Header Ads



புரட்சிகர கியூபாவிலிருந்து பிடல் காஸ்ட்ரோ, ஒபாமாவிற்கு எழுதியுள்ள கடிதம்

ஸ்பெயினின் அரசர்கள் எங்கள் நாட்டிற்கு பல எஜமானர்களையும் நாடு பிடிப்பவர்களையும் கொண்டு வந்தனர். அவர்கள் எங்கள் நாட்டில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தங்கத்தை தேடுகிறேன் என்று சொல்லி விட்டுச் சென்ற தடங்கள் இன்றும் இருக்கிறது. மிகவும் கேவலமான மற்றும் வெட்கக்கேடான சுரண்டல் அது, அதன் எச்சங்கள் எங்கள்நாடு முழுவதும் இன்றும் வானத்தில் இருந்து பார்த்தால் தெரியும்.
சுற்றுலாவிற்காக எங்களது நாட்டின் பெரும் பகுதி உபயோகிக்கப்படுகிறது. இன்று எங்களின் அழகான நிலத்தையும், எங்கள் கடலின் மிக அழகான, சுவையான உணவுகளையும் சுவைப்பதற்கான சுற்றுலாத் தளமாக எங்கள் நாட்டின் நிலங்கள் உள்ளது. இதை வெளிநாட்டு மிகப்பெரும் நிறுவனங்களின் முதலீட்டுடன் பகிர்ந்து கொள்கிறோம். அவர்களுக்கு இதன் மூலமாக பில்லியன் டாலர்கள் வருமானம் கிடைத்தால் மட்டுமே அவர்கள் இதைச் செய்வார்கள், இல்லையென்றால் அவர்களுக்கு இது பயன் தரக்கூடியதில்லை.
கட்டயமாக நான் இந்த பிரச்சனையைப் பற்றி பேச வேண்டியதுள்ளது, அதுவும் முக்கியமாக இளைஞர்களுக்காக – மனித குல வரலாற்றின் இன்றைய நிலையில் சிலருக்கு தற்போதைய நிலைமையின் முக்கியத்துவம் தெரியும். நான் காலம் கடந்துவிட்டது என்று சொல்ல மாட்டேன். ஆனால் உங்களுக்கும் எனக்கும் சரியான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்பதை நான் சொல்ல தயங்க மாட்டேன். நமக்கு முன்னால் இருக்கும் சவால்களை நமது அறிவின் மூலமாகவும் மனசாட்சியின் கீழும் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். முதலில் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது நமது வாழ்க்கை. அதே சமயத்தில் வரலாற்றையும் இரண்டாவதாக கவனத்தில் கொள்ள வேண்டும். இது நாம் அனைவரும் ஆர்ப்பணிப்பு செய்ய வேண்டிய ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசிய தேவைகளுக்கானது. ஒரு விசயத்தை மிக அதீதமாக மதிப்பீடு செய்யும் மனித பண்பை இந்த நேரத்தில் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக மற்றொரு பக்கத்தில் உயர்ந்தபட்ச கனவுகளை கொண்ட பல மனிதர்களும் உள்ளனர் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
என்னவாக இருந்தாலும் இங்கு யாரும் முழுமையாக நல்லவரும் இல்லை முழுமையாக கெட்டவரும் இல்லை. நாம் யாரும் ஒரு புரட்சிகர சமூகத்தில் நமக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தை நிரப்பும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டவர்கள் இல்லை. கியூபர்களுக்கு ஜோஸ் மார்ட்டி ஒரு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார். நான் என்னையே கேட்டுக் கொள்வேன், அவர் அங்கேயே சாகலாமா அல்லது டாஸ் ரியோஸில் சாகலாமா என்று கேட்டுக் கொள்வார், அவரே அதற்கு பதிலும் சொன்னார் “இது என்னுடைய நேரம்” என்று, அதன் பிறகு ஸ்பானிய படைகளின் குண்டு மழைகளுக்கிடையே முன்னேறினார். அவர் என்றும் அமெரிக்காவிற்கு திரும்பிச் செல்ல விரும்பியதில்லை. அவரை யாராலும் தடுத்து நிறுத்த இயலவில்லை. யாரோ ஒருவர் மார்டியின் டைரியின் சில பக்கங்களை கிழித்துவிட்டார். இது கண்டிப்பாக ஒரு தூரோகியின் செயலே. இந்த செயல் ஒரு நேர்மையற்ற சதிகாரரின் செயல். தலைவர்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர்களிடம் என்றும் ஒழுக்கமற்றவர்களாக இருந்தது இல்லை. அண்டானியோ மக்கியோ என்றும் கருப்பினத்தின் ஒப்பற்ற தலைவர் சொன்னார் “ஒரு சரியான கியூபாவை உருவாக்க யார் ஒருவர் முயன்றாலும் அவர் கியூபா மண்ணை ரத்தத்தால் நனைய வைப்பார்அவர் போராட்டதை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால்”. மாக்சிமோ கோம்ஸ் நமது நாட்டின் ஒரு மிகச்சிறந்த ஒழுக்கமான இராணுவ தலைவர் என்பது நம் வரலாற்றில் உள்ளது.
இன்னொரு வகையில் இதைப் பார்ப்பது என்றால், நாம் எப்படி மறக்க முடியும் போனிஃபாசியோ பைரனின் கோபத்தை. கியூபாவிற்கு ஒரு கப்பலில் திரும்ப வரும் பொழுது, மற்றொரு கொடி நமது கொடியின் அருகில் கப்பலில் பறப்பதை பார்த்த பைரன் “எனது கொடி என்றுமே கூலிப்படையாக இருந்தது இல்லை” என்று கோபமாக கூறியதை. கியூபாவின் கடற்கறையை இன்னும் 10 மீட்டர் தொலைவில் அடையப் போகிறோம் என்ற நிலையில் எதிர்புரட்சியாளர்களின் அமெரிக்க பசூக்காவும், இயந்திர துப்பாக்கியும் கப்பலின் கூரையில் இருந்த நம்மை குறிபார்த்த பொழுது சொன்னார் “நம் அங்கங்கள் கிழித்தெறியப்பட்டாலும், நமது கொடி அங்கிருக்கும் ஒரு நாள்… இறந்த நம்மவர்கள் அவர்களுடைய ஆயுதங்களை உயர்த்தினாலே போதும் நம் கொடியை பாதுகாக்க முடியும்” என்று உணர்ச்சி ததும்பும் வார்த்தைகளை என்னால் என்றுமே மறந்துவிட முடியாது.
ஒபாமா 1961 ஆகஸ்ட் மாதம் தான் பிறந்தார், அவரே கூறியிருக்கிறார் அன்றிலிருந்து அரை நூற்றாண்டை கடந்துவிட்டோம் என்றும்.
நமது ஒப்பற்ற விருந்தினர் இன்று என்ன நினைக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
“நான் நம்மிடையே நடந்து கொண்டிருக்கும் பனிப்போரை புதைத்துவிடவே வந்தேன், எனது கைகளை நீட்டி கியூபா மக்களுடன் நட்புடன் இருக்கவே வந்திருக்கிறேன்” என்று கூறினார், இதன் பின்னர் அவர் கூறியக் கருத்துக்கள் இது வரை நாம் யாரும் கேட்காத புதுமையான ஒன்றாகும்.
“ஐரோப்பியர்களால் காலனிகளாக மாற்றப்பட்ட, நாம் ஒரு புதிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறி தொடர்ந்தார் அமெரிக்க அதிபர் “கியூபா போன்றே அமெரிக்காவும் ஆப்ரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளால் கட்டமைக்கப்பட்டது, கியூபாவின் மக்களும் தங்களுடைய அடையாளங்களை தேடினால் அடிமைகளும் அவர்களின் முதலாளிகளும் இருப்பார்கள்” என்றார்.
ஒபாமாவிற்கு பூர்வகுடி மக்களைப் பற்றிய நினைப்பே இல்லை என்பதை இது காட்டுகிறது. நிறப்பாகுப்பாட்டின் கீழான நிறவெறியை புரட்சி சுத்தமாக துடைத்தெறிந்து விட்டது என்பதையும் ஒபாமா சொல்லவில்லை, ஏன் ஒபாமாவிற்கு 10 வயது ஆகும் முன்பே அனைத்து கியூபாவின் மக்களுக்கும் சம்பளமும் ஓய்வூதியமும் கொடுக்க உத்தரவிடப்பட்டது என்பதையும் சொல்லவில்லை.
மிகவும் வெறுக்ககூடிய, கருப்பின மக்களை விடுதிகளில் இருந்து வெளியேற்றுவதற்காக பலம் பொருந்தியவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறவெறிபிடித்த முதலாளித்துவ நடைமுறையை கியூபாவின் புரட்சி அறவே ஒழித்துவிட்டது. வரலாற்றின் பக்கங்களின் இன்னும் கீழே சென்றால் நிற்வெறியின் உச்சத்தில் நின்ற தென் ஆப்ரிக்கவிற்கு எதிரான போரின் கீழாக அங்கோலா விடுதலையை வென்றதாகட்டும், நூறு கோடி மக்கள் வாழும் ஒரு கண்டத்தில் அணு அயுதம் இல்லாத ஒரு கண்டமாக மாற்றியதாகட்டும். இது நமது குறிக்கோள் அல்ல ஆனால் நாம் போர்ச்சுக்கல்லின் காலனிய ஆதிகத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களான அங்கோலா, மொசாம்பியா, கியானா பிசாசு மற்றும் பல மக்களுக்கு நாம் ஒற்றுமை நோக்கில் அளித்த உதவிகரமே.
1961ல் புரட்சி வெற்றியடைந்து  வெறும் ஒரு வருடம் முன்று மாதங்களில் கூலிப்படைகளும், அமெரிக்காவினால் பயிற்சி அளிக்கப்பட்ட இராணுவமும், விமானப்படையும் மேலும் அமெரிக்காவின் கப்பல்படை கப்பல்களும், விமானதாங்கி கப்பல்களும் நம் நாட்டை எதிர்பாராத நேரத்தில் தாக்கியபொழுது, நாம் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்தோம், பலர் காயமடைந்தனர்.
யாங்கி தாக்குதல் படை பிரிவை பொருத்தவரை, இது வரை எந்த கூலிப்படையையும் வெளியேற்றியதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. ஆனால் யாங்கி படையின் தாக்குதல் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபையில் ஒப்படைத்துள்ளோம், இது கியூபாவின் எழுச்சியின் அடையாளமாகும்.
நமது இராணுவத்தின் அனுபவத்தையும் பலத்தையும் அனைவரும் அறிவார்கள். ஆப்ரிக்காவில் புரட்சிகர கியூபாவை எளிதில் சண்டையிலிருந்து அகற்றிவிடலாம் என்று நினைத்தார்கள். தெற்கு அங்கோலாவின் வழியாக இன்வெறி பிடித்த தென்னாப்பிரிக்க படைகள் தங்களது இயந்திர படையணிகளுடன் அங்கோலாவின் கிழக்குப் பகுதியின் தலைநகரான லூதானா வரை வந்தது. அங்கு ஒரு சண்டை ஆரம்பித்தது அது 15 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. நான் இதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை, ஆனால் ஒபாமா ஹவானாவில் அலோன்ஸா க்ராண்ட் தியேட்டரில் பேசியதற்கு பிறகு எனது அடிப்படை கடமையின் காரணமாக இதையெல்லாம் பேசவேண்டியதுள்ளது.
மனித குல விடுதலைக்காக அங்கு நடந்த சண்டையின் ஒரு மரியாதைக்குரிய பகுதியை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அங்கு நடந்த விசயங்களை முழுவதுமாக நான் சொல்ல விரும்பவில்லை. அவருடைய அமைதியான இனத் தோற்றம் மற்றும் இயற்கையான அவரது அறிவாற்றலின் கீழாக, ஒபாமாவின் நடத்தை ஒரு வகையில் நான் சரியானதாகவே கருதலாம். மண்டெலே ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அதனால் அந்த நாட்டில் மனிதனின் மரியாதையை காப்பாற்றும் வகையில் ஒரு பெரும் சக்தியாக மாறினார். ஒரு நாள் மண்டெலாவின் வாழ்க்கையை கூறும் ஒரு புத்தகம் என் கைக்கு கிடைத்தது, அதற்கு முன்னுரை பாராக் ஒபாமாவினால் எழுதப்பட்டிருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தது. உடனடியாக அந்த பக்கங்களை கிழித்தெறிந்துவிட்டேன். மண்டெலாவின் கையெழுத்தால் எழுதப்பட்ட குறிப்புகள் மிக முக்கியமானவை, மண்டெலா போன்ற ஒருவரை பற்றி அறிந்து கொள்வது பயனுள்ளது.
தென்னாப்பிரிக்கா குறித்தான எனது பதிவுகளில் எனது மற்றுமொரு அனுபவத்தை குறிப்பிட வேண்டியுள்ளது. நான் தென்னாப்ரிக்காவிற்கு எப்படி அணு ஆயுதம் கிடைத்தது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். என்னிடம் இருந்த மிகமுக்கியமான தகவல் தென்னாப்ரிக்கா 10லிருந்து 12 அணு குண்டுகள் வைத்திருந்தனர். 1959 முதல் 1976 வரையிலான ஹவானா, வாசிங்க்டன், மற்றும் ஆப்ரிக்காவின் மிக முக்கியமான பிரச்சனைகளுக்குள்ளான படையெடுப்புகளை பற்றி எழுதியவரும், எனக்கு மிக முக்கியமான தகவல் கொடுப்பவரான பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியளருமான பியேரோ கிலிஜேஸ், தனது படைப்பில் இந்த அணு அயுதங்கள் குறித்து எழுதவில்லை ஆனால் அவரின் மூலமாகவே நான் அறிந்துகொள்ள முடியும் என்று நினைத்திருந்தேன். ஜார்ஜ் ரிஸ்க்யுட் அங்கோலாவிற்கான கியூபாவின் துதராக பணி புரிந்து வந்தார், அவர் பேராசிரியர் பியேரோவின் நெருங்கிய நண்பரும் கூட. ரிஸ்கியுட் ஒரு முக்கியமான பணியை மேற்கொண்டிருந்தார், அந்த பணி முடிய எப்படியும் பல வாரங்கள் ஆகும். சமீபத்தில் பேராசிரியர் பியேரோ நம் நாட்டிற்கு வந்தாரே, அது அந்த பணியின் ஒரு பகுதி தான். நான் ரிஸ்க்யூட்டை எத்தனையோ முறை எச்சரித்தேன் அவரின் உடல்நிலையை கவனித்துக் கொள்ள சொல்லி ஆனால் சில நாட்களில் நான் பயந்தது போலவே நடந்தது. ரிஸ்க்யூட் உடல்நிலை சீரழிந்து மரணமடைந்தார். பேராசிரியர் பியேரோ வந்த பொழுது சில விசயங்களை உறுதிமொழிகளை மட்டுமே எடுத்துக் கொள்ள முடிந்தது, ஆனால் எனக்கு அதற்கு முன்பாகவே தென்னாப்ரிக்காவிற்கு அணு ஆயுதங்கள் எப்படி கிடைத்தது என்று விவரம் தெரிந்துவிட்டது, அது ரீகனும் இஸ்ரேலும் தான் அணு ஆயுதத்தை தென்னாப்ரிக்கவிற்கு கொடுத்திருந்தார்கள்.
இப்பொழுது ஒபாமா இதைப் பற்றி என்ன சொல்வார் என்று தெரியவில்லை. மேலும் அவருக்கு இதைப்பற்றி தெரியுமா அல்லது தெரியாதா என்பது எனக்கு தெரியாது. மேலும் ஒபாமாவிற்கு இதைப்பற்றி சுத்தமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய அறிவுரை என்னவென்றால் இதையெல்லாம் பற்றி அவர் சிந்திக்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் அதைவிடுத்து கியூபாவின் கொள்கைகளை பற்றி விரிவாக கோட்பாடுகள் பேசிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை ஒபாமாவிற்கு.
மிக முக்கியமான இன்னொரு விசயமும் உள்ளது.
ஒபாமா அவருடைய பேச்சில் மிகவும் அழகாக தேனைத் தடவிய வார்த்தைகளுடன் பேசியுள்ளார் “இது நாம் நம்முடைய இறந்த காலத்தை மறந்துவிட வேண்டிய தருணமாகும். நாம் வருங்காலைதிற்காக நண்பர்களாக என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்போம். அது இலகுவானது அல்ல, அதில் பல சவால்கள் இருக்கும் அதற்கு நேரத்தை அளிப்போம். ஆனால் எனது இந்த கியூபா பயணம் பல நம்பிக்கைகளை கொடுத்துள்ளது நாம் நண்பர்களாக, ஒரே குடும்பமாக, அண்டைவீட்டாராக பயணிப்போம்”
எனக்கு தெரிந்து இந்த வார்த்தைகளை அமெரிக்க அதிபர் பேசியதை கேட்டவுடன் நம்மில் பலருக்கு இருதயம் நின்றுவிடக் கூடிய அபாயம் உள்ளது. 60 வருடங்களுக்கும் மேலாக மனசாட்சியற்ற முற்றுகைக்கு பின்னரும், கியூபாவின் கப்பல்களிலும், துறைமுகத்திலும், நடுவானில் வெடித்து சிதறிய பயணிகள் விமானத்திலும் இவர்களின் கூலிப்படையின் தாக்குதலினால் இறந்த உயிர்களை என்னவென்று சொல்வது. மேலும் கூலிப்படையினர் நாட்டினுள் புகுந்து செய்த அக்கிரமங்களும், வன்முறைகளும் என்னவென்று எடுத்துக்கொள்வது.
ஒழுக்கமும் தன்னலமும் இல்லாத ஒரு நாடு தனது மகிமையை இழந்துவிடும் என்றும், கல்வியறிவு, அறிவியல் மற்றும் கலாச்சாரத்தின் மூலமாக தான் பெற்ற உரிமையையும் மற்றும் செல்வத்தையும் இழந்துவிடும் என்று யாரும் எந்தவிதமான கற்பனையும் செய்துவிட வேண்டாம்,
நாங்கள் எச்சரிக்க விரும்புகிறோம், எங்கள் மக்களின் உழைப்பினாலும் அறிவினாலும் உணவு உற்பத்தி செய்கிறோம், மேலும் பொருட் செல்வங்களை உற்பத்தி செய்கிறோம். எங்களுக்கு உங்கள் ராஜாங்கத்தின் எந்தவிதமான உதவிகளும் தேவை இல்லை. எங்களுடைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டரீதியாகவும் அமைதியாகவும் இருக்கும், இந்த உலகில் வாழும் மனித சமூகத்தின் அமைதிக்கும் சகோதரத்துவத்திற்குமான எங்களின் உறுதிமொழி இதுவாகும்.
ஃபிடல் காஸ்ட்ரோ
மார்ச் 27, 2016 மொழியாக்கம் ; ஆயுதன்

No comments

Powered by Blogger.