April 29, 2016

இஸ்லாம் விடுக்கும், மே தினச் செய்தி

அன்வர் (ஸலபி)

உலகளவில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படும் தொழிலாளர் தினமானது தொழிலாளர்களின் கோரிக்கைகள், உரிமைகள், சம்பள உயர்வு, அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள், அவலங்கள் என்பவற்றை முதலாளி வர்க்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதாக அமைகிறது. ஆனால் துரதிஷ்டம் யாதெனில் அன்றைய தினம் கடந்தவுடன் தொழிலாளிகளின் எந்த கோரிக்கைகளையும் முதலாளி வர்க்கம் கண்டுகொள்ளவே மாட்டார்கள். எனவேதான் இச்சந்தர்ப்பத்தில் உலக வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கம் தொழிலாளிகளின் உரிமைகள் தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது அவசியமாகும்.

இஸ்லாம் பேசுகின்ற உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்டு நபியவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டவை: அவை ஏதோ ஓர் அரசினாலோ அல்லது சட்ட மன்றத்தினாலோ வழங்கப்பட்டவையல்ல: மனித உரிமைகள் சாசனம் ஒன்றை இந்த உலகில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியது இஸ்லாம். உலகிலுள்ள அத்தனை உயிரினங்களுக்கும் உரிமைகளையும் கடமைகளையும் வகுத்தளித்திருக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம். இறையச்சத்தை அளவீடாக வைத்து இனம்,  நிறம், மொழி, பிரதேசம் ஆகிய வேறுபாடுகளையும் தாண்டி மனித சமத்துவத்தை நிலை நாட்டும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.

01. தொழில் உரிமை (right to work)

அனைத்து படைப்பினங்களிலும் அல்லாஹ் மனிதனையே உயர்வாகப் படைத்துள்ளான். தனக்குறிய தேவைகளைத் தேடிப் பெற்று உழைத்துச் சம்பாதிப்பதற்காக உடல் உறுப்புக்களைக் கொடுத்திருக்கிறான. கை கால்கள் நல்ல நிலையில் உள்ள ஒருவன் எந்த நிலையிலும் உழைக்காமல் சோம்பேறித்தனத்துடன் வாழ்வதையும் யாசகம் கேற்பதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இதற்கான வழிகாட்டல்களை அல்-குர்ஆன் அல்-ஹதீஸில் நாம் காணலாம்.

பின்னர் (ஜம்ஆத்) தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப்) புமியில் பரவிச்சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். (63-10)
நாம் அவருக்கு (தாவூதுக்கு) இரும்பை மிருதுவாக்கியிருந்தோம் (மேலும் நிறைவான போர்க்கவசங்களைச் செய்வீராக அவற்றின் வளையங்களில் (அளவை) ஒழுங்குபடுத்துவீராக’ என்றும் கூறினோம் (34-10,11)

உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்துகொண்டு விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்டு வாழ்வதை விடச் சிறறந்ததாகும். (புகாரி-3406)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மர்ருழ் ழஹ்ரான்) என்னுமிடத்தில் அராகான் (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பரித்துக் கொண்டிருந்தோம். “நபி (ஸல்) அவர்கள் அதில் கருப்பான பழத்தைப் பறியுங்கள் ஏனெனில் அவற்றில் அதுதான் நல்லது என்று கூறினார்கள்” மக்கள் நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா? எனக கேட்டார்கள் அதற்கு அவர்கள் ஆடு மேய்க்காத இறைத்தூதர் யாரேனும் உண்டா? என பதிலளித்தார்கள். (புகாரி-3406) ஆக நபி (ஸல்) அவர்கள் உற்பட அனைத்து நபிமார்களும் ஆடு மேய்த்திருக்கிறார்கள் ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

02. தொழிலாளர்களை கண்ணியமாக நடத்துதல் வேண்டும்: (right to honour)
தொழிலாளர்களை மரியாதையுடனும், மனிதாபிமானத்தோடும் அணுக வேண்டும்: அவர்களும் மனிதர்கள் அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ அவர்களது சுய கொளரவத்தை பாதிக்கும் வகையிலோ நடத்தாது சகோதரத்துவ வாஞ்சையோடு நடத்த வேண்டும். அல்லாஹ் நாடினால் தான் விரும்பியவரை உயர்ததுவான். தான் விரும்பியவரை தாழ்த்துவான் ஒரு நொடிப் பொழுதில் ஒரு செல்வந்தனை ஓட்டாண்டியாகவும் ஒரு ஓட்டாண்டியை செல்வந்தனாகவும் மாற்றும் வல்லமை மிக்கவன் அல்லாஹ்.

நபி (ஸல்) அவர்களுக்கு பணியாளராக கடமையாற்றிய அனஸ் பின் மாலிக் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள் “நான் நபி (ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் பணியாளராக தொழில் புரிந்தேன் (என் மனம் புண்படும் படி) சீ என்றோ (இதை) ஏன் செய்தாய் என்றோ நீ (இதை) இப்படிச் செய்திருக்கக் கூடாதா? என்றோ அவர்கள் எனக்குச் சொன்னதில்லை. (புகாரி-6038)

இந்த வகையில் முதலாளிகள் தமது தொழிலாளிகள் ஏதும் தவறுகள் விடுகின்ற போது அல்லது அவர்கள் புறத்தில் ஏதும் குறைபாடுகள் நேரிடும் போது அவர்களை திட்டுவதோ, ஏசுவதோ, தண்டிப்பதோ, சித்திரவதை செய்வதோ கூடாது. மாறாக அவ்வேளைகளில் அவர்களின் நிறைகளை கவனத்திற்கொண்டு அன்பு காட்ட வேண்டும்: அவர்கள் விட்ட தவறுகனை முறையாக திருத்த வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் துதரே! எனது பணியாளரிடம் ஏதும் தவறுகளைக் காணும் போது அவரிடம் எத்தனை முறை மண்ணிப்பை மேற்கொள்ள எனக் கேட்டார்? அதற்கு நபி (ஸல்) அவர்கள் மொளனமாக இருந்தார்கள் அதற்கு அம்மனிதர் மீண்டும் அவ்வாறே கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாளும் எழுபது முறைகள் மண்ணிப்பை மேற்கொள்வீராக என பதிலளித்தார்கள். (திர்மிதி)

03.தொழிலாளர்களின் உடல் நலன் பற்றி கவனம் செலுத்துதல் (right to good health)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “உங்களில் ஒருவரிடம் அவரது பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால்! அவர் அப்பணியாளரைத் தம்முடன் அமர வைத்துக் கொள்ளட்டும் அவ்வாறு அவரை அமர வைத்துக்கொள்ளாவிடினும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும் ஏனெனில் அதனை அவர் சமைக்கும் போது அதன் வெப்பத்தையும், அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். (புகாரி-5640)

மஃரூர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “நான் அபு தர் (ரழி) அவர்களை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ரபதா என்ற இடத்தில் சந்தித்தேன் அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் அதே போல் அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடை கிடப்பதையும் கண்டேன் அப்போது (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி நான் அவரிடம் கேட்டதற்கு (நான்) ஒரு முறை ஒருவருக்கு ஏசிவிட்டு அவரின் தாயைப் பற்றியும் குறை கூறிவிட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் “அபு தர்ரே! அவரையும் அவரது தாயையும் சேர்த்து குறை கூறிவிட்டீரே! அறியாமைக் கால பழக்கம் குடி கொண்டுள்ள மனிதராகவே இருக்கிறீர்! உங்களின் அடிமைகள் உங்களின் சகோதரர்கள் அல்லாஹ்தான் அவர்களை உங்களின் அதிகாரத்திற்கு கீழ் வைத்திருக்கிறான்! எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால்! தான் உண்பதிலிருந்து அவருக்கும் உண்ணக் கொடுக்கட்டும். தான் அணிவதிவதிலிருந்து அவருக்கும் அணியக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை கொடுத்து அவர்களை சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு நீங்கள் அவர்களை சிரமமான பணியில் அவர்களை ஈடுபடுத்தினால் அவர்களுக்கு நீங்கள் உதவியாய் இருங்கள் எனக் கூறினார்கள். இதனால்தான் நான் அணிவதைப் போல என் அடிமைக்கும் அணியக் கொடுத்தேன் என அபூதர் (ரழி) அவர்கள் கூறினார்கள். (புகாரி-30)

04. பணியாளர்கள் செய்ய முடியாத, சுமக்க முடியாத பணிகளை அவர்கள் மீது சுமத்துவது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும் (right to good physical). 

ஒவ்வொரு முதலாளியும் தன் கீழ் பணிபுரியும் தொழிலாளிகள் இயந்திர மனிதர்கள் அல்ல என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். தான் அவர்கள் மீது சுமத்தும் பணிகள் அவர்களால் நிறைவேற்றப்பட சாத்தியமானவையா என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.

“அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை அவர்களுக்கு கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு நீங்கள் அவர்களை சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு உதவியாயிருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் அடிமை விடயத்தில் கூறினார்கள். (புகாரி-30)

05. உரிய நேரத்திற்கு ஊதியம் வழங்குதல் (right to wage)
“வியர்வை உலரமுன் பணியாளரின் கூலியை கொடுத்து விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மிதி-11434). அதாவது முதலாளி தன் பணியாளரிடமிருந்து தேவையான பணிகளை வாங்கிவிட்டு உரிய கூலியை கொடுப்பதில் இழுத்தடிப்புச் செய்வதோ மோசடி செய்வதோ கூடாது. “மறுமை நாளில் நான் மூன்று பேருக்கு எதிராக வாதாடுவேன் ஒருவர் சுதந்திரமான ஒருவனை அடிமையாக்கியவன் மற்றவர் வாக்குறுதி மீறியவர் (மூன்றாமவர்) ஒரு பணியாளரை கூலிக்கமர்த்தி, அவனிடமிருந்து வேலை வாங்கிவிட்டு அவனது கூலியை வழங்காதிருந்தவர். (புகாரி-2270)

தவிர தொழிலாளிகள் தமது உரிமைகள் தொடர்பில் குரல் கொடுக்கும் அதே நேரம் தமது கடமைகள் பொறுப்புக்கள் குறித்தும் பிரக்ஞையோடு இருத்தல் வேண்டும். அந்தவகையில் ஒவ்வொரு தொழிலாளியும் தான் செய்யும் தொழிலை வணக்கமாக பார்க்க வேண்டும். பொதுவாக இன்று எல்லா மதங்களும் உழைப்பை உலகில் பணத்தையும் பொருளையும் சம்பாதிப்பதற்கான வழிகளாகவே பார்க்கின்றன. மாறாக இஸ்லாமிய மார்க்கம் வாழ்வே வணக்கம் என்ற நிலைப்பாட்டிலே இருக்கிறது. ஒருவர் தொழுகை, நோன்பு, போன்ற இபாதத்களில் இருப்பது போல தொழிலில் ஈடுபடும் போதும் வணக்கத்திலே இருக்கிறார்.

“ உங்கள் (பணிகளை) திறன்படச் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (தம் பணியை) திறன்படச் செய்பவர்களை நேசிக்கிறான்” (02-195). எனவேதான் ஒவ்வொரு முதழிலாளியும் தன் கீழ் பணிபுரியும் தொழிலாளிகளின் உரிமைகளைப் பேணுகின்ற அதே வேளை ஒவ்வொரு தொழிலாளியும் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் கவனத்திற்கொண்டு செயற்பட்டால் நிச்சயம் இம்மையிலும், மறுமையிலும் பல நன்மைகளைப் பெறலாம்.

2 கருத்துரைகள்:

Islam is a complete way of life but who cares this in the Middle East countries? Let alone, there are Arabs who do not even think that we (non-Arab Muslims) are really Muslims...only a few treat the workers in the best manner.

Dear Brother GHOUSE,,, Read the article well... The writer is writing about ISLAM and ITs teaching not what is currently in the ARAB WORLD.

Respect the message of ISLAM, when some body bring it to you.

Post a Comment