Header Ads



ஸ்மார்ட் போனும், மனநோயாளிகளும்..!!

இன்றைய இளைஞர்களின் ஆறாவது விரல் என ஸ்மார்ட்போனை சொல்லலாம். பேச மட்டும் என இருந்த போன் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் எப்போதும் உடனிருக்கும் பொருளாகவும் மாறிப்போனது. கேம்ஸ் ஆட, பாட்டு கேட்க, படம் பார்க்க என கூடுதல் வசதிகளும் செல்போனில் உள்ளீடு செய்யப்பட்டன. இப்போது செல்போன் ஸ்மார்ட்போனாக மாறி இணைய வசதிகள், ஆப்ஸ் என அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய மினி கம்ப்யூட்டராகவே மாறிவிட்டது. எந்நேரமும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தியபடி இருப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது. இச்சூழலில் ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சு உடலுக்கு நல்லதல்ல என மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் வரும் விளைவுகள் என்னென்ன? உடல்நலம் பாதிக்கப்படுவது உண்மையா? நிபுணர்களிடம் பேசினோம்...

டாக்டர் பி.விஜய கிருஷ்ணன், காது மூக்கு தொண்டை மற்றும் தூக்க நல நிபுணர்...

போன் என்பது பேசும் சாதனம் என்பது போய், 24 மணி நேரமும் உடனிருக்கும் பொருளாக மாறிவிட்டது. அதுவும் நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன் பலரை அடிமையாக்கி வைத்திருக்கிறது. செல்போனில் அதிக நேரம் பேசுவதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மூளையில் உள்ள செல்களை சேதப்படுத்துகிறது. ஸ்மார்ட்போனில் இருந்து வரும் கதிர்வீச்சானது இன்னும் பலம் வாய்ந்தது. பல மடங்கு ஆபத்தானது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவரோ குறைந்தது 6 முதல் 8 மணி நேரங்கள் அதனோடே வாழ்கிறார். 

இது மறதியை ஏற்படுத்தும். தூக்கத்தைப் பாதிக்கும். தூக்கம் பாதிக்கப்பட்டால் அடுத்த நாள் வேலையை கவனத்துடன் செய்ய முடியாது. ஸ்மார்ட்போனில் வெளிப்படும் ஒளிக்கற்றையானது தூக்கத்தை பெருமளவில் கெடுக்கக் கூடியது. சிலர் போனில் வரும் செய்திகளை அடிக்கடி எடுத்து பார்த்தபடி இருப்பார்கள். இதனால் வேலையில் இருக்கும் கவனம் சிதறும். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆன்லைனில் இருந்துகொண்டு அதை பார்ப்பதும், வரும் செய்திகளுக்கு பதில் அளிப்பதையுமே சிலர் வேலையாக செய்வார்கள். 

இதனால் அவர்கள் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு நாள் ஸ்மார்ட்போனை வீட்டில் மறந்து வைத்து விட்டாலே மிகுந்த பதற்றத்துக்கு ஆளாகிவிடுவார்கள். எதையோ இழந்து விட்டதாக தவிப்பார்கள். உபகரணமானது மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர, மனிதன் உபகரணத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. இப்போதோ இது தலைகீழாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் மனிதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

சில வீடுகளில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை பயன்படுத்த கொடுக்கிறார்கள். இதனால் அவர்களின் சுபாவம், நடத்தை எல்லாம் பெருமளவில் மாற்றம் அடையும். போனில் வீடியோகேம்ஸ் விளையாடிப் பழகி, அதற்கு அடிமையாகி விடுவார்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து கேம்ஸ் விளையாடுவார்கள். இயற்கையான விளையாட்டுகளின் மீது உள்ள மோகம் குறைந்துவிடும். பருமன் பிரச்னையும் ஏற்படும். அதனால் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை கொடுக்கும் போது Flight modeல் கொடுக்க வேண்டும். அப்போது கேம்ஸ் போன்ற சில ஆப்ஷன்களை பயன்படுத்த முடியாது. 

குழந்தைகள்தான் இப்படி என்றால், பெரியவர்களே  ஸ்மார்ட்போனில் வீடியோகேம் விளையாடும் ஆர்வத்தில் பேருந்தை தவறவிட்டவர்கள், ரயிலை விட்டவர்கள்... ஏன்? விமானத்தை தவறவிட்டவர்கள் கூட இருக்கிறார்கள். அடுத்ததாக, அடிக்கடி ஸ்மார்ட்போனை லேட்டஸ்ட் வரவுக்கு ஏற்ப மாற்றுபவர்களும் பலர் உண்டு. அவர்களிடம் இருக்கும் போன் நன்றாகவே இருந்தாலும் கூட, புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொண்டே இருப்பார்கள். 

இதனால் பொருளாதார பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.வழி காட்ட பயன்படுகிறது, கால் டாக்ஸி புக் செய்ய உதவுகிறது என்றெல்லாம் காரணங்கள் சொல்லாமல், தேவைக்கு மட்டும் இவ்வகை போன்களை பயன்படுத்துவதே நல்லது. 3 நிமிடங்களுக்கு மிகாமல் போன் கால்களை பேசிமுடிப்பது இன்னும் நல்லது. ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசாமல், நடப்பதும் நல்லது.  ஸ்மார்ட்போனை ஆப் செய்துவிட்டு யோகா, இசை கேட்டல், புத்தகம் படித்தல், உடற்பயிற்சி செய்தல், தோட்ட வேலைகளை பார்த்தல் என செய்து வந்தாலே இப்பிரச்னை பெருமளவு குறையும்.

காலை எழுந்தவுடன் தலைவலி வருகிறது. காது சூடாவது போல இருக்கிறது. இரைச்சல் இருந்து கொண்டே இருக்கிறது. கனவுகளில் கூட ஸ்மார்ட்போனில் யாருக்கோ செய்தி அனுப்புவது, வருதல் போன்ற அறிகுறிகள் ஸ்மார்ட்போன் மீது உங்களுக்கு உள்ள உச்சபட்ச ஈடுபாட்டால் வரும் விளைவுகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சமும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். படுக்கையறையில் மறந்தும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாதீர்கள். 3 நிமிடங்களுக்கு அதிகமாக ஸ்மார்ட்போனில் பேசுவது உடலுக்கு மட்டுமல்ல... மூளைக்கும் ஊறுவிளைவிக்கும். 

ஸ்மார்ட்போனை ஒரு நாளில் இத்தனை மணி நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என வரையறை வைத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடத்துக்கு ஒரு முறை எடுத்து பார்க்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஸ்மார்ட்போனை இடுப்பு அல்லது பேன்ட் பாக்கெட்டில் வைப்பதால் விந்து உயிரணுக்களின் உற்பத்தி குறைந்து ஆண்மைக்குறைவு ஏற்படும் அபாயம் உண்டு. 

உயிரணுக்களை உருவாக்கும் ஜீன்களின் தன்மையையே மாற்றி அமைக்கும் திறன் ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சுக்கு உண்டு. இதனால் உடலில் இருந்து ஸ்மார்ட்போன்களை தள்ளிதான் வைக்க வேண்டும். சட்டை பாக்கெட்டிலும் வைக்கக் கூடாது. டச் ஸ்கிரீனில் விரலை வைத்து உரசிக் கொண்டே இருப்பதால் பெருவிரல் இணைப்பில் உள்ள தசைநாரானது சிலருக்குக் கிழிந்திருக்கிறது. எந்த ஒரு உபகரணத்தையும் அளவோடு பயன்படுத்தினால் ஆபத்துகளை தவிர்க்கலாம்...’’

டாக்டர் மைதிலி பிரதாப், மனநல மருத்துவர்... அதீத  ஸ்மார்ட்போன் பயன்பாடு மனிதர்களுக்கிடையே உள்ள உறவைக் கெடுத்து இடைவெளியை ஏற்படுத்துகிறது. சிறுவர்கள் கூட 4 முதல் 5 மணி நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார்கள் என ஒரு சர்வே சொல்கிறது. குழந்தைகளிடம் விளையாட்டுப் பொருளாக கொடுக்கும் ஸ்மார்ட்போனை அரைமணி நேரத்துக்கு மேல் வைத்திருக்க விடக்கூடாது.  வீட்டுக்கு யாரும் உறவினர்கள் வந்தால் கூட, அவர்களை கண்டுகொள்ளாமல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பழக்கம் அதிகம் பேருக்கு இருக்கிறது. இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் அம்னீசியா’ எனும் பிரச்னையை இந்த வகை ஸ்மார்ட்போன்கள் அதிகமாக்குகின்றன. எந்த எண்களும் அவர்களின் மனதில் தங்காது. முக்கியமான நாட்கள் எந்த தேதியில் வருகின்றன என சுத்தமாக மறந்துவிடும். குழந்தைகளின் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றையும் சுத்தமாக மறந்துவிடுவார்கள்.  எல்லா தகவல்களையும் ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்திருப்பார்கள். எளிய மனக்கணக்குகளை கூட அவர்களால் போட இயலாது. எந்த ஒரு விஷயத்தையும் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டு இருந்தால்தான் அது நீண்ட நாள் நினைவில் (Longtime memory) இருக்கும். 

இந்த மாதிரியான டிஜிட்டல் உபகரணங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு தற்காலிக நினைவு மட்டுமே இருக்கும். முக்கிய நாட்களை, முக்கிய டெலிபோன் எண்களை டைரியில் அல்லது ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டு, அடிக்கடி அதை பார்ப்பதன் மூலம் இந்த மறதியைப் போக்கலாம்.ஸ்மார்ட்போனுக்கு ஒருவர் அடிமையாகியிருக்கிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் எளிதாக கண்டுபிடிக்கலாம். அரைமணி நேரத்திற்கு ஒருவர் ஸ்மார்ட்போனை பயன்படுத்தவில்லையெனில் அவருக்கு பதற்றமும் படபடப்பும் அதிகரிக்கும். 

வியர்த்துக் கொட்டும். எதையோ இழந்தது போலவே காணப்படுவார். பிறர் மீது அந்த நேரத்தில் எரிந்து விழுவார்கள். கோபம் அதிகமாக வரும். இரவில் கூட உறங்காமல் ஸ்மார்ட்போனை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் மனநல மருத்துவரை பார்த்து தகுந்த ஆலோசனையை எடுத்துக் கொள்வது நல்லது.

குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த உறுதி எடுத்துக் கொள்வது பயன் தரும். குடும்பத்தோடு வீட்டில் இருக்கும் போது ஸ்மார்ட்போன், லேப்டாப் என நேரத்தை செலவிடாமல் குழந்தைகளுடன் பேச நேரத்தை செலவிட வேண்டும். வார இறுதி விடுமுறை நாட்களில் போன் பேசுவதை குறைத்துக் கொண்டு, சுற்றுலா செல்வது, நண்பர்கள், உறவினர் வீடுகளுக்கு செல்வதன் மூலம்  குடும்ப உறவையும் சமூக உறவையும் பலப்படுத்திக் கொள்ள முடியும்.’’ 

No comments

Powered by Blogger.