April 30, 2016

காதுக்குள் குடித்தனம், நடத்தும் எறும்புகள்

அகமதாபாத்தில் 12 வயது சிறுமியின் காதுக்குள் 15 எறும்புகள் உயிருடன் இருந்திருக்கின்றன. அந்தச் சிறுமிக்கு எந்த வலியும் தெரியவில்லையாம். சில நேரங்களில் குறுகுறு உணர்வு மட்டும் காதுக்குள் இருந்ததாம். அந்த எறும்புகளும் சிறுமியின் காதுக்குள் எந்த வம்பும் பண்ணாமல் சமர்த்தாக இருந்திருக்கின்றன. ‘எனது மருத்துவ அனுபவத்தில் இது போன்ற பிரச்னையை கண்டதில்லை’ என சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறியிருக்கிறார். சிறிய ஈ அல்லது கொசு காதுக்குள் நுழைந்தாலே பெரியவர்களே படாதபாடு படுவார்கள். 

இந்தச் சிறுமி 15 எறும்புகளை காதுக்குள் வைத்துக் கொண்டு எப்படி நிம்மதியாக இருந்திருக்க முடியும்? அதற்கான  சாத்தியங்களையும், தனது அனுபவத்தில் இப்படி சந்தித்த வினோத அனுபவங்களையும், காதுக்குள் எறும்போ அல்லது ஈயோ நுழைந்துவிட்டால் செய்ய வேண்டியவை பற்றியும் விளக்குகிறார் காது மூக்கு தொண்டை நிபுணர் குமரேசன்...

வட இந்தியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அது ஆங்கில மீடியாக்களின் மிகப்பெரிய கவனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதை விட பெரிய சம்பவங்கள் எல்லாம் நமது தமிழ்நாட்டில் நடந்துள்ளன.  ஒருவர் காதுக்குள் ஈ முட்டைகள் இட்டு சென்றுவிட்டது. முட்டைகள் லார்வா பூச்சிகளாக மாறி 20 முதல் 25 பூச்சிகள் காதுக்குள் இருந்தன. அவற்றை நான்தான் சுத்தம் செய்து எடுத்தேன். அந்த நபர் 20 பூச்சிகள் உள்ளே இருந்தது தெரியாமல் கடைசிவரை சுகமாகத்தான் இருந்தார். சிலரின் காதுக்குள் எறும்புகள், பூச்சிகள் போய் உயிர் வாழும் அளவுக்கு கொஞ்சம் தாராளமாக இருக்கும். 

காதை அடிக்கடி குடைந்தாலோ அல்லது காதுக்குள் தண்ணீர் விட்டாலோ மட்டும்தான் அவை கடிக்க ஆரம்பிக்கும். மற்றபடி பிரச்னைகள் கொடுக்காது. சுத்தமில்லாத வாழிட சூழ்நிலையும், கண்ட இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதும் இதற்கு முக்கிய காரணம். ஒரு குழந்தை மோதிரத்தை விழுங்கி விட்டது.  சொன்னால் பெற்றோர் அடிப்பார்களோ என்ற பயத்தால் மறைத்திருக்கிறது. அடிக்கடி இருமல் வருகிறது என்று குழந்தையை அழைத்து வந்தார்கள். எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் தொண்டையில் ஒரு பகுதியில் மோதிரம் சிக்கியிருந்தது. வெளியே எடுத்தேன்.  

7 வருடங்கள் அந்த குழந்தையின் தொண்டையில் இருந்த மோதிரம் எந்த ஒரு பெரிய விளைவையும் ஏற்படுத்தவில்லை. 
பல ஆணிகளை முழுங்கியவர் பிழைத்துவிடுவார். ஒரு குண்டூசி உள்ளே போனவர் இறந்துவிடுவார். இது போன்ற வினோதமான நிகழ்ச்சிகள் நமது நாட்டில் மிக சகஜமானவை. அதனால்தான் குழந்தைகளை கண்ட இடத்தில் விளையாடவோ, சாப்பிடவோ விடாமல் கண்காணிப்பது அவசியம். சிலர் படுக்கையறையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். 

இது தவறான பழக்கம். இனிப்புகளை சாப்பிட்டால் வாய், கை, மூக்கு இவற்றை சுத்தமாக கழுவிக் கொள்வது அவசியம். அப்படிச் செய்யாவிட்டால்  இனிப்பு வாசனைக்கு எறும்புகள் தேடி வரும். அதற்கு பிடித்த இடமான காதுகளுக்குள் போய் செட்டிலாகிவிடும். காதுக்குள் எறும்பு போனால் தண்ணீரை ஊற்றுவார்கள். அப்படி ஊற்றினால் எறும்புகள் எளிதில் சாகாது. தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உயிர்வாழ ஆரம்பித்துவிடும். வெளியேவும் வராது. 

சில துளிகள் எண்ணெய் ஊற்றினால் இறந்து வெளியே வந்துவிடும். எண்ணெயில் எறும்புகளால் உயிர்வாழ முடியாது. சிலர் காதுகளை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். இது சரியான பழக்கம் கிடையாது. காதுகளின் பாதுகாப்பு அரணான இயற்கையான மெழுகுச் சுரப்பை அடிக்கடி சுத்தம் செய்வது தடை செய்துவிடும். மெழுகுச் சுரப்பு சரியாக இருந்தால்  எறும்பு, ஈக்கள் அந்த வாசனைக்கு காதுகளுக்குள் செல்லாது. 

காதுகளில் ஏதாவது குறுகுறுப்பு, வலி, ரத்தக்கசிவு வந்தாலோ, காது மற்றும் மூக்கில் கெட்ட வாடையை உணர்ந்தாலோ உடனடியாக காது மூக்கு தொண்டை நிபுணரை பார்த்து பரிசோதனை செய்துவிடுவது நல்லது. சிலருக்கு காதுகளில் வீக்கம் கூட ஏற்படும். எங்களிடம் அவர்கள் வரும் போது எண்டோஸ்கோப் வழியாக காதுகளை பரிசோதனை செய்து உள்ளே ஈ, எறும்பு இருந்தால் எடுத்துவிடுவோம். இன்னும் சிலருக்கு காதில், மூக்கில் வெள்ளையாக சிறு பூக்கள் மாதிரி கொட்டும். கெட்ட வாடை அடிக்கும். இந்த அறிகுறிகள் வந்தால் மூக்கில், காதில் பூஞ்சை தாக்குதல் இருக்கிறது என்று அர்த்தம். பருத்தி தொழிற்சாலைகள் அதிகமுள்ள வாழ்விடங்களில் ஏற்படும் மாசுக்கேடால் இவ்வித பூஞ்சை தாக்குதல் அதிகமாக இருக்கும். இதையும் எளிதாக சுத்தப்படுத்தி குணப்படுத்திவிடலாம்.’’

0 கருத்துரைகள்:

Post a Comment