Header Ads



எனது குழந்தைகளுக்காக என்னை விட்டுவிடு, உயிர்போகும் வேளையில் கெஞ்சிய சியாம்

மொஹமட் சியாம் கொலை தொடர்பில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டோர் தொடர்பில் தனக்கு மன திருப்தியில்லை என சியாமின் தந்தை தெரிவித்துள்ளார்.

இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தனது மகனின் கொலை தொடர்பில், கிறிசாந்த மற்றம் பௌஸ்தீன் ஆகியோரும் குற்றவாளிகளாக இருந்த போதிலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டினார். மேலும், தனது மகன், குறித்த இருவராலும் கடத்திச் செல்லப்படுவது CCTV காட்சிகளின் மூலம் தெளிவாக நிரூபணமாவதாகவும், அதன் பின்னரே, சியாம் கொலையாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக  சியாமின் தந்தை தெளிவுபடுத்தினார்.

இதேவேளை,  பெளஸ்தீனினால் தனது மகனின் பணம் மற்றும் நிறுவனத்திற்குரிய பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். ஆயினும், நேற்றைய தினம் (27) நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, தனது நன்றிகளை தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 6 பேருக்கு, நேற்று (27) கொழும்பு உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு, வர்த்தகர் சியாமை கடத்தியமை, கொலை செய்தமை மற்றும் கொலை செய்வதற்கு உத்தரவிட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர்கள் குற்றவாளிகளாக இனங் காணப்பட்டதை அடுத்தே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2013, மே 22 ஆம் திகதி இரவு, அவரது தெஹிவளையிலுள்ள சப்பாத்து தொழிற்சாலையிலிருந்து, வீடு நோக்கி சென்றுள்ளார்.  பின்னர் வீட்டிலிருந்து நண்பர் ஒருவருடன் வெளியில் சென்றதோடு, அவரை காணவில்லை என்ற தகவலே கிடைத்தது.  கடைசியாக சியாமுடன் சென்ற நண்பர், அவருடன் நீண்டகாலாமாக பழகி வரும் ஒருவர் என்பதோடு, அவரது உறவினர்களில் ஒருவராவார். வர்த்தகரான அவர், சியாமுடன் கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் 22 ஆம் திகதி புறப்பட்ட சியாம், மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதோடு, அவருடன் சென்ற நண்பர் வீட்டிற்கு திரும்பியமை சந்தேகத்தை உண்டு பண்ணியுள்ளது. இது குறித்து அவரிடம் வினவியபோது, தன்னுடன் இரவு உணவை உண்ட அவர், அன்று இரவே வீட்டிற்கு செல்வதாக கிளம்பிச் சென்றதாக தெரிவத்துள்ளார். அவர் குறித்து சந்தேகிக்காத உறவினர்கள், சியாமை எல்லா இடங்களிலும் தேடினர். இறுதியில் இது குறித்து பம்பலபிட்டி பொலிஸில் முறைப்பாடொன்றை மேற்கொள்ள, இறுதியாக அவருடன் இருந்த நண்பருடன் சென்றனர். 

இதன்போது அந்நண்பர், பொலிஸில், சியாம் தன்னுடன் காலி வீதியிலுள்ள ஹோட்டலில் தேநீர் அருந்திவிட்டு, விடைபெற்று வீட்டுக்கு சென்றதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததோடு, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு புலனாய்வு பிரவின் உதவியை நாடியது. அதன் பின்னர், சியாமின் வாகனம் நுகேகொட கந்தவத்த வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டதோடு, அதிலுள்ள கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது.

இதேவேளை குறித்த வாகனம் கைவிடப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலுள்ள CCTV கமெராவின் காட்சி உதவியை பெற்றனர். அதில், சியாமும் அவரது நண்பரும் குறித்த இடத்திற்கு வருவது காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு, அதன் பின்னர் மற்றுமொரு குழுவொன்று வந்து சியாமை அழைத்து செல்வது பதிவு செய்யப்பட்டிருந்தது.  இதனை அடுத்து, குறித்த நண்பரை பின்தொடர்ந்த பொலிஸார், அவரை கைது செய்தனர்.  இதன்போது, சியாமும் குறித்த நண்பரும் பழகிய விதம் காரணமாக, சியாமின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் அவரை விசாரணை செய்ததை அடுத்து, சியாமை கடத்தியமை தொடர்பான தகவல்கள் வெளிவந்தன. இதேவேளை தொம்பே காட்டுப் பகுதியில் அடையாளம் காணப்படாத உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோடு, அது அடையாளம் காணப்படாத நிலையில் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டது. பின்னர், அந்நண்பரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த உடல் சியாமுடையது என தெரிவிக்கப்பட்டதோடு, அது அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

பின்னர் சியாமின் கொலைக்கு பின்னால் யார், யார் உள்ளனர் என தெரிய வந்து கொண்டிருந்த நிலையில், பொலிஸ் மாஅதிபரினால் சியாமின் கொலை விசாரணை, இரகசிய பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சியாமின் பல இலட்சம் பெறுமதியான கைக்கடிகாரத்தின் மீது ஆசையே   இக்கொலைக்கு காரணம என குறித்த நண்பரின் மூலம் தெரிய வருகிறது. அது தவிர அந்நண்பரும் சியாமுக்கு பல இலட்சம் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. 

பண பிரச்சினையில் இருந்த நண்பர், அடுத்து சியாமின் பாரிய சப்பாத்து தொழிற்சாலை மீது கண் வைத்துள்ளார். சியாம் குறித்த வியாபாரத்தை தனது நண்பருடன் இணைந்தே மேற்கொண்டு வந்துள்ளார். அவ்வியாபாரத்தை தனதாக்கிக் கொள்ளும் ஆசையில் அந்த நண்பர் இருந்துள்ளார். அதன் அடிப்படையில் இக்கொலையை திட்டமிட்டுள்ளார்.

சியாமை கொல்வதற்கு, குறித்த குழுவுக்கு ரூபா 30 இலட்சம் விலை நிர்ணயம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 22 ஆம் திகதி இரவு,  வீட்டில் இருந்த சியாமை, பெறுமதி மிக்க கைக்கடிகாரம் ஒன்று உள்ளது அதனை குறைந்த விலையில் எடுக்கலாம், அதற்காக நுகேகொடவிற்கு செல்ல வேண்டும் என கூறியதும், கைக்கடிகாரங்களில் அதிக ஆசை கொண்ட சியாம், நண்பருடன் வெளியே சென்றுள்ளார்.

கொல்லுபிட்டியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தேநீர் அருந்தி இருவரும் சியாமின் வாகனத்திலேயே நுகேகொட சென்றுள்ளனர். அதன் பின்னரே இக்கொலை நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸாருக்கு ஆரூயிர் நண்பனை கொலை செய்வதற்கு ஆச்சரியமளிக்கும் காரணம் என்ன என தெரிய வந்தது. தான், சிங்கப்பூர், பெங்கொக் சுற்றுலா செல்வதாக கூறி, 08 வருடம் தன்னுடன் நட்பைக் கொண்டுள்ள நண்பனின் உதவியை நாடிய சியாம், தெஹிவளையிலுள்ள தனது வியாபாரத்தை பார்த்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

சியாம் வெளிநாடு சென்றார்; நண்பர் தொழிற்சாலையினுள் நுழைந்தார். இறக்குமதியாகும் சப்பாத்துகளை விற்பனை செய்யும் சிறந்த வியாபாரியான சியாமின், பாரிய தொழிற்சாலையையும் அதன் வருமானத்தையும் கண்ட நண்பர், தனது அடிமனதில் அந்த தொழிற்சாலையை எப்படியாவது தனதாக்கும் எண்ணம் உருவாகியது. அன்று முதல் எப்படியாவது சியாமை கொல்ல வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். கொலை செய்யப்படும்போது, சியாமிடம் ரூபா 30 கோடிக்கும் மேல் கடனாளியாகவும் இருந்துள்ளார்.

சியாம் தனது கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் பெறுமதி ரூபா 20 இலட்சம் என கூறப்படுகின்றது. கொலை செய்வதற்காக, அவரது கைக்கடிகார ஆசையை இதற்காக பயன்படுத்தி கொண்டுள்ளார்.  மிரிஹானையில் கைக்கடிகாரம் ஒன்று உள்ளது. அது உனக்குத்தான் சரியாக இருக்கும். இப்போதே போவோம் வேறு யாராவது வாங்குவதற்கு முன்னர் என தெரிவித்து சியாமை அழைத்துச் சென்ற நண்பர், ஏற்கனவே திட்டமிட்டபடி குறித்த குழுவை மிரிஹானையில் வரவழைத்து சியாமை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

இதன்போது சியாமிடம் இருந்த ரூபா 20 இலட்சம் பெறுமதியான கைக்கடிகாரம், ரூபா ஒன்றரை இலட்சத்திற்கும் அதிக பெறுமதி கொண்ட கையடக்க தொலைபேசி மற்றும் பாரியளவான பணம் என்பவற்றுட் சியாமை கடத்துகின்றனர். அதன் பின், எதுவும் நடக்காதவாறு வீடு சென்றுள்ளார் அவரது நண்பர். பின்னர் குறித்த விடயத்தை மறைத்து நாடகமாடியதோடு மட்டுமல்லாது, பொலிஸிற்கு சென்று முறைப்பாடும் செய்துள்ளார். சியாமை பொலிஸார் தேடிக்கொண்டிருந்த வேளையில், கடத்தல்காரர்கள் சியாமை கொல்ல திட்டமிடுகின்றனர். இதன்போது, தனது குழந்தைகளுக்காக தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார். 

8 வயது முதல் 11 மாதம் எனும் வயதுகளுக்கு இடைப்பட்ட வகையில் சியாமுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மனமிரங்கியதாலோ என்னவோ தெரியவில்லை, அவர்கள் அவரது நண்பருக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளனர். "இருடா எங்களுக்கு கொந்தராத்து வழங்கியவனுக்கு கோல் எடுத்து தருகிறோம்" என தெரிவித்து அந்நண்பருக்கு அழைப்பை மேற்கொண்டு சியாமிடம் கொடுத்துள்ளார். அதற்கு விடை "மச்சான்.... செய்ய வழியில்லை"

அதன் பின்னர், சியாமை கொடூரமான முறையில், துப்பாக்கியால் தலையிலும் நெஞ்சிலும்  சுட்ட அவர்கள் கழுத்தை வயரினால் கட்டி நெரித்துள்ளனர். கைகளிலும் பல காயங்கள் காணப்பட்டதாக சியாமின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இவ்வாறு கொலை செய்யப்பட்ட சியாமின் உடலை தொம்பே பகுதியிலுள்ள பாழடைந்த பிரதேசத்தில் போட்டுச் சென்றுள்ளனர்.

ஆரம்பத்தில் சியாமின் கொலை விசாரணைகளில் திருப்தியுறாத உறவினர்கள், பொலிஸ் மாஅதிபரையம் கொழும்பிற்கான பிரதி பொலிஸ் மாஅதிபரையம் சந்தித்த பின்னர், 48 மணித்தியாலங்களில் இது தீர்க்கப்பட வேண்டும் எனும் உத்தரவ அவ்வேளையில் வழங்கப்பட்டது.  அதனை அடுத்து கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு, குறித்த பொறுப்பு வழங்கப்படுகின்றது. அதன் பின்னர், சியாமை கொலை செய்வதற்காக பயன்படுத்திய கெப் வாகனம் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிய வந்ததையடுத்து, இந்த விசாரணை வேறு திசையில் சென்றது. 

அதன் பின்னர் ஆழமாக துருவி ஆராய்ந்த போது, மிக தீர்க்கமான முடிவை எடுக்கும் பொலிஸார் ஒருவர் எனும் பெயரை கொண்ட, மேல்மாகாணத்தின் வடபகுதி உதவி பொலிஸ் மாஅதிபரான வாஸ் குணவர்தனவின் கட்டளைக்கு அமையவே இக்கொலை நடந்துள்ளதாக தெரியவருகின்றது. அதன்படி வாஸ் குணவர்தன விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதோடு, இதன்போது அவர், தனக்கும் இக்கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். ஆயினும் விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்றது.

கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இரண்டு மற்றும் அதனுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும், பிரதி பொலிஸ் மாஅதிபரின் கீழ் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மூவரை, குற்றப் புலனாய்வு பிரிவுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் குற்றப் புலனாய்வு பிரிவால், வாஸ் குணவர்தன மீண்டும் விசாரிக்கப்பட்டார். சுமார் 5 மணி நேர விசாரணையில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சாட்சியங்கள் மற்றம் ஆதாரங்களின் அடிப்படையில் பம்பலபிட்டியவிலுள்ள மற்றுமொரு வர்த்தகரான மொஹமட் பெளஸ்டீன் என்பவரால் பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, இக்கொலை நடைபெற்றதாக நீதிமன்றில் உறுதியானதோடு, அதில் வாஸ் குணவர்தனவின் மகனுக்கும் தொடர்பு உள்ளமை அம்பலமானது.

இதனை அடுத்தே வாஸ் குணவர்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

5 comments:

  1. ஷியாம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தை வழங்கி பிரிவால் தவிக்கும் குடும்த்தின் உள்ளங்களை ஆருதளடைய பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  2. கொலை செய்தவர்களை விட செய்ய தூண்டிய பெளஸ்தீனுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்....

    ReplyDelete
  3. every action has equal and opposite reaction.

    ReplyDelete

Powered by Blogger.