Header Ads



மோடியின் மீது விமானத் தாக்குதலுக்கு சதி, சந்தேகமாக ஏதேனும் பறந்தால் சுட்டுத்தள்ள உத்தரவு

பிரதமர் மோடி வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவில் அந்நாட்டு அரசுகளுக்கு எதிராக போரிட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், அந்நாடுகளின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்துள்ளனர். மேலும், அவற்றை ஒருங்கிணைந்து தனிநாடாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஈராக், சிரியா மட்டுமின்றி லெபனான், எகிப்து, பிரான்ஸ் உள்பட பல நாடுகளிலும் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் பல்வேறு நாசவேலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இதேபோல், சமீபத்தில் பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இதற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள 15 இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அதில், டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மாளிகைகள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீடு, ராஜபாதை, இந்தியா, கேட், சி.பி.ஐ., மத்திய தொழிற்பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை தலைவர்கள் அலுவலகங்கள் ஆகியவை அமைந்துள்ள மத்திய அரசு அலுவலக வளாகம் (சிஜிஓ வளாகம்) ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் யு.ஏ.எஸ். என்னும் ஆளில்லாத வான் தாக்குதல் அமைப்பு, ஆளில்லா விமானம், பாராமோட்டார் ஆகியவற்றை கொண்டு தாக்குதல் நடத்தலாம் எனவும், எனவே, சந்தேகத்திற்கிடமாக ஏதேனும் விண்ணில் பிறந்தால், அவற்றை இந்திய விமானப்படையின் ஆலோசனை பெற்று உடனே சுட்டுத்தள்ளுமாறு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.