Header Ads



மோட்டார் சைக்கிள்கள் தொடர்பாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நாடளாவிய ரீதியில் அரசாங்க கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுவந்த மோட்டார் சைக்கிள்கள் அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அரச கள உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அரசாங்க மட்டத்தில் பல்வேறு மனுக்கள் சமர்ப்பித்தும் கலந்துரையாடல்கள் மேற்கொண்டும் திருப்திகரமான பதில்கள் கிடைக்காமையினாலும், அரசாங்கத்தினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2016ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் கூட இவ்விடயமானது உள்வாங்கப்படாமையினாலும் விசனமடைந்த எமது அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற் சங்மானது, கடந்த 2015.11.27 வெள்ளிக்கிழமை காலை 10.45 மணியளவில் கல்முனையிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்திற்கு நேரடியாகச் சென்று, முறைப்பாடு ஒன்றினை அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினர்கள் அச்சங்கத்தின் தலைவர்  கே.எம்.கபீர் அவர்களது தலைமையில் கையளித்துள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் . எஸ்.ஆப்தீன் அவர்கள் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அரச உத்தியோகத்தர்கள் தொடர்பான தேசிய ரீதியிலான செயற்றிட்டம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தைச் சார்ந்த பெரும்பாலான அரசாங்க கள உத்தியோகத்தர்கள் மாத்திரம் இவ்விடயத்தில் நீண்ட நாட்களாக புறக்கணிக்கபட்டுவருவதானது ஏற்றுக்கொள்ள முடியாததொரு அம்சமாகும் எனவும் இது பெரிய பாரபட்சம் எனவும் அம்முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையிலுள்ள 24 நிருவாக மாவட்டங்களில் கடமையாற்றுகின்ற அரச கள உத்தியோகத்தர்கள் இச்செயற்றிட்டத்தினூடாக பயனடைந்திருக்கும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற சுமார் 5250 கள உத்தியோகத்தர்கள் மாத்திரம் இவ்விடயத்தில் இன்னும் புறக்கணிக்கப்படுவதற்கு பிரதானமான காரணம் அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரின் முறையற்ற நடவடிக்கையே எனவும், இவ்விடயத்தில் முன்னாள் அரசாங்க அதிபர் திரு. நீல் த அல்விஸ் அவர்கள் அரசாங்க சுற்று நிரூபத்தை  மிக மோசமான முறையில் கையாண்டுள்ளதாகவும், இதனால் அவர் கள உத்தியோகத்தர்கள் பலரினது அடிப்படை மனித உரிமையை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் அம்முறைப்பாட்டில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, 2014.12.31இற்கு முன்னர் பணம் செலுத்தியவர்களுக்கே மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இது தொடர்பாக எந்தவிதமான முறையான அறிவித்தல்களும் அறிவுறுத்தல்களும் பிரதேச செயலகங்களில் வழங்கப்படவில்லை. குறிப்பாக அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரினால் இதுபற்றிய எந்தவிதமான சுற்று நிருபங்களும் அறிவுறுத்தல்களும் அம்பாறையிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்படவில்லை. அதற்கான முழுப் பொறுப்பினையும் வகை கூறலினையும் அவரே எடுத்தல் வேண்டும் எனவும் சங்கம் கூறுகின்றது.

இந்நிலையில், 2014.12.31 இற்குப் பிறகு பணம் செலுத்திய சில வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளன. இது எவ்வாறு சாத்தியமாகும்? எனவும் சங்கம் வினாவெழுப்புகின்றது.

இம்முறைப்பாட்டினை பொறுப்பேற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் அவர்கள், இவ்விடயம் தொடர்பாக மிக விரைவாக செயற்ப்பட்டு காத்திரமான நடவடிக்கை எடுத்து, முறையான தீர்வொன்றினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

No comments

Powered by Blogger.