேலதிக பயிற்சிகளைப் பெறுவதற்கு சிறிலங்கர்களை சிங்கப்பூருக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பிறேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில், அந்த அமைச்சின் செயலராக பாஸ்கரலிங்கம் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் பிறேமதாசா நாட்டின் அதிபராகப் பதவியேற்ற போது பாஸ்கரலிங்கம் பிறேமதாசாவின் நிதி அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு மட்டுமல்லாது, வெளிவிவகார அமைச்சையும் மேலும் கட்டியெழுப்புவதற்கான ஆலோசனைகளை சிங்கப்பூரிடமிருந்தே ரணில் பெறுகிறார். ஜே.ஆர் அரசாங்கத்தில் ரணில் அமைச்சராகப் பதவி வகித்த காலம் தொட்டு இவர் சிங்கப்பூருடன் நட்புறவைப் பேணிவருகிறார். லீ குவான் யூவிற்கு தனிப்பட்ட ரீதியாக ரணிலைத் தெரியும் எனவும் இவரது திறமைகளை அவர் பாராட்டியுள்ளார் எனவும் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றும் பேராசிரியர் றொகான் குணரத்ன தெரிவித்தார். லீ குவான் யூவைத் தான் சந்தித்த போது அவருடன் ரணில் தொடர்பாகவும் கதைத்ததாகவும் பேராசிரியர் றொகான் குறிப்பிட்டார்.

லீ குவான் யூவிற்கு மகிந்த தொடர்பாக நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. மகிந்தவின் ஆட்சி தொடர்பாக ஊடக மாநாடு ஒன்றில் லீ விமர்சித்திருந்தார். எனினும், இவரது மகன் மகிந்த அரசாங்கத்துடன் நெருங்கிய உறவைப் பேணியிருந்தார். மகிந்த திடீரென அதிபர் தேர்தலை அறிவித்த போது, எதிரணியின் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல்கள் சிங்கப்பூரிலேயே இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

அரசாங்கத்தை விட்டு விலகி மைத்திரியுடன் இணைந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிங்கப்பூருக்குச் சென்று பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரே இவ்வாறான கட்சித் தாவலில் ஈடுபட்டதாக மகிந்த தரப்பினர் வெளிப்படையாகத் தெரிவித்தனர். எதிரணியின் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வது தொடர்பாக சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் எதிர்க்கட்சியின் கலந்துரையாடல்கள் தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவில்லை. எனினும், அமெரிக்காவானது ஆசியா மீதான தனது நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூரை இரகசியமாகப் பயன்படுத்துகிறது என்பதில் எவ்வித இரகசியமும் இல்லை.

No comments

Powered by Blogger.