Header Ads



இலங்கைக்கு படையெடுக்கவுள்ள ஐ.நா. உயர்மட்டம்

ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் உள்ளிட்டோரைக் கொண்ட ஐ.நாவின் உயர்மட்டக் குழுக்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் ஆகியோர் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கடந்த செப்ரெம்பர் மாத ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னதாக சிறிலங்காவுக்குப் பயயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

எனினும், பல்வேறு காரணங்களினால் அவரது பயணம் தடைப்பட்டிருந்தது. இந்த நிலையில். அவர் வரும் பெப்ரவரியில் கொழும்பு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் சிறிலங்கா வந்திருந்தார்.

இதன்போதே, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்று அப்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து அவர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதனை மையப்படுத்தியே ஐ.நாவும், அனைத்துலக சமூகமும், பொறுப்புக்கூறல் நடவடிக்கையை மேற்கொள்ள சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்தநிலையில், வரும் பெப்ரவரியில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மீண்டும் சிறிலங்கா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, அடுத்த ஆண்டு, ஐ.நாவின் உயர் மட்ட அதிகாரிகள் பலரும், குழுக்களும், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.

ஜெனிவா தீர்மானம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வது இந்தப் பயணங்களின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் ஆகியோர் வரும் பெப்ரவரியில் சிறிலங்கா வரத் திட்டமிட்டுள்ள போதிலும், பயண நாள் இன்னமும் இறுதி செயய்யப்படவில்லை என்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.