Header Ads



இலங்கை ரக்பி அணித்தலைவர், பாஸில் மரிஜா பதவி விலகுகிறார்

-றிஷ்வின் இஸ்மத்-

இலங்கை 7s ரக்பி அணித்தலைவர் பாஸில் மரிஜா, தலைமைப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கை 7s அணியின் தலைமைப் பதவியை வகித்துவரும் பாஸில் மரிஜா, இம்மாதம் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பு குதிரைப்பந்தையத் திடல் - சர்வதேச ரக்பி மைதானத்தில் நடைபெறும் 12 நாடுகள் பங்குபற்றும் 'ஆசிய 7s ரக்பி போட்டிகளுடன்' பதவி விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு பாஸில் மரிஜா இலங்கை ரக்பி 7s அணியின் தலைவராக நியமிக்கப் பட்டதைத் தொடர்ந்து, 2013 இல் இலங்கை அணி, ஆசிய வட்டகைப் போட்டிகளில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது.

இவ்வருட ஆரம்பம் முதல் இலங்கை ரக்பி 15s அணியின் தலைவராகவும் கடமையாற்றிவரும் பாஸில் மரிஜா, இலங்கையில் பாடசாலை மட்டத்தில் ரக்பி விளையாட்டை அறிமுகம் செய்துவைத்த முதலாவது பாடசாலையான கண்டி கிங்க்ஸ்வூட் கல்லூரியின் பழைய மாணவராவார். 2004 ஆம் ஆண்டு இவர் கல்லூரி அணிக்குத் தலைமை தாங்கியதுடன், தனது நுட்பமான விளையாட்டுத் திறன், சிறப்பான தலைமைத்துவம் ஆகியவற்றின் மூலம், பாடசாலை மட்டத்தில் நடைபெறும் மூன்று முக்கிய போட்டித் தொடர்களிலும் அந்த வருடம் கிங்க்ஸ்வூட் கல்லூரி அணி வெற்றி பெறுவதற்கு பெரும் பங்களிப்பாற்றியிருந்தார்.

இளவயதிலேயே இவர் வெளிப்படுத்திய அபார திறமை காரணமாக, 2003 ஆம் ஆண்டில் 17 வயது பாடசாலை மாணவனாக இருந்த பொழுதே, இலங்கை ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரிய வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார். இலங்கை தேசிய அணி சார்பில் விளையாடிய வயதில் குறைந்த வீரர் என்கின்ற பெருமையும் இவரையே சாரும்.

2004 ஆம் ஆண்டுமுதல் கண்டி விளையாட்டுக் கழக அணியை பிரதிநிதித்துவப் படுத்தி விளையாடிவரும் இவர், 2010 ஆம் ஆண்டு கண்டி அணிக்குத் தலைமை தாங்கியதுடன், இரண்டாவது தடவையாக, நவம்பர் மாதம் மூன்றாம் வாரம் ஆரம்பமாகவுள்ள 2015/ 16 பருவகாலத்திற்கான கண்டி அணியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

7s அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாஸில் மரிஜா, இலங்கை ரக்பியின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு பொருத்தமான இளம் வீரரொருவருக்கு அந்தப் பதவி வழங்கப்படும் விதமாகவே தனது பதவி விலகல் அமைந்திருப்பதாகவும், தொடர்ந்தும் இலங்கை 7s அணி சார்பில் ஒரு வீரராக விளையாட தயாராகவே இருப்பதகாவும் குறிப்பிட்டுள்ளார்.

இவர், ஆசியாவில் உள்ள மிகச் சிறந்த Fly Half வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.