Header Ads



கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து, சிசுவை எடுத்த பெண்ணுக்கு 100 ஆண்டு சிறை


அமெரிக்காவில் கர்ப்பிணியின் கருப்பையைக் கிழித்து, 7 மாத சிசுவை நீக்கிய பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
 காலராடோ மாகாணம், லாங்மாண்ட் நகரைச் சேர்ந்த டைனல் லேன் (35) என்பவர் மருத்துவச் செவிலியர் பயிற்சி பெற்றவர்.
 அவரும், அவரது துணையவரும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினர். எனினும் டைனல் லேன் கருத்தரிக்காததால், தான் கர்ப்பமாக இருப்பதாக துணைவரிடம் அவர் பொய் செல்லியுள்ளார்.
 இந்தச் சூழலில், மருத்துவப் பரிசோதனைக்காக டைனல் லேனை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை டைனல் லேனின் துணைவர் மேற்கொண்டார்.
 இதனால் அதிர்ச்சியடைந்த டைனல் லேன், கர்ப்பமாக இருப்பதாகக் கூறிய பொய்யை எப்படியாவது மெய்யாக்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.
 அதற்காக அவர் ஒரு குரூரத் திட்டமிட்டார்.
 அந்தத் திட்டத்தின்படி, குழந்தைப் பேறுகால ஆடைகளை விற்பனை செய்வதாக இணையதளத்தில் டைனல் லேன் விளம்பரம் செய்தார்.
 அந்த விளம்பரத்தைப் பார்த்த மிஷெல் வில்கின்ஸ் (26) என்ற 7 மாத கர்ப்பிணி, அந்தத் துணிகளை வாங்க விருப்பம் தெரிவித்தார்.
 அதையடுத்து, டைனல் லேன் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்ல வேண்டிய நாளன்று, பேறுகால ஆடைகளை வாங்குவதற்காக நேரில் வருமாறு மிஷெல் வில்கின்ûஸ அழைத்தார்.
 அதனை நம்பி மிஷெல் வில்கின்ஸும் டைனல் லேன் இல்லத்துக்கு வந்தார். அவரை வீட்டின் அடித்தளத்துக்கு அழைத்துச் சென்ற டைனல் லேன், மிஷெலை கத்தியால் தாக்கினார்.
 மேலும், அவரது கருப்பையை அறுவைச் சிகிச்சைக் கத்தியால் அறுத்து, அதிலிருந்த 7 மாத சிசுவை வெளியே எடுத்துக் கொண்டார்.
 நடந்தது எதுவும் தெரியாமல் வீட்டுக்கு வந்த துணைவரை கையெல்லாம் ரத்தத்துடன் வரவேற்ற டைனல் லேன், தனது கர்ப்பம் கலைந்துவிட்டதாகக் கூறி, மிஷெல் வில்கின்ஸிடமிருந்து பறித்த சிசுவைக் காட்டியுள்ளார்.
 அதையடுத்து அவரது துணைவர் டைனல் லேனையும், இறந்த நிலையில் இருந்த அந்த சிசுவையும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றார்.
 டைனல் லேனின் தாக்குதலால் அடித்தள அறையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய மிஷெல், அவசர உதவி சேவை மையத்தை தொலைபேசியில் அணுகி நடந்த விவரத்தைக் கூறினார். 
 அதையடுத்து அங்கு வந்த போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர் அவரைக் காப்பாற்றியதுடன், டைனல் லேனைக் கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
 கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி மரியா பெர்கென்கோட்டர், டைனல் லேனுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
 மிஷெல் வில்கின்ûஸக் கொலை செய்ய முயற்சித்ததற்காக 48 ஆண்டுகளும், சட்ட விரோதக் கருக்கலைப்பில் ஈடுபட்டதற்காக 32 ஆண்டுகளும், தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 20 ஆண்டுகளும் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 காலராடோ மாகாணச் சட்டப்படி, கருவிலிருந்து வெளியேறிய பிறகு சிறிது காலத்துக்கு உயிருடன் இருக்க முடியாத சிசுவை ஒரு நபராகக் கருத முடியாது.
 எனவே, சிசுவைக் கொலை செய்ததாக டைனல் லேன் மீது குற்றம் சாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.